JoomlaLock.com All4Share.net

Background Video

சனிக்கிழமை, 24 பிப்ரவரி 2018 00:00

'டுவென்டி-20' தொடரை கைப்பற்றியது இந்தியா

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியில் தவான், ரெய்னா கைகொடுக்க இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. இதன் மூலம், தொடரை 2-1 என கைப்பற்றியது.தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் பங்கேற்றது.

முதலிரண்டு போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி கேப்டவுனில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுமினி 'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியில், முதுகுப்பகுதியில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக கேப்டன் கோஹ்லி இடம்பெறவில்லை. இவருக்குப்பதில் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றார். உனத்கட், சகால் நீக்கப்பட்டு பும்ரா, அக்சர் படேல் இடம்பிடித்தனர். 

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் (11) அதிர்ச்சி தந்தார். தவான், ரெய்னா இணைந்து சிறப்பாக விளையாடினர். பெலுக்வாயோ பந்துவீச்சில் தொடர்ந்து 2 பவுண்டரி அடித்த ரெய்னா, 43 ரன்களில் ஆட்டமிழந்தார். டாலா பந்தில் மணிஷ் பாண்டே (13) சிக்கினார். ஷிகர் தவான் (47) அரை சத வாய்ப்பை இழந்தார். தோனி (12) விரைவில் திரும்பினார். மோரிஸ் 'வேகத்தில்' பாண்ட்யா (21), தினேஷ் கார்த்திக் (13) அவுட்டாகினர். முடிவில், இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது. அக்சர் படேல் (1), புவனேஷ்வர் (3) அவுட்டாகாமல் இருந்தனர். 

பின், களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு, ஹென்ரிக்ஸ் 7 ரன்களில் அவுட்டானார். மில்லர் 24 ரன்கள் எடுத்தார். பாண்ட்யா பந்தில் கிளாசன் (7) ஆட்டமிழந்தார். கேப்டன் டுமினி (55) அரை சதம் அடித்தார். ஜோன்கர் அதிரடி காட்ட, சற்று நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், கடைசி ஓவரை புவனேஷ்வர் கட்டுக்கோப்பாக வீசினார். இவரின் 'வேகத்தில்' ஜோன்கர் (49) ஆட்டமிழந்தார். முடிவில், தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பெகார்டியன் (15) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், தென் ஆப்ரிக்க மண்ணில் ஒரு நாள் (5-1), 'டுவென்டி-20' தொடரை (2-1) இந்திய அணி கைப்பற்றியது.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…