வரும், 2021ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 234 தொகுதிகளில், 180 - 200 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடவும், மீதமுள்ள தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்கவும், அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதனால், காங்கிரசின் தொகுதி பேரத்தை குறைப்பதற்காகவும், மத்திய அரசின் ஆதரவை பெறுவதற்காகவும், காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரசை, ம.தி.மு.க., சீண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், தி.மு.க., இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மசோ தாவை எதிர்த்து, ராஜ்யசபாவில், காங்கிரஸ் எம்.பி.,க்களும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர். ம.தி.மு.க., பொதுச்செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான வைகோ, எதிர்க்கட்சி எம்.பி.,க்களோடு சேர்ந்து, மசோதாவை எதிர்த்து முழக்கம் எழுப்பினார். விருப்பம் பின், தன் இருக்கைக்கு சென்ற வைகோ, 'நான், காங்கிரஸ் கட்சியோடு மாறுபடுகிறேன்; பேச அனுமதி அளிக்க வேண்டும்' என கேட்டார். மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா எழுந்து, 'வைகோவை பேச அனுமதியுங்கள்; அவர் கருத்தை, நாங்களும் கேட்க விரும்புகிறோம்' என்றார். அப்போது, வைகோ பேசியதாவது: காஷ்மீர் மக்களிடம், பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என, நேரு உறுதிமொழி அளித்தார்.
ஆனால், காஷ்மீர் மக்களின் தலைவரான ஷேக் அப்துல்லாவை, 1950களில் கைது செய்து, கொடைக்கானலில் சிறை வைத்தது, வரலாற்று பிழை. அப்போது, 'காங்கிரஸ் கட்சியின் அரசியல் அகராதியில், நட்பு, நன்றி என்ற, இரண்டு சொற்களுக்கும் இடம் இல்லை' என, என்னிடம், ஷேக் அப்துல்லா கூறினார். பின், அவரது கட்சி, காங்கிரசுடன் கூட்டணி வைத்தபோது, அந்த வார்த்தைகளை நினைவு படுத்தினேன். அதன் விளைவாக, ஒரு நாள் காலை, முதல்வர் பரூக் அப்துல்லா, டீ அருந்திக் கொண்டிருந்தபோது, அவரது ஆட்சியை, மத்திய காங்கிரஸ் அரசு கவிழ்த்தது என்ற, செய்தி வந்தது.
காங்கிரஸ் கட்சி தான், காஷ்மீர் மக்களின் தலைவிதியோடு மோசடி நாடகம் நடத்தியது. காஷ்மீர் பிரச்னை இப்படி வெடிப்பதற்கே, காங்கிரஸ் கட்சி தான் காரணம். நேரு, தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.
வைகோவின் இந்த பேச்சுக்கு, தமிழக காங்., தலைவர் அழகிரி, பதிலடி கொடுத்தார். சென்னை, சத்தியமூர்த்தி பவனில், 6ம் தேதி, நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: காஷ்மீர் மக்களின் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லா, 'எந்த சூழலிலும், பாகிஸ்தானோடு இணைய மாட்டோம். மதசார்பற்ற கொள்கையை பின்பற்றுகிற, இந்தியாவோடு தான் இணைவோம்' என கூறியதை, எவரும் மறுக்க முடியாது.
ஹிந்து சமஸ்தானங்களும், 'இந்தியாவோடு தான் இணைவோம்' என, கூறியதையும், எவரும் மறக்க முடியாது. ஹிந்து சமஸ்தானங்களை விட, பாகிஸ்தானை ஒட்டியுள்ள, முஸ்லிம் மக்கள் பெருமளவில் வாழ்கிற காஷ்மீர், இந்தியாவோடு இணைந்தது தான் மிகுந்த சிறப்புக்குரியது.இதை செய்த பெருமை நேருவுக்கும், ஷேக் அப்துல்லாவுக்கும் உண்டு. இவ்வாறு, அவர் கூறினார். விரிசல் இப்படி, இருவரும், மாறி மாறி அறிக்கையும், பேட்டியும் அளித்து வந்துள்ளதால், ம.தி.மு.க., - காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வைகோவின் காங்கிரஸ் தாக்குதல் பேச்சுக்கு பின்னணியில், ஸ்டாலின் உள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: வரும், 2021 சட்டசபை தேர்தலில், தற்போது, காங்கிரஸ் கட்சிக்கு, எட்டு எம்.பி.,க்கள் இருப்பதால், சட்ட சபை தொகுதிக்கு, தலா, ஆறு வீதம், மொத்தம், 48 தொகுதிகளை கேட்டு, பேரம் பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் பேரத்தை குறைப்பதற்காக, ம.தி.மு.க.,வை துருப்புச்சீட்டாக, ஸ்டாலின் பயன்படுத்துகிறார். தி.மு.க.,வுக்கு, 180 - 200 தொகுதிகளை எடுத்து கொண்டு, மீதமுள்ள தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க, ஸ்டாலின் திட்டமிடுகிறார்.
அதற்காக, தற்போது, காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில், வைகோ வாயிலாக, ஸ்டாலின் காய் நகர்த்துகிறார். அதனால் தான், அக்கட்சியை, காஷ்மீர் விவகாரத்தில் இழுத்துள்ளனர். மேலும், 2021 சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., ஆட்சி அமைந்தால், அதற்கு, மத்திய அரசின் ஆதரவு தேவைப்படும். அதனால் தான், 'பா.ஜ.,வினர், எங்களுடைய இனிமையான எதிரிகள்' என, தி.மு.க., முதன்மை செயலர், டி.ஆர்.பாலு கூறியுள்ளார். இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.
அரசியல்
காங்கிரஸ் வைகோ மோதல் : பின்னணியில் ஸ்டாலின் Featured
- Post by Super User
- - ஆக 10, 2019
- - 0

Tagged under
Leave a comment
Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.