JoomlaLock.com All4Share.net

Background Video

அரசியல்

ராஜிநாமா முடிவில் மாற்றமில்லை: ராகுல் திட்டவட்டம்

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் மாற்றமில்லை என்றும், அதிலிருந்து தான் பின்வாங்கப்போவதில்லை என்றும் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை திட்டவட்டமாகக் கூறியுள்ளார். 
தில்லியில் ராகுல் காந்தியை, ஹரியாணா மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, ராகுல் காந்தி தனது ராஜிநாமா முடிவை மாற்றிக்கொண்டு, கட்சித் தலைமை பொறுப்பை மீண்டும் ஏற்க வேண்டும் என்று ஹரியாணா தலைவர்கள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். 
அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முழுமையாகப் பொறுப்பேற்கும் வகையிலேயே தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளேன். மற்றவர்களையும் அவ்வாறு ராஜிநாமா செய்யுமாறு என்னால் கூற இயலாது. 
கட்சியின் தோல்விக்காக எவரேனும் பொறுப்பேற்க விரும்பினால், அந்த முடிவை அவர்களாக மேற்கொள்ளலாம். எனது ராஜிநாமா முடிவிலிருந்து நான் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். 
ஹரியாணாவில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதுதொடர்பாக கட்சியின் வியூகம் குறித்து ராகுல் காந்தியிடம் ஹரியாணா தலைவர்கள் கேட்டுள்ளனர். எனினும், பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஹரியாணா காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்குள்ளாக கலந்தாலோசித்துக்கொள்ளுமாறு ராகுல் காந்தி வெறுமனே கூறியுள்ளார். அவரது இந்த கருத்தால் ஹரியாணா காங்கிரஸ் தலைவர்கள் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர். 
ராகுல் காந்தியை பின்னர் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியதாகக் கூறிய அவர்கள், ஹரியாணா காங்கிரஸுக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக விரைவில் கட்சி முடிவெடுக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தனர். 
தற்போது ஹரியாணா காங்கிரஸ் தலைவராக இருக்கும் அசோக் தன்வாரின் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டபோதிலும், அவரே தலைவராக தொடர்ந்து நீடித்து வருகிறார். மக்களவைத் தேர்தலில் ஹரியாணாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றவில்லை. 
ராகுல் காந்தியை ஹரியாணா காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசியபோது, காங்கிரஸ் பொதுச் செயலர் (பொறுப்பு) குலாம் நபி ஆஸாத், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் ஆகியோர் உடனிருந்தனர். 
முன்னதாக, தனது ராஜிநாமா முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என காங்கிரஸ் மக்களவை எம்.பி. க்களிடமும் ராகுல் காந்தி புதன்கிழமை உறுதிபடத் தெரிவித்திருந்தார். 
நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். 
அவரது அந்த முடிவை மாற்ற கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் முயற்சித்தபோதும் ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்து வருகிறார்.

Read 45 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…