மேகாலயா முன்னாள் முதல்வர் லபாங் காங்கிரசிலிருந்து திடீர் விலகல்
மேகாலயா மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், அங்கு நான்கு முறை முதல்வராக பதவி வகித்தவருமான டி.டி. லபாங் இன்று அக்கட்சியில் இருந்து விலகினார்.
மேகாலயா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. மொத்தமுள்ள 60 இடங்களில், காங்கிரஸ் 21 தொகுதிகள் வென்றது. அதிக இடங்களில் காங்கிரஸ் வென்றபோதும், பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
பாஜக மற்றும் மாநில கட்சிகளின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சியமைத்தது. மக்களவை முன்னாள் சபாநாயகர் பிஏ சங்மாவின் மகனும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா, முதல்வராக பதவியேற்றார். காங்கிரஸைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் அணி மாறினார்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த இரண்டு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலிலும், ஆளும் கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ் அடுத்தடுத்து நெருக்கடியை சந்தித்து. மேகலாயாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரையம் கட்சித் தலைமை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நபர்களை முன்னிலைப்படுத்தியதால் இந்த தோல்வி ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மூத்த தலைவர்கள் பலர் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்குரல் எழுப்பினர்.
இந்தநிலையில், மேகாலயா மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும், அங்கு நான்கு முறை முதல்வராக பதவி வகித்தவருமான டி.டி. லபாங் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
காங்கிரஸில் இருந்து விலகுவதாக கூறி அவர், கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளாளர். அதில் மிகுந்த மனவேதனையுடன், காங்கிரஸில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டி.டி. லபாங். அம்மாநில முதல்வராக நான்கு முறை பதவி வகித்த லபாங், 50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வந்தார். அவர் வேறு கட்சியில் சேரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது பதவி விலகல் காங்கிரஸூக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.