சீனாவின் புத்தாண்டான பன்றி ஆண்டை, சீனர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
சீனர்கள் ஒவ்வொரு ஆண்டையும் ஒரு விலங்கின் பெயரில் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். இந்தப் புத்தாண்டு பன்றி ஆண்டாக அமைந்துள்ளது. பன்றியை நம்பிக்கையின் சின்னமாக கருதி போற்றி வழிபடுகின்றனர் சீனர்கள். புத்தாண்டை ஒட்டி வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். பாரம்பரிய ஆடை அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
புத்தாண்டை ஒட்டி, உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் சீனர்கள், நாட்டிற்கு திரும்பியதால், நகர்ப்புறங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சீனாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் வசந்தகால விழா எனும் பெயரில் இப்புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிவப்பு நிற விளக்குகளால் வீடுகளை அலங்கரித்தனர். தாய்லாந்தில் பன்றி வேஷம் போட்டும், இந்தோனேஷியாவில் வாழ்த்துக்களை பரிமாறியும், பாலிதீவில், பாராம்பரிய நடனம் ஆடியும், ஹாங்காங் நாட்டில் பிரமாண்ட பன்றி சிலைகளை வைத்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.