JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

அயிரை மீனும் திருட்டு ரயிலும் : ஸ்டாலின் தினகரன் மோதல்

நேற்று திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியனாதும் கோபப்பட்ட தினகரன் அதிமுகவை கண்டிக்காமல் திமுக இடைத்தேர்தல் விவகாரத்தில் கூட்டு சேர்ந்துள்ளது. திமுக தேர்தலுக்கு அஞ்சுவதால்தான் இப்படி செய்கிறது என விமர்சித்தார். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முரசொலி பேஸ்புக் பக்கத்தில் டிடிவி தினகரனி லெஃப்ட் ரைட் வாங்கி பெரிய கட்டுரை ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த பலவற்றில் சில உங்களது கவனத்திற்கு... மானத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆயிரம் பேருடன் கூட விவாதிக் கலாம். மானத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரே ஒரு ஆளுடன் கூட விவாதிக்க முடியாது என்றார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார். இதில் டி.டி.வி. தினகரன் இரண்டாவது ரகம்!

சித்தி, சிறையில் இருக்கிறார். தம்பி சிறையில் இருக்கிறார்.

அத்தை சிறையில் இருக்கிறார். அதுவும் தமிழ்நாட்டு சிறையில் அல்ல. வெளி மாநிலத்தில் கர்நாடக மாநிலத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்துக்கான காவிரி உரிமையை மீட்பதற்காக கர்நாடகா சென்று கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படவில்லை அவர்கள்.

ஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைத்து சசிகலா குடும்பம் சுரண்டிக் கொழுத்தது சட்ட பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையில்தான் அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். இதில் மயிரிழையில் தப்பியவர் டி.டி.வி. தினகரன்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 20 ரூபாய் நோட்டையே டோக்கனாகக் கொடுத்தார் தினகரன் என்றும், இந்த டோக்கன் வாங்கியவர்களுக்கு பின்னர் பணம் வந்து சேரவில்லை என்றும், தினகரன் தொகுதிக்குள் வந்தபோது 20 ரூபாய் நோட்டோடு பெண்கள் வந்ததும், இன்னும் சிலர் தினகரன் வீட்டை நோக்கியே வந்ததும், அதனாலேயே ஆர்.கே.நகருக்கு வராமலேயே தினகரன் தவிர்ப்பதும் ஊர் அறிந்த ரகசியங்கள்.

இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 420-ன்படி பல்வேறு மோசடிகளில் சிக்கி - இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 120 (1) பிரிவின்படி பல்வேறு குற்றவியல் சதிகளைச் செய்து - ஆர்.கே. நகர் தொகுதி மக்களை 20 ரூபாய் நோட்டைக் கொடுத்து ஏமாற்றிய டி.டி.வி. தினகரன் சொல்கிறார், "தேர்தலைப் பார்த்து தி.மு.க. பயப் படுகிறது' என்று.

கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆன சில்லறைகளுக்கு சிகரங்களைப் பற்றி என்ன தெரியும்? நீயே அயிரை மீன். உனக்கு ஏன் விலாங்குச் சேட்டை? என இந்த பதிவு முடிகிறது.

தினகரன் பதிலடி

இதுகுறித்து தினகரன் கூறியிருப்பதாவது:

கட்சியை, மக்களைக்காக்க பொதுத்தொண்டுக்கு வந்திருக்கிறேன் என்று எவனாவது சொன்னால் நம்பாதே, அவனது இன்றைய நிலையை ஆராய்ந்து பார், அவன் தியாகியா அல்லது தகுதியைத் தாண்டிய செல்வந்தனா என்பது புரியும். அதிலும் தன் குடும்பம்,பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அவன் சுயநலப் புலிதான் என்றார் பெரியார்.

திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்த பாரம்பரியத்திலிருந்து வந்து, இன்றைக்கு ஆசியப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் ஸ்டாலின் தான் அந்த சுயநலப் புலி! லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் உருவான பல நூறு கோடி மதிப்புள்ள முரசொலி அறக்கட்டளைக்கு தனது மகனை அறங்காவலராக நியமித்த யோக்கியர் ஸ்டாலினைப் பற்றித்தான் 55 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இப்படிச் சொன்னார் போலும்.

லட்சம் கோடி மதிப்பிலான 2ஜி ஊழல் வழக்கில் தனது தங்கையை, தாயை சிறைக்கும் விசாரணைக்கும் அனுப்பி வைத்த இந்த சுயநலப்புலிதான் இன்று மற்றவர்களின் தரம் பற்றி பேசுகிறது.

பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும் அரா மீனைப் போல, தேர்தலுக்கான கூட்டணிக்கு காங்கிரஸ்; தேர்தலுக்குப் பிறகான கூட்டணிக்கு பி.ஜே.பி. என வேஷமிடும் அரா மீன் ஸ்டாலின், அயிரை மீனைப் பார்த்து பயந்து பதுங்குவது ஏன்..?

இவ்வாறு டிடிவி தினகரன் கூறியிருப்பதால் வரும் தேர்தலில் திமுக, தினகரன் அணிகளுக்கு இடையேதான் உண்மையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read 93 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…