அரசியல் பிரவேசம் தொடர்பாக ரஜினிகாந்த்! 2 மாதங்கள் கழித்து மீண்டும் சந்திப்பேன்...
ரசிகர்களை 2 மாதங்கள் கழித்து மீண்டும் சந்திப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு ரஜினி காந்த் மௌனத்தையே பதிலாக அளித்தார். எனினும் ரசிகர்கள் தீபாவளி, பொங்கல், ரஜினி பிறந்தநாள் ஆகிய தினங்களில் போயஸ் தோட்ட இல்லத்தில் குவிவர்.
இதனிடையே ரஜினியின் 164- ஆவது படமான காலா கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக 10 நாள்கள் மும்பை தாராவி பகுதியில் நடந்த படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இன்னும் 2 மாதங்கள் கழித்து ரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பேன். வரும் 24-ஆம் தேதி காலா படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளன என்றார் அவர்.
மேலும் அரசியல் பிரவேசம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முற்பட்டபோது அதை சிரித்தபடியே தவிர்த்துவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலுவை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி நடவடிக்கை....
டில்லி:
ரூ1,000 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் இருந்து பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
1990-ம் ஆண்டு முதல் 1997 வரை பீகார் முதல்வராக லாலு இருந்தபோது மாட்டுத் தீவனம் வாங்கியதில் ரூ1000 கோடி ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.மாட்டுத் தீவன ஊழல்கள் தொடர்பாக அறுபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் யாதவ் மீது மட்டும் 5 வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இதில் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என 2013-ம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்து குற்றச்சாட்டுகளை ரத்து செய்தது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 20-ந் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது. லாலு பிரசாத் யாதவ் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.....
சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய அமைச்சர்கள்... ராமதாஸ் கேள்வி?
சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தலைமைச் செயலாளர் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மணல் மாபியா சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருப்பதாகவும், இதுகுறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சேகர் ரெட்டியின் டையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் அமைச்சர்களின் தனிச்செயலாளர்கள் ஆகியோரின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பியுள்ள வருமானவரித்துறை அக்குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்காணிப்புப் பிரிவைக் கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள் மீது வருமானவரித்துறையே ஆதாரங்களை அளித்து விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொண்ட பிறகும் இன்றும் விசாரணை நடத்தாமல் தாமதிப்பது சரியல்ல என குறிப்பிட்டுள்ளார்.
எனவே சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தலைமைச் செயலாளர் வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் மீது விசாரணைக்கும் ஆணையிட வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கைதாகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்! 3 துறை அதிகாரிகள் ஆலோசனை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் மீதுதான் அதிக அளவில் புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு சென்றன.
அமைச்சர் விஜயபாஸ்கரை கண்காணித்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென கடந்த 7ஆம் தேதி ரெய்டு நடத்தினர். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதே நாளில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது, விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் மற்றும் அவரின் உறவினர்கள் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டன. சரத்குமார் வீட்டில் இருந்தும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் ஆர்கே.நகரில் ரூ. 89 கோடி வரை பணவரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. ஊடகங்களிலும் பட்டியல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதனையடுத்து வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது அதனை ஏற்று அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர், கடந்த 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பல மணி நேரம் நடந்த விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. 5 மணி நேரமாக நடந்த விசாரணையில் விஜயபாஸ்கர் சரியாக பதிலளிக்காததால் மீண்டும் விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
இதனிடையே சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உயரதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். விஜயபாஸ்கர் மீது மிகப்பெரிய அளவில் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கைதாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கலைஞர் திருவாரூர் பயணம்
சென்னையில் இருந்து ரெயில் மூலம் நேற்று இரவு தி.மு.க. தலைவர் கலைஞர் திருவாரூர் புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர் பேசுகிறார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், திருவாரூர் தொகுதியில் 2-வது முறையாக தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.
இந்த நிலையில், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் வருகிறார். இதற்காக, சென்னையில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று இரவு 11.15 மணிக்கு அவர் திருவாரூர் புறப்பட்டார்.
இன்று காலை திருவாரூர் வரும் தி.மு.க. தலைவர் கலைஞருக்கு ரெயில் நிலையத்தில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு கொடுக்கின்றனர். பின்னர், அவர் சன்னதி தெருவில் உள்ள சகோதரியின் வீட்டில் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
காலை 10 மணிக்கு திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில், தி.மு.க. மாநில இலக்கிய அணி அமைப்பாளர் கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில், தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்துகொள்கிறார். மாலை 4 மணிக்கு, தி.மு.க. மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் 'திண்டுக்கல்' ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.
மாலை 6 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்துகொண்டு பேசுகிறார். அப்போது அவர், சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.