நாய் தூக்கி வீசப்பட்ட விடீயோ : கோபத்தில் த்ரிஷா
நாய் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவ மாணவர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகை த்ரிஷா கோரியுள்ளார்.
இளைஞர் ஒருவர் நாயை தூக்கி கீழே வீசுவதும், அந்த நாய் கீழே விழுந்து துடிக்கும் வரை பதிவான விடியோ காட்சி சமூக வலைத் தளங்களில் திங்கள்கிழமை பரவியது. ஒருவர் வீச, மற்றொருவர் படம் பிடித்துள்ளார்.
புகாரின் பேரில் விலங்குகளுக்கு எதிரான துன்புறுத்துதல், கொல்வது ஆகிய இந்திய குற்றவியல் தடுப்புச் சட்டம் 428, 429 ஆகிய பிரிவுகளிலும், விலங்குகள் துன்புறுத்துதல் தடுப்புச் சட்டம் 1960- ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 2 மாணவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாகர்கோயில், திருநெல்வேலியைச் சேர்ந்த சுதர்சன் கௌதம், ஆசிஸ் பால் ஆகிய இருவர்தான் நாயை துன்புறுத்தினர் என்பதும், இருவரும் குன்றத்தூர் அருகேயுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயில்பவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
விலங்குகள் நல தன்னார்வலர்கள் அந்த நாயை தற்போது பராமரித்து வருகிறார்கள்.
இச்சம்பவம் குறித்து நடிகை த்ரிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படி எழுதியுள்ளார்:
'நாயைக் காப்பாற்றிய நிஜ ஹீரோக்களான ஸ்ரவன், ஜெனிஃபர், ஆண்டனி ஆகியோருக்கு நன்றி. இந்தக் குற்றச் செயல் புரிந்தவர்களின் மருத்துவ லைசென்ஸைச் சம்பந்தப்பட்ட துறையினர் ரத்து செய்வார்கள் என எண்ணுகிறேன்.'
த்ரிஷா ஏற்கெனவே தெருநாய்கள் மீது பரிவு காட்டி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் 57-வது படம் பூஜையுடன் துவங்கியது
சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர் சிவா, தொடர்ந்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். இப்போது மூன்றாவது முறையாக இந்தக்கூட்டணி இணைந்துள்ளது. அஜித்தின் 57-வது படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை, அதனால் அஜித்-57 என்ற பெயரிலேயே இப்பட செய்திகள் வெளிவருகிறது.காலில் ஏற்பட்ட பிரச்னையால் 'வேதாளம்' படத்திற்கு பிறகு ஆபரேஷன் செய்து கொண்ட அஜித், கடந்த சில மாதங்களாக ஓய்வு எடுத்து வந்தார். இந்த இடைவெளியில் அஜித்தின் 57 படத்தின் கதை, திரைக்கதையை முடித்துவிட்டார் இயக்குநர் சிவா முடித்துவிட்டார். இந்நிலையில், 'அஜித்-57' படம் இன்று பூஜையுடன் ஆரம்பமானது. வழக்கம் போல அஜித் பங்கேற்கவில்லை. இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் அனிருத், ஸ்டண்ட் சில்வா, ஒளிப்பதிவாளர், இப்படத்தை தயாரிக்கும் சத்ய பிலிம்ஸ் டிஜி தியாகராஜன் மற்றும் அவரது மகன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். படத்திற்கு இன்று பூஜை போட்டாலும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.
தயாரிப்பாளராக மாறினார் விக்ரம் பிரபு : 'நெருப்புடா'
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், நடிகர் பிரபுவின் மகன் எனும் அடையாளத்தோடு 'கும்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விக்ரம் பிரபு. தொடர்ந்து ஆக்ஷ்ன், காமெடி என பலவிதமான படங்களில் பயணித்து, வளர்ந்து வரும் விக்ரம்பிரபு, இப்போது அடுத்தப்படியாக தயாரிப்பாளராக அவதரித்திருக்கிறார். 'பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கும் விக்ரம் பிரபு, தனது முதல் தயாரிப்பாக வெளிவரும் படத்தில் தானே ஹீரோவாகும் நடிக்கிறார். படத்திற்கு ரஜினியின் கபாலி படத்தில் வரும் 'நெருப்பு டா' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராகவும், ரஜினியின் தீவிர ரசிகராகவும் நடிக்கிறார். விக்ரம் பிரபு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்களுடன் பொன்வண்ணன், நான்கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், மதுசூதனன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ரோமியோ ஜூலியட் இயக்குநர் லக்ஷ்மனின் உதவியாளராக இருந்த அசோக் குமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் பிரபுவின் பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனமும், சந்திரா ஆர்ட்ஸ், சினி இனோவேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து 'நெருப்புடா' படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
கோஹ்லியுடன் சுல்தான் படத்தை பார்த்த அனுஷ்கா சர்மா
தனது காதலர் விராட் கோஹ்லி தான் நடித்த சுல்தான் படத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட அனுஷ்கா சர்மா, தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவிடம் விதியை மீறுமாறு வற்புறுத்தியுள்ளார்.
சல்மான் கான், அனுஷ்கா ஷர்மா முதன் முதலாக கூட்டணி சேர்ந்துள்ள படம் சுல்தான். மல்யுத்த வீரராக சல்மான் கான் இப்படத்தில் வருகிறார். அவருக்கு சற்றும் சளைக்காத வகையில் மல்யுத்தம் செய்யும் வீராங்கனையாக அனுஷ்கா ஷர்மா வருகிறார்.
இந்நிலையில் தனது காதலர் விராட் கோஹ்லி, தான் மல்யுத்த வீராங்கனையாக நடித்த படத்தை திரைக்கு வரும் முன்னே பார்க்க வேண்டும் என எண்ணிய அனுஷ்கா ஷர்மா அதற்காக அடம்பிடித்து தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவிடம் சிறப்புக் காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.
சுல்தான் சிறப்புக் காட்சியை பார்த்த விராட் கோஹ்லி அனுஷ்கா ஷர்மாவையும் படத்தையும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
100 கோடி ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் இப்படம் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வரவுள்ளது.
வெளியானது வரலட்சுமி நடித்த முதல் படம்
போடா போடி படத்தில் சிம்புவுடன் நடித்த வரலட்சுமி, அதையடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் திரைக்கு வரவில்லை. அதனால வேகமாக வளருவார் என்று எதிர்பார்க்கப் பட்ட வரலட்சுமியை பின்னர் படங்களில் காணமுடியவில்லை. ஆனால் மூன்று வருடங்கள் கழித்து பாலாவின் தாரைத்தப்பட்டை படத்தில் கமிட்டானார். பாலே நடனம் தெரிந்தவரான வரலட்சுமி, அந்த படத்துக்காக கரகாட்ட பயிற்சியை பல மாதங்களாக எடுத்துக்கொண்டு நடித்தார். அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றபோதும், வரலட்சுமியின் நடிப்பு பேசப்பட்டது. அவரையே ஹீரோ ரேஞ்சுக்கு பாலா சித்தரித்திருந்தால் மலையாளத்தில் மம்மூட்டியின் கசாபா படத்திலும் ஒரு வெயிட்டான வேடத்தில் நடிக்க கமிட்டானார் வரலட்சுமி.அந்த படத்தில் நடித்து முடித்ததுமே, தமிழில் அம்மாயி படத்தில் கமிட்டான வரலட்சுமி, கசாபா படத்தின் ரிலீசை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். காரணம், சில டைரக்டர்கள் அவரிடம் கதை சொல்ல வந்தபோது, கசாபா படம் வெளியான பிறகு என்னை எந்தமாதிரி வேடத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி வந்தாராம் வரலட்சுமி. அப்படி பல டைரக்டர்களை வெயிட் பண்ண வைத்த வரலட்சுமியின் முதல் மலையாள படமான கசாபா இன்று திரைக்கு வருகிறது. மேலும், இதுவரை கசாபா படத்தை பார்க்காத வரலட்சுமி தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து கண்டுகளிக்க முடிவெடுத்துள்ளாராம்.