Print this page

சினிமா

இன்று நடக்கிறது நடிகர் சங்க தேர்தல்

நடிகர் சங்கத்திற்கான தேர்தல், சென்னை, மயிலாப்பூர், ஆர்.கே.சாலையில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில், இன்று நடக்கிறது.தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019 - 22ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடக்கிறது. மொத்தம், 3,644 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்; அதில், 3,171 பேர், ஓட்டளிக்க தகுதி உடையவர்கள்.தேர்தலில், விஷால் தலைமையிலான, பாண்டவர் அணியும்; பாக்யராஜ் தலைமையிலான, சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. பாண்டவர் அணியில், தலைவர் பதவிக்கு நாசர்; பொதுச்செயலருக்கு, விஷால்; பொருளாளர் பதவிக்கு, கார்த்தி போட்டியிடுகின்றனர்.துணை தலைவர் பதவிகளுக்கு, கருணாஸ்,பூச்சி முருகன் போட்டியிடுகின்றனர். சுவாமி சங்கரதாஸ் அணியில், தலைவர் பதவிக்கு பாக்யராஜ்; பொதுச்செயலர் பதவிக்கு ஐசரி கணேஷ்; பொருளாளர் பதவிக்கு பிரசாந்த்; துணை தலைவர் பதவிகளுக்கு, குட்டி பத்மினி, உதயா போட்டியிடுகின்றனர்.முன்னதாக, சென்னை, அடையாறில் உள்ள, எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லுாரியில், இன்று தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட, 61 பேர், தேர்தலை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், மாவட்ட சங்க பதிவாளரிடமும் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில், சில தினங்களுக்கு முன், தேர்தலை ரத்து செய்து, சங்கப் பதிவாளர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, விஷால் அணி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.விசாரணையில், 61 பேரை நீக்கியது செல்லும் என்று, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும், தேர்தலை, 23ம் தேதி நடத்த தடையில்லை என, அறிவித்து, ஓட்டு எண்ணிக்கையை மட்டும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.இதையடுத்து, இரு அணியினரும், தனித்தனியாக ஆலோசனை நடத்தி, பிரசாரமும் செய்தனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து, தேர்தல் அதிகாரி பத்மநாபன், 'மயிலாப்பூர், ஆர்.கே.சாலையில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில், தேர்தல் நடக்கும்' என, அறிவித்தார்.காலை, 7:00 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு, மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. இதற்காக, 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.தேர்தலுக்கான தபால் ஓட்டுப்பதிவு, நேற்று மாலை முடிவடைந்தது.இதற்கிடையில், நாசர் உள்ளிட்ட பாண்டவர் அணியினர், தலைமை செயலகத்தில், நேற்று துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர். ஓட்டு போட முடியாத ரஜினி!

சென்னை: 'மும்பையில் சினிமா படப்பிடிப்பில் இருப்பதால் நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க முடியவில்லை' என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் தற்போது சினிமா படப்பிடிப்பிற்காக மும்பையில் உள்ளேன். நடிகர் சங்க தேர்தலில் ஓட்டளிப்பதற்காக எனக்கு தபால் ஓட்டு நேற்று மாலை 6:45 மணிக்கு தான் கிடைத்தது. தாமதமாக கிடைத்ததால் என்னால் ஓட்டளிக்க இயலவில்லை. இது துரதிருஷ்டவசமானது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read 199 times
Share this article

About author

Super User
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…