JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

பிக்பாஸ் 3, தேவர் மகன் 2: படப்பிடிப்புகளில் மீண்டும் கவனம் செலுத்தும் கமல்ஹாசன்

தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் கமல்ஹாசன், மீண்டும் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்த தயாராகிறார். பிக்பாஸ் சீசன் 3, தேவர் மகன் 2 என தொடர்ந்து கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். 

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் அவரது கட்சி போட்டியிட்டது. வரும் 19-ஆம் தேதி நடக்க இருக்கும் 4 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைதேர்தல்களிலும் அவரது கட்சி போட்டியிடுகிறது.

சினிமாவுக்கு திரும்புகிறார்: கமல்ஹாசன் அரசியலுக்குள் நுழையும் போதே சினிமாவில் நடிப்பதை விட மாட்டேன் என்று உறுதியாகக் கூறினார். அரசியல் என்பது தொழில் அல்ல. சினிமா தான் தொழில். வருமானத்துக்காக தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறினார். பின்னர், அரசியலுக்காக நடிப்பை தியாகம் செய்யவும் தயார் என்றும், தற்போது நடிக்க ஒப்புக்கொண்டுள்ள இந்தியன் 2 படமே தனது கடைசி படமாக இருக்கும் என்றும் கூறினார். இதனிடையே சபாஷ் நாயுடு படப்பிடிப்பைத் தொடர இருப்பதாகவும் கூறியிருந்தார். 1997-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 2 பாகத்தின் படப்பிடிப்பு சில நாள்கள் நடந்து முடிந்த நிலையில், தேர்தல் களத்தில் கமல் பரபரப்பாக இயங்கியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கமலுக்காக படக்குழு காத்திருக்கிறது.

பிக்பாஸ்: கடந்த 2 ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது டிவி நிகழ்ச்சியான பிக்பாஸ். கமல்ஹாசன் புதிய பரிமாணத்தில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஓவியா, ஆரவ், ஜூலி, காயத்ரி என முதல் சீசன் நிகழ்ச்சி பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் ஆரவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, சீசன் 2 ஆரம்பித்தது. இந்த முறை கமல் முழு அரசியல்வாதியாகி இருந்தார். எனவே அவரது அரசியல் நக்கல், நையாண்டிகளை நிகழ்ச்சியில் அவர் வரும் பகுதிகளில் பார்க்க முடிந்தது.

இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக், மகத், யாஷிகா ஆனந்த் என இளம் பட்டாளங்களால் கூடுதல் கவர்ச்சியும் கணவன், மனைவியான தாடி பாலாஜி - நித்யாவால் பரபரப்பும் அதிகம் கிடைத்தது. இறுதியில் ரித்விகா பிக்பாஸ் பட்டம் வென்றார்.

தற்போது மூன்றாவது சீசனுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் கமல். இதன் புரொமோ படப்பிடிப்பு புதன்கிழமை தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தனியார் படப்பிடிப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட பிக்பாஸ் வீட்டையொட்டிய அரங்குகளில் கமல்ஹாசன் கலந்துகொண்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு, ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. எனவே அடுத்த 4 மாதங்களுக்கு கமல் இந்தப் படப்பிடிப்பில் பரபரப்பாகி விடுவார்.

தேவர் மகன் 2: பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டும் அல்லாது கமல் நடிப்பில் தேவர் மகன் படத்தின் 2-ஆம் பாகம் எடுக்கும் பணிகளும் தொடங்கி உள்ளன. இந்தப் படத்தை கமல் கட்சியின் துணைத் தலைவரான மகேந்திரன் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இந்தியன் படத்தில் ஊழல், லஞ்சத்தை கையில் எடுத்த கமல்ஹாசன், இதில் சாதி பிரச்னைகளை கையில் எடுக்கிறார். சாதி பிரச்னைகள், சாதி அரசியல் ஆகியவை பற்றிய கதையாக உருவாகிறது என்கிறார்கள். இதற்காக பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு இடங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடக்கின்றன.

தீவிர அரசியல் பணிகளுக்கிடையே பிக்பாஸ் சீசன் 3, தேவர் மகன் 2 என இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த உள்ளார் கமல். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் வரை சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் முடிவையும் அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியன் 2, சபாஷ் நாயுடு இந்த இரண்டு படங்களுக்கும் முக்கியத்துவம் தரலாம் என்கிறார்கள்.

Read 110 times Last modified on வியாழக்கிழமை, 09 மே 2019 23:52
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…