JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நமக்கு பிடித்த டிவி சேனல்களை பார்க்கும் திட்டத்தில் குறைந்த அளவு 100 சேனல்களுக்கு ரூ 153 என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டிராய் அறிவித்துள்ளது.
 
பயனாளர்கள் தற்போது தமக்கு தேவைப்படும் சில சேனல்களுடன் தேவைப்படாத சேனல்களுக்காகவும் கட்டணம் செலுத்திவருகின்றனர்.
 
இனிமேல் தேவைப்படுகிற சேனல்களுக்கு மாத்திரம் கட்டணம் செலுத்தி பார்த்துக் கொள்ளலாம் என டிராய் கூறியுள்ளது.
 
இதனடிப்படையில் பயனாளர்களுக்கு விருப்பமான சேனல்கள் அட்டவணையை கேபிள் டிவி அல்லது டிடிஎச் வழங்கும் நிறுவனத்திடம் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வழங்கும் படி கூறியது.
 
இதனையடுத்து குறைந்த பட்ச கட்டணம் உள்ளிட்ட சில விபரங்களையும் டிராய் அறிவித்தது. இந்நிலையில் டிவி சேனல்களை பார்க்கும் திட்டத்தின்படி குறைந்த பட்சம் 100 சேனல்களுக்கு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த அறிவிப்பு வரும் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் பயனாளர்கள் குறைந்த பட்சம் 100 சேனல்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இது இலவச சேனல்களாகவும் இருக்கலாம் அல்லது கட்டண சேனல்களாகவும் இருக்கலாம். ஆனால் இந்த குறைந்த பட்ச கட்டணத்தின் அடிப்படையில் எச்டி தொழில்நுட்ப சேனல்களை தேர்ந்தெடுக்க முடியாது.
 
எச்டி சேனல்கள் வேண்டுமானால் அதற்குரிய கட்டணத்தைசெலுத்தி பெற்றுக்கொள்ளமுடியும். ஒரு சேனலுக்கு அதிக பட்சமாக மாதத்துக்கு 19 ரூபாய்க்கு மேல் இருக்காது என்று அறிவித்துள்ளது

 உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், பிரசித்தி பெற்ற கும்பமேளா, இன்று(ஜன.,15) துவங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்த, லட்சக்கணக்கான பக்தர்கள், புனித நீராடினர்.

உ.பி.,யில், அலகாபாத் என அழைக்கப்பட்ட, பிரயாக்ராஜில், கும்பமேளா விழா நடக்கிறது. பிரயாக்ராஜில், கடைசியாக, 2013ல் கும்பமேளா நடந்தது. அப்போது, 12 கோடி பேர், புனித நீராடினர். கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும், பிரயாக்ராஜில் உள்ள கும்ப நகரி பகுதியில், மகர சங்கராந்தியான, இன்று, கும்பமேளா விழா துவங்கியது. சிவராத்திரியான, மார்ச், 4ம் தேதி வரை, 50 நாட்களுக்கு, இந்த திரிவேணி சங்கமத்தில், பக்தர்கள் புனித நீராடுவர். இந்த ஆண்டு, 16 கோடி பேர் வருகைத் தருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

மகர சங்கராந்தியான இன்று, அதிகாலை, 4:00 மணிக்கு, புனித நீராடும் நிகழ்ச்சி துவங்கியது. சைவ, வைஷ்ணவ, உதாசின மற்றும் சீக்கியர்களுக்கான, 13 மடங்களைச் சேர்ந்த, சாதுக்கள், முதலில் புனித நீராடினர். அதைத் தொடர்ந்து, பக்தர்களும், புனித நீராடினர். கடும் பனிப்பொழிவில், ஐஸ் கட்டி போல் உறைந்திருந்த நதி நீரில், குளிரைப் பொருட்படுத்தாமல், பக்தர்கள் புனித நீராடினர். 'ஹர ஹர கங்கே' என்ற கோஷத்துடன், பக்தர்கள் புனித நீராடினர். உலகிலேயே, அதிகமானோர் கூடும், மத நிகழ்ச்சியாக, கும்பமேளா விளங்குகிறது.

கடும் குளிர் நிலவியபோதும், ஆடைகள் இல்லாமல், உடலில் சாம்பலை பூசியபடி, நாக சாதுக்கள் ஊர்வலமாக, நடனமாடி வந்ததை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கும்பமேளா விழாவுக்காக, 3,200 ஹெக்டேர் நிலப் பரப்புள்ள, கும்ப நகரி பகுதியில், மாநில அரசு பல்வேறு வசதிகளை செய்திருந்தது. மத்திய ஜவுளித் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்மிருதி இரானியும், இன்று புனித நீராடினார்.

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2019 00:00

கவிழும் அபாயத்தில் கர்நாடக அரசு

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமிக்கு ஆதரவாக இருந்த 2 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் இங்கு மதசார்பற்ற ஜனதாதளம் - காங்., கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கர்நாடகாவில், காங்கிரஸ், எம்.எல்.ஏ., க்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதாக, அந்த கட்சியினர் புகார் கூறி வந்தனர்.மேலும், வாரியங்கள், கார்ப்பரேஷன்கள் நியமனத்தில் இரு கட்சிகளுக்கிடையே தொடர்ந்து குழப்பமும், குளறுபடியும் நிலவி வருகின்றன.கர்நாடகாவில், மொத்தம் உள்ள, 28 லோக்சபா தொகுதிகளில், 12 தொகுதிகளை மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என, அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா தெரிவித்தார். இதற்கு, காங்., மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலும் சம்மதம் தெரிவித்தார். 

ஆனால், 'ஒருங்கிணைப்பு குழுவில் தான், தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும்' என, காங்., முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும், அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியடைந்துள்ளதால், அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 

இவர்களை தங்கள் பக்கம் இழுத்து, ஆட்சி அமைக்க, பா.ஜ., முயற்சித்து வருகிறது.இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டத்துக்காக டில்லி சென்ற, பா.ஜ., - எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், கூட்டம் முடிந்து இரண்டு நாட்களாகியும், அங்கேயே முகாமிட்டுள்ளனர். எம்.எல்.ஏ.,க்களை மும்பை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் குமாரசாமிக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் நாகேஷ், சங்கர் தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் பா.ஜ.,வுக்கு தங்களின் ஆதரவை அளிக்க போவதாக கூறியுள்ளனர். இதனால் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியநிலை வரலாம். மேலும் காங்., எம்.எல்.ஏ.,க்கள் சிலர் மறைமுக எதிர்ப்பை குமாரசாமிக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

கர்நாடகாவில் கடந்த ஒரு வாரகாலமாக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இங்கு ஆளும் அரசுக்கு மொத்தம் 118 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில் 2 பேர் வாபஸ் பெற்றுள்ளனர். பா.ஜ.,விடம் மொத்தம் 104 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மேலும் 15 பேர் காங்., கூட்டணியில் இருந்து விலகலாம் என்றும் கூறப்படுகிறது. ராஜினாமா தொடர்ந்தால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். 

முதல்வர் குமாரசாமி கூறுகையில், 2 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்று விட்டால், எத்தனை எம்எல்ஏக்கள் இருப்பார்கள். தற்போது, நான் ஓய்வாக உள்ளேன். எனது பலம் குறித்து எனக்கு தெரியும். கடந்த ஒரு வாரமாக மீடியாக்களில் வெளியாகும் செய்திகளை பார்த்து மகிழ்ச்சியாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 

துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா கூறுகையில், எங்களது எம்எல்ஏக்களை பணம் மற்றும் அதிகாரம் மூலம் வாங்க பா.ஜ., முயற்சி செய்து வருகிறது. அவர்களது முயற்சி தோல்வி அடையும். அரசு நிலையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

கோபத்தில் இருப்பவர்கள் பொருட்களை உடைத்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துவதற்காக சீனாவில் பிரத்யேக கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. யாருக்காவது கோபம் ஏற்பட்டால் அந்த கடையினுள் சென்று பொருட்களை உடைத்துக் கொண்டால் அவர்களின் கோபம் குறைந்து மன அமைதி அடைய முடியும் என்பதே இந்த கடையின் முக்கிய குறிக்கோள்.

பொதுவாகவே சிலருக்கு கோபம் வந்தால் கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கி எறிய வேண்டும் அல்லது உடைக்க வேண்டும் என்று தோன்றும். தொலைப்பேசி உள்ளிட்ட பொருட்கள் கோபத்திற்கு அவ்வபோது பலியாகின்றன. இப்படி கோபப்படும் நபர்களுக்காகவே சீனாவில் வித்யாசமான கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த கடைக்கு வரவேற்பும் வெகுவாக கிடைத்துள்ளன.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கடைக்கு 'ஆங்ரி ரூம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறையில் டிவி, கைக்கடிகாரம், தொலைப்பேசி என அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, அளவுக்கு மீறி கோபம் ஏற்படும் நபர்கள் அந்த கடைக்கு சென்று பணம் செலுத்தி விட்டு தங்கள் ஆத்திரத்தை அங்குள்ள பொருட்களின் மீது வெளிப்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் பொருட்களை கோபத்தில் உடைக்கும்போது பின்னணியில் இசையும் ஒலிக்கப்படுகிறது.

இவ்வாறு உடைக்கப்படும் பொருட்களை தேவையற்ற பழைய பொருட்களை விற்கும் கடைகளில் இருந்து அந்த கடை உரிமையாளர் விலைக் கொடுத்து வாங்கி ஆங்கி ரூமில் வைத்துள்ளார். இந்த ரூமிற்குள் நுழைந்து அரை மணி நேரத்திற்கு பொருட்களை உடைக்க இந்திய ரூபாயில் 5,000 வசூலிக்கப்படுகிறது. இதற்காக பயனாளிகளுக்கு பிரத்யேக பாதுகாப்பு உடைகளும், பொருட்களை உடைக்க உருட்டு கட்டைகளும் வழங்கப்படுகிறது.

இந்த கடைக்கு பெரும்பாலும் 20 முதல் 35வயதுக்குட்பட்டவர்களே வந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி செல்கின்றனர். இப்படி ஒரு வித்யாசமான கடைக்கு மக்கள் மத்தில் வரவேற்பும் கிடைத்துள்ளது. வாடிக்கையாளார்களின் மன அழுத்தத்தை போக்கவே இதுபோன்ற கடையை திறந்ததாக கூறும் கடை உரிமையாளர் வன்முறையை ஊக்குவிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் திருநாள் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.  

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் திருநாளையொட்டித் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உணர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப்பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்றத் தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்பட ஒன்பது விருதுகளைப் பெறத் தகுதியானவர்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
 
அதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விருதுக்கானவர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார்கள். அவர்களின் விவரம் வருமாறு:-
 
இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை எம்.ஜி. அன்வர் பாட்சா பெறுகிறார். மேலும், 2018-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது (முன்னாள் அமைச்சர்) சி.பொன்னையனுக்கு வழங்கப்படுகிறது. அண்ணல் அம்பேத்கர் விருது - மருத்துவர் சி.ராமகுரு; பேரறிஞர் அண்ணா விருது - பேராசிரியர் மு.அய்க்கண்; பெருந்தலைவர் காமராசர் விருது - பழ.நெடுமாறன்;
 
மகாகவி பாரதியார் விருது - பாவரசு மா.பாரதி சுகுமாரன்; பாவேந்தர் பாரதிதாசன் விருது - கவிஞர் தியாரூ; தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - முனைவர் கு.கணேசன்; முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
 
இந்த விருதுகளை 21-ந்தேதியன்று மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச்சான்றிதழ் ஆகியவை வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படும்.
 
இவ்விழாவில் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 92 பேருக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.2,500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 ஆகியவற்றைப் பெறுவதற்கான அரசாணைகளும் முதல்-அமைச்சரால் அளிக்கப்படும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பக்கம் 4 / 2332
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…