JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

திரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'

கேரம் போர்டு பிளேயர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கேங்ஸ்டர் ஆக உருவெடுத்தால் அதுவே 'வடசென்னை' என்று சொல்லலாம். ஆனால், அது மட்டும்தான் படத்தின் ஒன்லைன் என்றால் இல்லவே இல்லை.  Image result for vada chennai film images posters stills photos

வடசென்னைப் பகுதியில் கடலை ஒட்டி பிழைப்பு நடத்தும் மக்களை அரசியலும் அதிகாரமும் வெளியேற்றப் பார்க்கிறது. அதற்கு ராஜன் (அமீர்) எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் காரியம் சாதிக்க நினைக்கும் அரசியல்வாதி முத்து (ராதாரவி) ராஜனுடன் இருக்கும் நண்பன் செந்திலை (கிஷோர்) தூண்டி விடுகிறார். எம்.ஜி.ஆர். இறந்த அன்று கடலில் படகு மூலம் சாராயம் கடத்துகிறார் செந்தில். இதனால் செந்தில் (கிஷோர்), குணா (சமுத்திரக்கனி), வேலு (பவன்), பழனி (தீனா) உள்ளிட்டோரும் போலீஸிடம் சிக்க, கோபத்தில் அவர்கள் நால்வரையும் அடித்து விடுகிறார் ராஜன். அன்றிரவே சமயம் பார்த்து ராஜன் அந்த நால்வரால் படுகொலை செய்யப்படுகிறார். அந்த சூழலில் பக்கத்தில் இருந்தும் அண்ணனைக் காப்பாற்ற முடியாமல் அழ மட்டுமே செய்கிறார் ராஜனின் தம்பி (டேனியல் பாலாஜி). 

நால்வரில் சமுத்திரக்கனியும், பவனும் மட்டும் குற்றத்தை ஒப்புக்கொண்டு கைதாகி சிறைத்தண்டனை அனுபவிக்கின்றனர். கிஷோரும், தீனாவும் அவர்களை ஜாமீனில் எடுக்காமல் இழுத்தடிக்கின்றனர். அந்த இடைவெளியில் பெரிய ரவுடிகளாக வலம் வருகின்றனர். ஜாமீனில் வெளிவரும் சமுத்திரக்கனியும், பவனும் கிஷோருக்கு எதிரிகள் ஆகின்றனர். இந்நிலையில் அன்பு (தனுஷ்) ஒரு பிரச்சினையில் சிறைக்கைதியாகச் சென்று கிஷோரைப் போட்டுத்தள்ள முயற்சிக்கிறார். அது கொஞ்சம் சொதப்பலில் முடிகிறது. யார் இந்த அன்பு, ராஜனுக்கும் சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட நால்வருக்கும் உள்ள பிரச்சினை என்ன, ராஜனின் அன்பு மனைவி சந்திரா என்ன ஆகிறார், அண்ணனைக் கொன்றவர்களை டேனியல் பாலாஜி என்ன செய்கிறார், அன்பு ஏன் ராஜனாக உருமாறுகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.  Image result for vada chennai film images posters stills photos

தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு கேங்ஸ்டர் சினிமாவைக் கொடுத்த விதத்தில் வெற்றிமாறன் ஆச்சரியப்படுத்துகிறார். கதாபாத்திரத் தேர்வு, அவர்களுக்கான விவரணைகள், தோரணை, காட்சி அமைப்புகள் போன்றவற்றில் அவரது உழைப்பு பளிச்சிடுகிறது. 

படத்தில் நாயகன் இவர்தான் என்று உறுதியாகக் கூற முடியாத அளவுக்கு கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்து கட்டமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். அதுவே படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம்.  

அன்பு கதாபாத்திரத்தில் தனுஷ் மிகையில்லா நடிப்பைத் தந்திருக்கிறார். புதுப்பேட்டைக்கு முன், பின் என தனுஷின் நடிப்பைப் பற்றி விமர்சிக்கலாம். அதுபோல இனி வடசென்னைக்கு முன், பின் என்று தனுஷ் நடிப்பு மெருகேறி உள்ளதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். காதலில் கிறங்குவது, வசவு வார்த்தை வீசிய ஐஸ்வர்யா ராஜேஷைப் பின் தொடர்ந்து காதலிப்பது, காதலிக்கு முத்தம் கொடுத்ததைக் கலாய்த்த தீனாவைச் சாய்ப்பது, கிஷோரின் ரவுடிக் கூட்டத்தில் இடம்பெறுவது, கேரம் போர்டு விளையாடி நம்பிக்கைக்குரிய ஆளாக மாறுவது என தனுஷ் பிரமாதப்படுத்தி இருக்கிறார். தொழில்முறை நடிகனாக தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.  

ஆண்ட்ரியாவுக்கு மிகவும் அழுத்தமான கதாபாத்திரம். அதை அவ்வளவு அழகாகச் செய்திருக்கிறார். சேலைத் தலைப்பை இழுத்து செருகுவது போல் துரோகத்தின் நிழலையும், வன்மத்தின் மௌனத்தையும் இறுக்கமான நடிப்பால் வெளிப்படுத்துகிறார்.  

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு வசவு வார்த்தை வீசிய தென்றலாக வருகிறார். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் வடசென்னைப் பெண்ணாகவே மாறி ரசிக்க வைக்கிறார். தனுஷ்- ஐஸ்வர்யா ராஜேஷ் காதல் காட்சிகள் படத்தின் ரசனை அத்தியாயங்கள்.  

சமுத்திரக்கனி, கிஷோர், அமீர், பவன், பாவல் நவகீதன், ராதாரவி, தீனா, ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணிய சிவா ஆகியோர் உறுதுணைக் கதாபாத்திரங்களாக நின்று படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி கதாபாத்திர வார்ப்பும் கூடுதல் கவனம் பெறுகிறது.  Image result for vada chennai film images posters stills photos

வேல்ராஜின் கேமரா வடசென்னையின் சந்துபொந்துகளை, இண்டு இடுக்குகளை, சிறைச்சாலையில் நடக்கும் அட்டூழியங்களை அப்படியே துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் படத்தை அடுத்த தளத்துக்குக் கொண்டு செல்கிறார். படம் முழுக்க நிறைய கதாபாத்திரங்கள், அவர்களுக்கான அறிமுகப் படலங்கள், சண்டை செய்வதற்காக காரண காரியங்கள் இருந்தாலும் அவற்றை அலுப்பூட்டாமல், குழப்பம் ஏற்படுத்தாமல் பார்க்க வைக்கும் விதத்தில் வெங்கடேஷின் எடிட்டிங் நேர்த்தியின் உச்சம்.  

ஒரு முத்தம் கொடுத்தது ஏன் இவ்வளவு பெரிய ஆபத்தில் தனுஷைக் கொண்டுபோய் நிறுத்துகிறது என்பதுதான் படத்தின் முக்கியமான முடிச்சு. காதலுக்கான கருவி எப்படி கொலைக்கான முகாந்திரமாக மாறுகிறது என்பதையும், அன்புவாக இருக்கும் தனுஷ் ஒவ்வொரு படிநிலையாய் ஏறி ராஜனாம மாறும் விதத்தையும் எந்தப் பூச்சும் இல்லாமல் மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். கேங்ஸ்டர் படம் என்பதற்காக அறிமுகக் காட்சி என்ற ஒன்றை தனுஷுக்கு வைக்காத அவர் கதைக்கான நேர்மையை மட்டும் திரைக்கதையாக செதுக்கிய விதத்தில் மிகப்பெரிய ஆளுமை என்பதை நிறுவி இருக்கிறார். சிறைக்காட்சிகளில் இருக்கும் டீட்டெய்லிங் அசர வைக்கிறது. தனுஷ் அமீர் வீட்டைப் பயன்படுத்திக்கொள்ள அங்கு தங்குவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருப்பது கச்சிதம். 

குறைகள் என்று சொல்லப்போனால் டேனியல் பாலாஜி ஏன் அண்ணன் சொன்ன வார்த்தைக்காக, அந்த நால்வரையும் அப்படியே விட்டுவிடுகிறான். அதுவும் ஒருகட்டத்தில் சுய சமாதானம் செய்துகொள்கிறான் என்பது தெரியவில்லை. சமுத்திரக்கனி, கிஷோர் கதாபாத்திரங்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு தேக்க நிலையை அடைந்து விடுகின்றன. ஆனால், இவற்றை பெரிதாக பொருட்படுத்தவும் தேவையில்லாத அளவுக்கு திரைக்கதையால் நம்மைக் கட்டிப்போடுகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.  

விசுவாசத்துக்கும் துரோகத்துக்குமான வேறுபாட்டையும் சமரசமில்லாமல் பதிவு செய்த 'வடசென்னை' நிலம் குறித்த அரசியலையும், அதிகாரத்தையும் தகர்த்தெறிய உரிமைக்குரல் எழுப்பிய விதத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கிறது.

Read 286 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…