அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணைய இணைப்புகளில் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் தற்போது பயன்படுத்தும் இணைய பக்கங்கள், பல சர்வரில் இருந்தும் தனி தனியாக இயக்கப்பட்டு இருக்கிறது. இந்த சர்வரில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக அவ்வப்போது இணைப்பில் ஏதாவது தடங்கல்கள் உருவாகும்.
இதை எல்லாம் தடுக்கும் வகையில் உலகம் முழுக்க இந்த சர்வர்களிலும், டொமைன் நேம் சிஸ்டம்களிலும் பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மட்டும் இணைய இணைப்பில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதற்கான முதல் அறிவிப்பை ரஷ்ய அரசுதான் வெளியிட்டது. அதன்படி ரஷ்யா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய இணைப்பில் பிரச்சனை இருக்கும். சமயங்களில் இணைப்பு மொத்தமாக ஷாட் டவுன் ஆக கூட வாய்ப்புள்ளது. மக்கள் இதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி இன்னும் 48 மணி நேரத்திற்கு ''தி இண்டர்நெட் கார்ப்பரேஷன் ஆப் அசைன்ட் நேம்ஸ் அண்ட் நம்பர்ஸ் ( The Internet Corporation of Assigned Names and Numbers) இணையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. இணையத்தில் உள்ள Domain Name System எனப்படும் டிஎன்எஸ் பக்கங்களை அப்டேட் செய்ய உள்ளது. அதாவது இதுதான் இணையத்தின் அட்ரஸ் புக் என்று கூட சொல்லலாம். இதைதான் அப்டேட் செய்கிறார்கள்.
இதில் உள்ள கிரிப்டோகிராபிக் கீ (cryptographic key) என்ற வசதிதான் நாம் இணையத்தில் பாதுகாப்பாக உலவவும், மக்களின் இணையம் பக்கங்களையும், அதன் பெயர்களையும் பாதுகாக்க உதவுகிறது. இந்த கிரிப்டோகிராபிக் கீயில்தான் தற்போது அப்டேட் செய்ய இருக்கிறார்கள். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
பாலும் சுத்துதே சுத்துதே 4ஜி என்று சொல்லும் அளவிற்கு இணையம் சுற்றிக்கொண்டு மெதுவாக இருக்க வாய்ப்புள்ளது. இல்லையென்றால் மொத்தமாக இணையம் வேலை செய்யாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதற்கு இணையத்தை ஒவ்வொரு பகுதிகளிலும் வழக்கும் ''இண்டர்நெட் சர்விஸ் புரொவைடர்கள் (internet service provider) '' தயாராக இருந்தால் பிரச்சனையை சமாளிக்கலாம் என்கிறார்கள்.