JoomlaLock.com All4Share.net

Background Video

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியதையடுத்து, ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பின் இந்தியா தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5-வது முறையாக முதலிடத்தில் இந்திய அணி அமர்கிறது.

முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணி 2-ம் இடத்துக்கு சரிந்தது.

சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

தென் ஆப்பிரிக்க அணியுடன் ஒரு நாள் தொடர் தொடங்கும் போது இந்திய அணி 119 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் இருந்தது. ஆனால், போர்ட் எலிசபெத் நகரில் நடந்த 5-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இதன் மூலம், ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் 122 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 118 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு சரிந்துள்ளது. மீதம் இருக்கும் ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால்கூட தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகள் மட்டுமே பெற முடியும் முதலிடத்துக்கு முன்னேற முடியாது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் 123 புள்ளிகள் பெறும், தென் ஆப்பிரிக்கா 117 புள்ளிகளாகக் குறையும்.

அதேசமயம், தரவரிசைப் பட்டியிலில் 10ம் இடத்துக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியுள்ளது. ஜிம்பாப்பே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வென்றதையடுத்து, ஆப்கானிஸ்தான் இந்த முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் ஜிம்பாப்வே அணி 11ம் இடத்துக்கு பின்தங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் கிடைக்கும் வெற்றி தோல்விகள் அடிப்படையில், தரவரிசையில் மாற்றங்கள் நிகழும்.

ஒருவேளை நியூசிலாந்து அணியை வீழ்த்தி 5-0 என்று தொடரை மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கைப்பற்றினால், தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறும். தென் ஆப்பிரிக்க அணி 3-ம் இடத்துக்கு சரியும்.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…