JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 80 ரன்னும், விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ 70 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது ‌ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
 
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி, கேப்டன் விராட்கோலியின் (149 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு 274 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
 
நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜென்னிங்ஸ், கேப்டன் ஜோரூட் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 53 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் ‌ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
 
பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சரிவர சோபிக்காத நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் தேவை. விராத் கோலி 43(76) ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18(44) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 
 
இந்நிலையில் 4-ம் நாள் ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே தினேஷ் கார்த்திக் 20 ரன்களில் ஆண்டர்சன் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். பின்னர் ஹர்திக் பாண்டியா, கேப்டன் விராட் கோலியுடன் கைகோர்த்தார். வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், இங்கிலாந்து அணியின் ஆக்ரோஷ பந்து வீச்சை சமாளித்து இந்த ஜோடி விளையாடி வந்தது. இதனிடையே தனக்கே உரிய சிறப்பான ஆட்டத்தின் மூலம் அரைசதம் கண்ட விராட் கோலி, 51 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.
 
கோலியை அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய போதிலும், ஹர்திக் பாண்டியா தனிஒருவராக வெற்றிக்கு கடுமையாக போராடினார். இருப்பினும் பாண்டியாவும் 31 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேற இந்திய அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 
இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகள், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் 2 விக்கெட்டுகள் மற்றும் சாம் குரான், ரஷித் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…