மாலத்தீவில் அரசியல் குழப்பம் நீடிப்பதால் அவசர நிலையை அதிபர் அப்துல்லா யாமின் பிரகடனம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை இரவோடு இரவாக ராணுவம் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் 12 எம்.பி.க்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்தும் மாலத்தீவு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதனை அதிபர் யாமின் ஏற்க மறுத்துவிட்டார்.
இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதிபர் யாமினுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து இந்தியாவின் உதவியை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நாடியிருந்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அதிபர் யாமின் செயல்படுத்த வேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்கா தூதரகமும் வலியுறுத்தியிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முடியாது என திட்டவட்டமாக யாமின் மறுத்துவிட்டார்.
இதையடுத்து நாட்டில் அவசர நிலையை அதியர் யாமின் பிரகடனம் செய்துள்ளார். அடுத்த 15 நாட்களுக்கு இந்த அவசர நிலை அமலில் இருக்கும் என அதிபர் யாமின் தெரிவித்துள்ளார். இதனிடையே மாலத்தீவு உச்சநீதிமன்றத்தை ராணுவம் முற்றுகையிட்டு தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.