JoomlaLock.com All4Share.net

Background Video

சினிமா

தமிழகத்தில் கொழிக்கும் 'டப்பிங்' திரைப்படங்கள்

தமிழகத்தை பொறுத்த வரையில் அதிகம் டப்பிங்காகும் படங்கள், ஹாலிவுட் படங்கள்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த வணிகம், இன்று பணம் கொழிக்கும் மரமாக மாறியிருக்கிறது. இதனால் பெரு நகரங்களில் மட்டுமே வெளியாகி வந்த ஹாலிவுட் படங்கள், இப்போது உசிலம்பட்டியிலும் தமிழ் பேசிக்கொண்டிருக்கின்றன. ஹாலிவுட் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகும் அதே நாளில் இங்கும் தமிழில் வெளியாவதுதான் இப்போதைய உச்சக்கட்ட வளர்ச்சி. 

 டுவென்டியத் செஞ்சுரி, கொலம்பியா, எம்.ஜி.எம்., வார்னர் பிரதர்ஸ் போன்ற ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களின் விநியோக அலுவலகங்கள் மும்பையிலும், சென்னையிலும் இருப்பது, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அவர்களது படங்கள் வெளிவருதற்கு முன்பே, மும்பை கொண்டுவரப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்யப்படுகின்றன. 

இதற்கென்று தனியாக ஏஜெண்டுகளும் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கென்று நிரந்தர மொழிப் பெயர்ப்பாளர்கள், டப்பிங் கலைஞர்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். ஒப்பந்தம் செய்து ஒரு படத்தை டப்பிங் செய்ய வாங்கியதும், பக்காவாக தங்கள் பணியை முடித்துக் கொடுக்கிறார்கள். இப்படி இவர்களால் டப்பிங் செய்யப்பட்ட படங்கள், பிறகு அந்தந்த மாநிலங்களுக்கு வருகின்றன.  Image result for hollywood films dubbed in tamil images posters photos

 மிகப்பெரிய நட்சத்திரங்களின் படங்கள் அல்லது பிரமாண்டமான படங்களின் வெளியீட்டு உரிமை கோடியைக்கூட தாண்டும். ஒருவேளை ஏதேனும் ஒரு டப்பிங் படம் வியாபாரம் ஆகாவிட்டால், குறிப்பிட்ட அந்த நிறுவனமே அப்படத்தை நேரடியாக வெளியிடவும் செய்கின்றன. அதேபோல், பெரிய படங்கள் என்றால் 40 முதல் 50 வரை ஆங்கிலத்திலும், 130 முதல் 150 வரை தமிழிலும் பிரிண்டுகள் போடப்படுகின்றன. இது நடுத்தர தமிழ் படத்தின் பிரிண்டுகளை விட அதிகமாம். 

 பொதுவாக ஆங்கில படங்கள் அனைத்தும் ஹாலிவுட் படங்கள் என்று அழைக்கப்பட்டாலும், அதிலும் பிரிவுகள் உண்டு. ஹாங்காங், சீனப் படங்கள் தனி வகை. ஜாக்கிசான், ஜெட் லீ படங்களுக்கு இந்த பிரிவில் மவுசு அதிகம். பிரமாண்டம், ஆக்‌ஷன் என்று ஹாலிவுட் படங்கள் மிரட்டினால், இந்த வகை படங்கள் சண்டை, கிராபிக்ஸ், சென்டிமெண்டால் மிரட்டுகின்றன. இந்த ஹாங்காங், சீன வகை படங் களின் உரிமை லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரை போகுமாம். 

இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது இந்திப் படங்கள். பெரும்பாலான இந்திப் படங்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் நேரடியாகவே வெளியிடப்படுகின்றன. ஒருவேளை தமிழில் ரீமேக் செய்ய வாய்ப்பிருக்கும் இந்திப் படங்கள், டப் செய்யப்படுவதில்லை. பிற படங்கள் சூட்டோடு சூடாக டப்பிங் செய்யப்படுகின்றன. அமீர்கானின் ‘தங்கல்’ இதற்கு உதாரணம்.

அமீர்கான், அமிதாப்பச்சன், ஷாருக்கான் படங்களுக்கு நகர் புறங்களில்தான் மவுசு. கிராமப் புறங்களில் இந்தியில் வெளிவரும் ‘வில்லங்க’ படங்களுக்குதான் கிராக்கி என்கிறார்கள் அனுபவசாலிகள். இத்தகைய படங்களின் உரிமை ஒருசில லட்சங்களிலேயே முடிந்துவிடுகின்றன. அவற்றை வாங்கி இன்னும் சில லட்சங்கள் செலவு செய்து டப் செய்தால் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து வசூலைக் கொடுக்கும். 

 தெலுங்கு படங்களின் டப்பிங், ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்தது. நடுவில் தொய்வடைந்திருந்த இந்த டிரெண்ட், பாகுபலிக்கு பிறகு மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. தமிழிலிருந்து தெலுங்குக்கு செல்லும் டப்பிங் படங்களின் உரிமம் பலகோடிகள். ஆனால், தெலுங்கில் இருந்து தமிழுக்கு வரும் படங்களின் உரிமம் சில லட்சங்கள்தான். 

ஒருசில முக்கிய படங்களை தவிர, மற்ற கன்னடப் படங்கள் எதுவும் தமிழில் டப் செய்யப்படுவதில்லை. பெரிய நட்சத்திரங்கள் நடித்த மலையாளப் படங்கள், அபூர்வமாக டப் செய்யப்படுவது உண்டு. ஆனால், மலையாள கவர்ச்சிப் படங்கள் அனைத்தும் தவறாமல் தமிழுக்கு வந்துக்கொண்டிருக்கின்றன. லாபத்தையும் சம்பாதித்துத் தருகின்றன. தவிர, இது போன்ற படங்களுக்கு மொழி ஒரு பிரச்சினை இல்லை என்கிறார்கள், சினிமா ரசிகர்கள். 

ரிஸ்க் இல்லாத இந்த டப்பிங் சினிமா தொழிலில் பல நூறுபேர் சத்தம் இல்லாமல் ஈடுபட்டு வருகிறார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் குடும்பங்களை இது வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவு ஏன் தமிழ்நாட்டின் பெரும்பாலான திரையரங்குகளுக்கு நிரந்தர வருவாய் கிடைப்பது டப்பிங் படங்கள் வழியாகத்தான்.

Read 223 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…