JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக காங்கிரஸ் கிமிட்டி தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளதை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதை குறித்து கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. வெளிநாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய ராகுல் காந்தி, இது தொடர்பாக தமிழக தலைவர்களை அழைத்து கருத்துக்களை கேட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை குறி வைத்துள்ள செல்வகுமார், ஜெயகுமார், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வசந்தகுமார், விஜயதாரணி ஆகியோரை தனித்தனியாக அழைத்து ராகுல்காந்தி பேசியுள்ளார். அப்போது புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும் அவருக்கு பிற நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுதர்ஷன் நாச்சியப்பன், திருநாவுக்கரசர், மாணிக் தாகூர், கோபிநாத் ஆகியோரை அழைத்து பேசிய ராகுல், மேலும் சிலரின் கருத்துக்களை கேட்க முடிவு செய்துள்ளார். ஆலோசனை தீவிரமடைந்துள்ளதால் விரைவில் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published in அரசியல்

இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் இரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் கடுமையாக நோன்பிருந்து பசித் துன்பம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து, ஏழை எளியோர் பால் இரக்கம் கொண்டு, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.

அன்பை, அடக்க உணர்வை, எளிமையைப் போதித்த அண்ணல் நபிகள் பெருமான், பொய்மைக் கோலம் கொண்டு புகழ்ந்துரைத்தவர்களிடம், "எனது கல்லறையை அலங்காரம் செய்யாதீர்கள்; என்னை இறைவனாக ஆக்கி விடாதீர்கள்; எனக்கு முன்னாள் வாழ்ந்த நபிமார்களை அப்படி ஆக்கி விட்டார்கள்; உலர்ந்த ரொட்டித் துண்டுகளையும், காய்ந்த பேரீச்சம் பழங்களையும் உண்டு வாழ்ந்த ஓர் ஏழைப் பெண்ணின் மகன் என்று கூறுவதில் நான் பெருமையடைகிறேன்" என்று மொழிந்தவர்.

உழைப்பை மதித்திடும் உணர்வை விதைத்த நபிகள் நாயகம், "தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு; அநீதி செய்யும் மன்னனை எதிர்த்துப் போராடு; உணவு தானியங்களைப் பதுக்கி வைத்துச் செயற்கைப் பஞ்சத்தை ஏற்படுத்தாதே; அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே; உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு" எனப் போதித்து மனித நேயம் வளர்க்க வழிகாட்டியவர்.

அதேநேரத்தில் ஆதிக்க உணர்வோடு அகங்காரம், ஆணவம் கொண்டவர்களை வெறுத்து, "இனத்திமிரை, ஜாதித் திமிரை, நிறத் திமிரை, குலத் திமிரை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்" என்று சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னத லட்சியங்களுக்காக வீரமுழக்கமிட்டவர்.

அதனால்தான், திராவிட முன்னேற்றக் கழகம் நபிகள் நாயகத்தின் கோட்பாடுகளைப் பெரிதும் மதித்து வந்துள்ளது. அத்தகைய பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து கொண்டு, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, இரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன் என்று கூறியுள்ளார்

Published in அரசியல்

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி கொளத்தூரில் 1300 இஸ்லாமியர்களுக்கு ஸ்டாலின் நலத்திட்ட உதவி அளித்துவருகிறார். மேலும் 25 மாணவர்களுக்கு தலா ரூ.5000 கல்வி உதவித் தொகையை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Published in அரசியல்

கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அந்த பணம் என்ன ஆனது என கேட்டு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்ட செயலாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க மாவட்ட செயலாளர்கள் 10 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு வெளியேறினார்கள். தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு 50க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், மேலும் 14 மாவட்ட செயலாளர்கள் தற்போது விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். கட்சி தொடங்கியது முதல் இதுவரையில் நடந்த முக்கிய சம்பவங்களை குறிப்பிட்டு பகிரங்கமாக கடிதம் எழுதி விஜயகாந்துக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில் கூறியதாவது:

''உங்களை சினிமாவில் பார்த்தும், நீங்கள் பேசிய வசனங்களையும் நம்பித்தான் நாங்கள் ரசிகர்கள் ஆனோம். மன்றத்தில் உங்களோடு இருந்தவர்கள் ஆகட்டும் அல்லது தே.மு.தி.க ஆரம்பித்த பிறகு கட்சியில் சேர்ந்தவர்கள் ஆகட்டும், யாருமே உங்களை சினிமாவில் ரசிக்காமல் உங்களோடு இணையவில்லை.

கேப்டன் என்கிற தனி நபரை நம்பி மட்டுமே உங்களோடு இணைந்தோம். ஆனால் தற்போது ஒரு சிலரை நம்பித்தான் நீங்களே இருக்கிறீர்கள் என்று எண்ணும்போது நாங்கள் உங்களோடு இருக்க முடியாது என்பது தெரிகிறது.

தேமுதிக பற்றி பேச வைகோ யார்? வேட்பாளர் பட்டியல் நாளை வெளிவரும் என்று சொல்ல திருமாவளவன் யார்? கேப்டன் தப்பு செய்தால் விடமாட்டோம் என சொல்வதற்கு வாசனும், ராமகிருஷ்ணனும், முத்தரசனும் யார்? அப்படியானால் அவர்கள் கட்டுப்பாட்டிலா தேமுதிக இருக்கிறது.

2005-இல் கட்சி ஆரம்பிக்கும்போது மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் இருந்தார்கள். தற்போது அதில் யார் மாவட்ட செயலாளராக இருக்கிறார்கள். கடந்த 11 ஆண்டில் தேமுதிக என்ற மாபெரும் கட்சியை காலியாக்கி விட்டீர்கள்.

சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தேமுதிக மாநாடு நடத்துங்கள். நான் பணம் தருகிறேன் என்று கூறினீர்கள். ஆனால் மாநாடு முடிந்த பின்பு நீங்கள் எந்த மாவட்டத்திற்கும் மாநாடு நடத்தியதற்கான பணத்தை கொடுக்கவில்லை.

உங்கள் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடித்ததற்கு நஷ்ட ஈடாக 9 கோடி வாங்கினீர்கள். அண்ணியின் பிடிவாதத்தால் ஆட்சியில் இருந்த தி.மு.க. வை எதிர்த்தீர்கள். நாங்களும் காரணமே இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு திமுகவை எதிர்த்தோம்.

உங்கள் சுயநலத்திற்காக 10 வருடமாக திமுகவையும், அ.தி.மு.க வையும் நாங்களும் எதிர்த்தோம். 2016-இல் வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்த கதையாக திமுகவோடு கூட்டணி சேர போகிறோம் என்று சொல்லிவிட்டு மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்தீர்கள்.

ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து அகற்ற போகிறேன் என்று சொல்லிவிட்டு அதே ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர மிகப் பெரிய உதவி செய்தீர்கள். 2005 முதல் 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது? கட்சி பெயரில் டிரஸட் உள்ளது. ஆனால் கட்சிக்கும், டிரஸ்டிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது எங்களுக்கு தெரியும்.

தே.மு.தி.க டிரஸ்ட் என கட்சி பெயரை வைத்துக் கொண்டு, கட்சிக்கு வருகின்ற நன்கொடைகளை எல்லாம் இந்த டிரஸ்ட் பெயரில்தான் வாங்குகிறீர்கள். அந்த டிரஸ்டில் நீங்கள், அண்ணி, சுதீஷ் என மூன்று பேர் மட்டும் தான் இருக்கிறீர்கள். அதுவும் எங்களுக்கு தெரியும்.

கட்சி மாநாடு, மக்களுக்காக மக்கள் பணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தையும் நாங்கள் எங்கள் சொந்த செலவில் செய்தோம். என்றாவது ஒரு நாள் யாராவது ஒரு மாவட்ட செயலாளரையாவது அழைத்து செலவிற்கு என்ன செய்கிறீர்க்ள என்று கேட்டு இருக்கிறீர்களா?.

தே.மு.தி.க கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை ஆனால் நீங்க உங்கள் குடும்பத்தினக்குத்தான் லாபம். உங்கள் மனைவி எடுத்த தவறான முடிவால் கட்சியே காணாமல் போய்விட்டது.

உங்களுக்கு பல ஆண்டு காலம் உழைத்த எங்களைப் பற்றி கவலைப்பாடாமல் உங்கள் குடுபத்தினருக்காக எடுத்த முடிவின் விளைவு 10.5 சதவீதமாக இருந்த வாக்கு 2.5 சதவீதமாகி போனது. தி.மு.க வுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று நீங்கள் உங்கள் மனதில் இருந்ததை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர்கள்.

இத்தகை பெரிய செயலுக்கு பிறகும் நாங்கள் மாவட்ட செயலாளாக தேமுதிகவில் இருக்க வேண்டுமா? நீங்களே தே.மு.தி.க கட்சியை கலைத்து விட்டு எங்களை பிழைக்க விடுங்கள். உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Published in அரசியல்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…