JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

காவிரி விவகாரம் : தமிழகத்தை ஏமாற்றுகிறதா மத்திய அரசு ?

காவிரி பிரச்னையில் பிப்ரவரி 16ல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் 'தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசிக்க, நேற்றைக்கு டில்லி வரும்படி, தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளுக்கு, மத்திய நீர்வளத்துறை அழைப்பு விடுத்தது. மத்திய அரசின் அழைப்பை, நான்கு மாநிலங்களும் ஏற்றன. அதன்படி, நேற்று டில்லியில் மத்திய நீர்வளத்துறை செயலர் உபயேந்திர பிரசாத் சிங் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது.

தமிழக அரசு சார்பில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர், சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். கர்நாடக அரசு சார்பில், அம்மாநில தலைமை செயலர், ரத்ன பிரபா தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர். அதேபோல், கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர்முறைப்படுத்தும் குழுவை, ஆறு வாரத்திற்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும்' என, தமிழக அரசு சார்பில், கறாராக தெரிவிக்கப்பட்டது.

மேலும், காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர், முறையாக கிடைக்க வேண்டும். அதை உறுதி செய்யவும், காவிரி நடுவர் மன்றத்தின் ஆணைகளை திறம்பட செயல்படுத்தவும், அனைத்து அதிகாரங்களுடன் கூடிய, காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைப்பது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பின், மத்திய நீர்வளத்துறை செயலர், உபேந்திர பிரசாத் சிங் கூறுகையில், ''காவிரி வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளோம். மேலாண்மை வாரியம் என்ற விஷயத்தை, உச்ச நீதிமன்றம் கூறவில்லை. திட்டம் என்று மட்டுமே கூறியுள்ளது. உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த காலத்திற்குள், காவிரி நதி நீர் தொடர்பான செயல் திட்டம் உருவாக்கப்படும். அது, காவிரி மேலாண்மை வாரியமாகவும் இருக்கலாம்,'' என்றார்.

டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமை செயலர் மற்றும் அதிகாரிகள், உடனடியாக சென்னை திரும்பினர். இன்று மதியம் 1:00 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து கூட்ட விபரங்களை தெரிவிக்க உள்ளனர். அப்போது, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

Read 82 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…