JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

திருவாரூர் தொகுதி : வேட்பாளரை தேர்வு செய்வதில் அதிமுக திணறல்

 திருவாரூர் தொகுதியில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார் என்பது பெரும் சஸ்பென்ஸ் ஆக மாறியுள்ளது. வழக்கத்திற்கு விரோதமாக அதிமுக படு அமைதி காத்து வருகிறது. வேட்பாளர் நேர்காணலை இன்று நடத்தியும் கூட வேட்பாளரை அது தேர்வு செய்யவில்லை.

திருவாரூர் தொகுதிக்கான வேட்பாளர்கள் ஒவ்வொருவராக அறிவிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளராக ஷாகுல் அமீதை அறிவித்தது. அடுத்து தினகரன் தனது வேட்பாளராக எஸ். கனகராஜை அறிவித்தார். நேற்று மாலையில் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டார்.

ஆளுங்கட்சியான அதிமுக மட்டும்தான் இதுவரை தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. இது சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் அதிமுக ஆட்சி மன்றக் குழு கூடி நேர்காணலில் ஈடுபட்டது.

திருவாரூரில் போட்டியிட சீட் கேட்டு மொத்தம் 52 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். அவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அடங்கிய ஆட்சி மன்றக் குழு நேர்காணல் நடத்தியது.

இந்த நிலையில் திருவாரூர் வேட்பாளராக மலர்விழி கலியபெருமாள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஒரு ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல் வெளியானது. இவர் தற்போது திருவாரூர் நகர அம்மா பேரவை செயலாளராக உள்ள கலியபெருமாளின் மனைவி ஆவார். இந்த சூழலில் ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளரை முடிவு செய்வதற்கான வேட்பாளர் நேர்காணல் இன்று நடந்தது. இதில் மொத்தம் 52 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 45 பேர் கலந்து கொண்டனர். 7 பேர் வரவில்லை. இருப்பினும் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவர்களை ஆதரிப்பதாக அவர்கள் கடிதம் கொடுத்திருந்தனர்.

நேர்காணல் முடிவடைந்துள்ளது. அடுத்து ஓரிரு நாட்களில் வேட்பாளரை தேர்வு செய்து முறைப்படி அறிவிப்போம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், இடைத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிப்போம் என்றார்.

Read 125 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…