JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

நடிகர் ரித்தீஷ் திடீர் மரணம்
நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் டைரக்டு செய்து நடித்த ‘கானல் நீர்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் ஜே.கே.ரித்தீஷ். ‘நாயகன்’, ‘பெண் சிங்கம்’, ‘எல்.கே.ஜி.’ உள்பட பல படங்களில் நடித்திருந்தார். 
 
இடையில் அரசியலில் நுழைந்தார். 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதால், அவரது ஆதரவாளராக செயல்பட்டு வந்த ஜே.கே.ரித்தீஷ் தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் சேர்ந்தார். மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளராக பதவி வகித்தார்.
 
நடிகர் சங்கம்
 
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தலைமையிலான அணியின் வெற்றிக்கு ரித்தீஷ் முக்கிய காரணமாக இருந்தார்.
 
சமீபத்தில் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் ராதாரவியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்த ‘எல்.கே.ஜி.’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜே.கே.ரித்தீஷ் நடித்திருந்தார்.
 
நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைந்தால் குணசித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார்.
 
தேர்தல் பிரசாரம்
 
இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த சில நாட்களாக தேர்தல் பணியாற்றிய ரித்தீஷ், 2 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் வந்தார்.
 
பின்னர் ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக சத்திரக்குடி, போகலூர், மணக்குடி பகுதிகளில் நேற்று காலை முதல் தேர்தல் பணியில் ஈடுபட்டார்.
 
மதிய உணவுக்காக ராமநாதபுரம், ஆர்.ஆர்.சேதுபதி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.
 
மாரடைப்பால் மரணம்
 
சாப்பிட்டபின் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
 
இதனையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்தனர். அவருக்கு இதய துடிப்பு இருப்பதாக உறவினர்கள் கூறியதையடுத்து மீண்டும் மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
 
இதைத்தொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அங்கு திரளாக கூடி அஞ்சலி செலுத்தினர்.
 
மரணம் அடைந்த ரித்தீசுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஹிருத்திக் ரோசன், ஹாரிக் ரோசன் ஆகிய 2 மகன்கள் மற்றும் தானவி என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளது.
 
ரித்தீசின் தந்தை குழந்தைவேலு இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். நயினார்கோவில் அருகே உள்ள மணக்குடி அவரது சொந்த ஊர்.
 
இறுதிச்சடங்கு
 
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்த ரித்தீஷ், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவியவர். சில மாதங்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்தரியில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்றிருந்தார். தற்போது மனைவி, குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்த ரித்தீஷ் தேர்தல் பணிக்காக ராமநாதபுரம் வந்தார். வந்த இடத்தில் திடீர் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
 
இந்த தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டு வந்தனர். ரித்தீசின் நெருங்கிய உறவினரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.ஜி.ரெத்தினம் மற்றும் குடும்பத்தினர் அவரது இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
 
ரித்தீசின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கமும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் இரங்கல் தெரிவித்து உள்ளன.
 
ஜே.கே.ரித்திஷ் மறைவுக்கு மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Read 63 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…