ஆசியக்கோப்பை கிரிக்கெட் : ஃபைனலில் வங்கதேசம்
14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் அரங்கேறிய சூப்பர்–4 சுற்றின் கடைசி லீக்கில் பாகிஸ்தான்–வங்காளதேச அணிகள் மல்லுகட்டின. வங்காளதேச அணியில், விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஷகிப் அல்–ஹசன் விலகினார். அவருக்கு பதிலாக மொமினுல் ஹக் இடம் பிடித்தார். பாகிஸ்தான் அணியில் பார்ம் இன்றி தவிக்கும் முகமது அமிர் ஓரங்கட்டப்பட்டு ஜூனைட்கான் சேர்க்கப்பட்டார்.
‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய வங்காளதேசம் சவும்யா சர்கார் (0), மொமினுல் ஹக் (5 ரன்), லிட்டான் தாஸ் (6 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து தாரைவார்த்தது. 12 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நிலையில் 4–வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமும், முகமத் மிதுனும் இணைந்தனர்.
அவசரம் காட்டாமல் பாகிஸ்தானின் பந்து வீச்சை திறம்பட சமாளித்த இவர்கள் அணியை சரிவில் இருந்து படிப்படியாக மீட்டெடுத்தனர். 24.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. அதன் பிறகு ரன்வேகத்தை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தினர்.
அணியின் ஸ்கோர் 156 ரன்களை எட்டிய போது, முகமத் மிதுன் 60 ரன்களில் (84 பந்து, 4 பவுண்டரி) ஹசன் அலியின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். மறுமுனையில் சதத்தை நெருங்கிய முஷ்பிகுர் ரஹிம் துரதிருஷ்டவசமாக 99 ரன்களில் (116 பந்து, 9 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். ஷகீன் ஷா அப்ரிடி, ஆப்–சைடுக்கு சற்று வெளியே வீசிய பந்தை முஷ்பிகுர் அடிக்க முயற்சித்த போது, அது பேட்டில் லேசாக உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவின் கையில் சிக்கியது. சர்வதேச கிரிக்கெட்டில் வங்காளதேச வீரர் ஒருவர் 99 ரன்களில் அவுட் ஆவது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஜோடியின் வெளியேற்றத்திற்கு பிறகு, பாகிஸ்தான் பவுலர்களின் ஆதிக்கம் மறுபடியும் ஓங்கியது. இறுதிகட்டத்தில் மக்முதுல்லாவின் (25 ரன்) ஆட்டம் மட்டும் குறிப்பிடும்படி இருந்தது. முடிவில் வங்காளதேச அணி 48.5 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஜூனைட் கான் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளும், ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், பாகிஸ்தான் அணியின் சார்பில் பக்தர் சமான், இமாம்-உல்-ஹக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் பக்தர் சமான் 1(4) ரன்னில் வெளியேற, அவரைத் தொடர்ந்து பாபர் அசாம் 1(3) ரன்னிலும், கேப்டன் சர்ப்ராஸ் அகமது 10(7) ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் இமாம்-உல்-ஹக்குடன், ஷாகிப் மாலிக் ஜோடி சேர்ந்தார். மேலும் விக்கெட் இழப்பினை தடுக்க இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஷாகிப் மாலிக் 30(51) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைதொடர்ந்து ஷாதெப் கானும் 4(24) ரன்னில் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திவந்த இமாம்-உல்-ஹக் தனது அரைசதத்தினை பதிவு செய்தார். அதில் இமாம்-உல்-ஹக் மற்றும் ஆஷிப் அலி ஆகியோரின் நிதான ஆட்டத்தினால் அணியின் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. அப்போது ஆஷிப் அலி 31(47) ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து சதம் அடித்து அணியை வெற்றிபெற செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட இமாம்-உல்-ஹக்கும் 83(105) ரன்களில் வெளியேறினார். இதனால் வங்காள தேச அணியின் கை ஓங்கியது.
பின்னர் அடுத்ததாக களமிறங்கிய ஹசன் அலி 8(11) ரன்களிலும், முகமது நவாஸ் 8(19) ரன்னிலும் வெளியேறினர். கடைசி ஓவரில் வெற்றி பெற 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 1 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் அணி எடுத்தது.
முடிவில் ஷாகின் அப்ரிடி14(20) ரன்களும், ஜூனைத் கான் 3(10) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வங்காளதேச அணியின் சார்பில் அதிகபட்சமாக முஷிஃப்பூர் ரகுமான் 4 விக்கெட்டுகளும், ஹசன் 2 விக்கெட்டுகளும், ரூபெல் ஹொசைன், முகமதுல்லா, சர்க்கார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.