மாணவர்கள் வசிப்பதற்கு ஏற்ற உலகின் தலைசிறந்த நகரமாக பிரிட்டன் தலைநகர் லண்டன் 2-ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சர்வதேச கல்வி ஆலோசனை அமைப்பான க்யூஎஸ் குவாக்வரேலி சைமண்ட்ஸ், மாணவர்கள் தங்கி கல்வி பயில்வதற்கு ஏற்ற உலகின் மிகச் சிறந்த நகரங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது.
குறிப்பிட்ட நகரத்தில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை, பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான விகிதாச்சாரம், வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பு, விலைவாசி, அங்கு ஏற்கெனவே வசிக்கும் மாணவர்களின் திருப்தி ஆகிய 6 அம்சங்களின் அடிப்படையில் அந்த அமைப்பு சர்வதேச நகரங்களைப் பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தலைசிறந்த நகரங்களுக்கான பட்டியலில் லண்டன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் லண்டன் முதலிடத்தைப் பிடிப்பது, இது தொடர்ந்து இரண்டாவது முறையாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.