JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

நெல்லை பெருமாள் கோயிலில் சாமி சிலைகள் கொள்ளை

நெல்லை அருகே உள்ள பெருமாள் கோயிலை உடைத்து உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த மர்மக் கும்பலால், அங்கிருந்த ஐம்பொன் சிலைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். 

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணிக் கரையில், அழகர் சுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு, இன்று அதிகாலை பூஜை செய்வதற்காக பக்தர்கள் சென்றபோது, கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கோயிலின் செயல் அலுவலரான மகேந்திரனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த அவர், கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது, கோயிலின் முக்கிய சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் இதுபற்றி கோயிலில் விசாரணை நடத்தினார்கள். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது, கோயிலைச் சுற்றிய பின்னர் அங்கிருந்து தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஓடி நின்றுவிட்டது.

கோயிலில் இருந்த ஒன்றரை அடி உயரம்கொண்ட அழகர் சுந்தரராஜர், லட்சுமி, பூமாதேவி ஆகிய சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த நிலையில், ஒரு அடி உயரம்கொண்ட சிலைகளான சௌந்தரவல்லி, ஆண்டாள் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், 3 வலம்புரிச் சங்குகள், உண்டியலில் இருந்த ரொக்கப் பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துள்ளனர்.

இந்தச் சிலைகள் அனைத்தும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழைமையானவை என பக்தர்கள் தெரிவித்தனர். அத்துடன், கோயிலில் இருந்தவை ஐம்பொன் சிலைகள் என்றும் பக்தர்கள் தெரிவித்ததால், அவை பல லட்சம் ரூபாய் மதிப்பிலானவையாக இருக்கக்கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். வலம்புரிச் சங்குகளும் விலை உயர்ந்தவை என்பதால், அவற்றையும் கொள்ளையர் திருடிச்சென்று விட்டனர்.

கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது, கோயிலின் உள்ளே ஒரே ஒரு நபர் மட்டுமே வருவது பதிவாகி இருந்தது. ஆனாலும், சிலைகள் அனைத்தையும் ஒரு நபர் மட்டுமே கொள்ளையடித்துச் சென்றிருக்க முடியாது என்பதால், பிற நபர்கள் குறித்தும், விசாரித்துவருகிறார்கள். கேமராவில் பதிவான நபர் முகமூடி அணிந்து இருந்ததால், அவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். 

Read 48 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…