ஆர்.கே.நகர் தொகுதியில் த.மா.கா போட்டியிடாமல் புறக்கணித்திருந்தது. அந்த கட்சியின் ஆதரவை பெறுவதற்காக ஓ. பன்னீர்செல் வம் ஆழ்வார்பேட்டை யில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டுக்கு சென்றார். அவரை ஜி.கே.வாசன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அதை தொடர்ந்து இரு கட்சி தலைவர்களும் சுமார் அரை மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.அப்போது ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு த.மா.கா ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த பேச்சு வார்த்தையில் ஓ. பன்னீர்செல்வத்துடன் வேட்பாளர் மதுசூதனன், மா.பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை, நத்தம் விசுவநாதன், கே.பி. முனுசாமி ஆகியோரும் சென் றனர்.
ஜி.கே.வாசனுடன் ஞானதேசிகன், கோவை தங்கம், என்.எஸ்.வி. சித்தன், விடியல் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் ஓ. பன்னீர் செல்வமும், ஜி.கே.வாசனும் ஒரே காரில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர் செல்வம் வீட்டுக்கு சென்றனர். அங்கு இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
ஜி.கே.வாசன் கூறியதாவது:-
அம்மாவின் அன்பையும் மரியாதையையும் பெற்றவர் ஓ. பன்னீர்செல்வம் .அவரது தர்மயுத்தத்துக்கு உறுதுணையாக த.மா.கா செயல்படும்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் த.மா.காவுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி இருந்தேன். ஆனால் ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு என்னிடம் ஆதரவு கேட்டனர்.
நான் சுற்று பயணம் செய்யும் போது பலர் ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு அளிக்கும் படி வலியுறுத்தினார்கள். ஓ. பன்னீர்செல்வத்தை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. அவர் ஒரு நல்ல மனிதர். நல்ல பண்பாளர். ஆர்ப்பாட்ட அரசியலுக்கு அப்பாற்பட்டவர். மக்கள் எண்ணங்களை பிரதி பலிக்கக்கூடியவர். மக்கள் மனநிலையை அறிந்து முடிவெடுப்பது மிக முக்கியமானது. அந்த வகையில் ஓ. பன்னீர்செல்வம் அணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
நாளை மறுநாள் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். அதே போன்று இறுதிநாள் பிரசாரத்திலும் பிற்பகல் 2 மணியளவில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்துடன் பிரசார பேரணியில் கலந்து கொள்வேன். இந்த கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி. மக்கள் எதிர்பார்த்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி கை கூட வில்லை. அதற்கு காரணம் சசிகலா என்கிறீர்கள். ஆனால் இன்றைய மக்கள் மன நிலைக்கு ஏற்ற வாறு இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது.
ஆர்.கே. நகரில் தேர்தல் விதிமீறல் நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பணநாயக முறைப்படி நடக்க கூடாது. ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.