JoomlaLock.com All4Share.net

Background Video

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018 00:00

திஹார் சிறையில் கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்திக்கு எதிரான, ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், அவரை, 13 நாள் நீதிமன்ற காவலில், திகார் சிறையில் அடைக்க, டில்லி சி.பி.ஐ., நீதிமன்றம், நேற்று உத்தரவு பிறப்பித்தது. 'சிறையில் அவருக்கு எந்த சிறப்பு வசதியும் அளிக்க முடியாது' என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற தனியார், 'டிவி' நிறுவனம், வெளிநாட்டில் இருந்து முதலீடுகளைப் பெறுவதற்கு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, விதிமுறைகளை மீறி ஒப்புதல் வழங்கப்பட்டதில் மோசடி நடந்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தியின் தலையீட்டால் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், இதற்காக லஞ்சம் பெற்றதாகவும், கார்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே, மகளைக் கொலை செய்து எரித்ததாக, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான, இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கார்த்திக்கு பணம் கொடுத்ததாக, சமீபத்தில் அளித்த வாக்குமூலத்தில் இந்திராணி முகர்ஜிதெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த மாதம், 28ல், கார்த்தி, சென்னை விமான நிலையில் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து, சி.பி.ஐ., விசாரித்தது. காவலுக்கான கெடு முடிந்ததையடுத்து, கார்த்தி, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.கார்த்தியை, 13 நாள் நீதிமன்ற காவலில், டில்லி, திகார் சிறையில் அடைக்க, சி.பி.ஐ., நீதிபதி, சுனில் ரானா உத்தரவிட்டார்.

இந்த வழக்கில், தேடப்படும் நபராக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை எதிர்த்து, சென்னை, உயர் நீதிமன்றத்தில், கார்த்தி தாக்கல் செய்த வழக்கில், இரு தரப்பு வாதங்களும், நேற்று முடிந்தன.இதையடுத்து, எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கார்த்தி தாக்கல் செய்த, ஜாமின் மனு தொடர்பாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் கூறியதாவது: கார்த்தி ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை, 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற புதிய மனுவை ஏற்க முடியாது; அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிமன்றம் கூறியது. ஜாமின் மனுவை, சி.பி.ஐ., நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், கார்த்தி சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…