உலகக்கோப்பை கால்பந்து : இங்கிலாந்து தோல்வி : 3 - வது இடத்தை பிடித்தது பெல்ஜியம்
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த கால்பந்து திருவிழாவில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி, குரோஷியாவை எதிர்கொள்கிறது. முன்னதாக வெண்கலப்பதக்கம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் இன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மோதின.
லீக் சுற்றில் அதிக கோல்கள் அடித்த அணியான பெல்ஜியம், இந்த தொடரில் பிரமிக்கத்தக்க வகையில் விளையாடியது. கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால் பெல்ஜியத்துக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விட்டது. அரைஇறுதியில் பிரான்சிடம் ஒரு கோல் வாங்கி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில், 4-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் அணியின் வீரர் தாமஸ் மியுனியர் கோல் அடித்து அசத்தினார். இதனை சமன் செய்ய இங்கிலாந்து அணியினர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காமல் போனது. இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி முன்னிலை வகித்தது.
அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியின், 82வது நிமிடத்தில்பெல்ஜியம் அணியின் ஈடன் ஹசார்ட் மேலும் 1 கோல் அடித்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினார். இதனை சமன் செய்ய இங்கிலாந்து அணியினர் போராடினர். ஆனால் ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று முன்றாவது இடம் பிடித்தது. இங்கிலாந்து அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்தப்போட்டியில் வென்று 3-வது இடத்தை பிடித்ததால் பெல்ஜியம் அணிக்கு ரூ.161 கோடியும், 4-வது இடத்தை பெற்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.148 கோடியும் பரிசுத்தொகையாக கிடைக்கும்.