JoomlaLock.com All4Share.net

Background Video

விளையாட்டு

போராடி தோற்றது நியூசிலாந்து - தொடரை வென்றது இந்தியா

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ‘இரவில் பனிப்பொழிவின் தாக்கத்தில் பந்து வீசுவது சிரமம்’ என்பதை கருத்தில் கொண்டு முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். தவான் 7-வது ஓவரில் 14 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி வந்தார்.

Image result for india new zealand final odi in kanpur images photosரோகித் -கோலி ஜோடியினர், பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்ட ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி சரிவை தடுத்து நிறுத்தியதுடன் நேர்த்தியாக விளையாடி ரன்களை திரட்டினர். 18.4 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது. இந்த கூட்டணியை உடைக்க நியூசிலாந்து கேப்டன் எடுத்த முயற்சிக்கு அவ்வளவு எளிதில் பலன் கிடைக்கவில்லை. இருவரும் தவறுக்கு இடம் கொடுக்காமல், ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு ஓட விட்டனர். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா தனது 15-வது சதத்தை நிறைவு செய்தார். 35.1 ஓவர்களில் இந்தியா 200 ரன்களை தாண்டியது.

டிரென்ட் பவுல்டின் ஒரு ஓவரில் இருவரும் சேர்ந்து 4 பவுண்டரிகளும், கிரான்ட்ஹோமின் ஓவரில் 3 பவுண்டரிகளும் பின்னியெடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தினர். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது இந்திய அணி 360 ரன்களை நெருங்கும் போலவே தோன்றியது.

அணியின் ஸ்கோர் 259 ரன்களாக உயர்ந்த போது ரோகித் சர்மா 147 ரன்களில் (138 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். ரோகித்-கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 230 ரன்கள் (211 பந்து) எடுத்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா (8 ரன்) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனி நுழைந்தார்.

மறுமுனையில் கேப்டனுக்குரிய பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அட்டகாசப்படுத்திய கேப்டன் விராட் கோலி தனது 32-வது சதத்தை பூர்த்தி செய்தார். அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கருக்கு (49 சதம்) அடுத்து கோலி இருப்பது கவனிக்கத்தக்கது.

நடப்பு தொடரில் 2-வது முறையாக சதத்தை ருசித்த கோலி 113 ரன்களில் (106 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். டோனி தனது பங்குக்கு 25 ரன்களும் (17 பந்து, 3 பவுண்டரி), கேதர் ஜாதவ் 18 ரன்களும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். இறுதி கட்டத்தில் ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு மின்னல் வேகத்தில் எகிறவில்லை. இதனால் 350 ரன்களை தொட முடியாமல் போய் விட்டது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் நமது அணி 5 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்தது. இருப்பினும் இந்த மைதானத்தில் இது அதிகபட்ச ஸ்கோராக பதிவானது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிராக 303 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

பின்னர் மெகா இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி தனது பதில் வேட்டையை தொடங்கியது. புவனேஷ்வர்குமார் வீசிய முதல் ஓவரிலேயே காலின் முன்ரோ சிக்சரும், 3 பவுண்டரியும் விளாசி, சரவெடிக்கு அடித்தளம் போட்டார். முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சை இந்த முறை நியூசிலாந்து வீரர்கள் வறுத்தெடுத்து விட்டனர். இன்னொரு தொடக்க வீரர் கப்தில் 10 ரன்னில் பும்ராவின் பவுலிங்கில் வீழ்ந்தார். இதன் பின்னர் சீரான இடைவெளியில் அந்த அணிக்கு விக்கெட்டுகள் விழுந்தன. காலின்முன்ரோ (75 ரன், 8 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் கனே வில்லியம்சன் (64 ரன்), ராஸ் டெய்லர் (39 ரன்) ஆகியோர் அணிக்கு வலுவூட்டினர். Image result for india new zealand final odi in kanpur images photos

மிடில் வரிசையில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் டாம் லாதம் தூண்போல் நிலைகொண்டு, இந்திய பவுலர்களுக்கு குடைச்சல் கொடுத்தார். நியூசிலாந்தின் ஸ்கோரும் துரிதமாக நகர்ந்தது. வெற்றி யார் பக்கம்? என்பது கணிக்க முடியாத சூழல் நிலவியதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்த நிலையில் 48-வது ஓவரில் டாம் லாதம் (65 ரன், 52 பந்து, 7 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். அதன் பிறகே இந்திய வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை வீசிய புவனேஷ்வர்குமார் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து ஆறுதல் தந்தார். இதையடுத்து 6 பந்தில் 15 ரன்கள் தேவையாக இருந்தது.

உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் கடைசி ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, கட்டுக்கோப்புடன் பந்து வீசி ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தார். ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன் 8 ரன் மட்டுமே வழங்கி தித்திப்புடன் முடித்து வைத்தார். 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 331 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

இந்திய பீல்டர்கள் சில நல்ல ரன்-அவுட் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். அத்துடன் 16 வைடு உள்பட 20 ரன்களை எக்ஸ்டிரா வகையில் வாரி வழங்கினர். இவற்றை மட்டும் கச்சிதமாக செய்திருந்தால் நியூசிலாந்து இந்த அளவுக்கு ‘தண்ணி’ காட்டியிருக்காது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. ரோகித் சர்மா ஆட்டநாயகனாகவும், விராட் கோலி(2 சதத்துடன் 263 ரன்) தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அடுத்து இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் 1-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. 

Read 316 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…