JoomlaLock.com All4Share.net

Background Video

திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2018 00:00

ராகுலுக்கு ஐடியா தர அமெரிக்க நிபுணர் வருகை

லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை எப்படியாவது வெற்றி கொள்ள வேண்டும் என்ற நிலையில் காங்., உள்ளது. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த தேர்தல் நிபுணர் ஸ்டீவ் ஜார்டிங் என்பவருடன் காங்., தலைவர் ராகுல் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., கூட்டணி அரசை மத்தியில் இருந்து அகற்ற காங்., தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பா.ஜ.,வுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்க, பிரதமர் பதவியை கூட விட்டு கொடுக்க தயார் என்ற நிலைக்கு காங்., தள்ளப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் தான் காங்., தலைவர் ராகுல், சில மாதங்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். லண்டனில் முக்கிய நபர் ஒருவரை ராகுல் ரகசியமாக சந்தித்து பேசினார். அந்த நபரின் பெயர் ஸ்டீவ் ஜார்டிங். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். குறிப்பாக, தேர்தல் உத்திகளை உருவாக்குவதில் நிபுணர். இவரிடம் பல நாடுகளை சேர்ந்தவர்கள் பாடம் கற்றுள்ளனர். இவரைத் தான் ராகுல் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு காங்கிரசுக்கு தேர்தல் உத்திகளை அமைத்து கொடுக்க, ஸ்டீவ் ஜார்டிங் நியமிக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததால் தான் டிரம்ப் வெற்றி பெற்றதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஒரு நாட்டின் தேர்தல் விஷயத்தில் வெளிநாடு தலையீடு இருக்க கூடாது என்பது ஸ்டீவ் ஜார்டிங் கொள்கைகளில் ஒன்று. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, இந்த விஷயத்தை ஜார்டிங் கடுமையாக வலியுறுத்தினார். அவரே இந்திய தேர்தலில் தலையீடுவது நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், இந்தியாவை பொறுத்தவரை ஸ்டீவ் ஜார்டிங் புதியவர் அல்ல. 

2017ம் ஆண்டு நடந்த உ.பி., சட்டசபை தேர்தலில், சமாஜ்வாடி கட்சிக்கு உதவும் பணியில் ஜார்டிங் நியமிக்கப்பட்டார். அவர் பல்வேறு உத்திகளை சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு கூறினார். அந்த தேர்தலில், சமாஜ்வாடி - காங்., கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்படவும் ஜார்டிங் தலையீடு தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரசுக்கு உதவ ஸ்டீவ் ஜார்டிங் முன் வந்துள்ளார். அவர் அனேகமாக, ராகுலின் பிரசார உத்திகளை வகுப்பார் என்று தெரிய வந்துள்ளது. சிறு வயதில் இருந்து தான் சந்தித்த வேதனைகளை பிரசாரத்தின் போது ராகுல் முன் வைப்பார். இது, ஜார்டிங்கின் ஆலோசனைகளில் ஒன்று என கூறப்படுகிறது. 

இதுவிர, 'ஒரு தகவலை சிதறடிக்க வேண்டும் என்றால், அந்த தகவலை முன்னெடுத்து செல்பவரை சிதறடிக்க வேண்டும்; அப்போது தான் அந்த தகவல் தோற்கடிக்கப்படும்' என்பது ஸ்டீவ் ஜார்டிங்கின் முக்கிய பாடத்தில் ஒன்று. அது, இந்திய தேர்தலில் எடுபடுமா என்பதை போக போக தான் பார்க்க வேண்டும். 

இத்துடன் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வுடன் ஸ்டீவ் ஜார்டிங் ரகசிய தொடர்பு ஏற்படுத்தி, இந்திய தேர்தலில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஏற்படுத்தி விட மாட்டாரா என்ற கேள்வியை பா.ஜ., கேட்க துவங்கி உள்ளது. 

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…