சிதம்பரத்தை பசுமை நகராக மாற்றிய பெருமை சோழ மன்னர்களையே சாரும் என வரலாற்று ஆய்வாளர் ரா.கோமகன் தெரிவித்தார். கங்கைகொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமம் சார்பில் சிதம்பரத்தில் ராஜேந்திர சோழன் வரலாறு இணையம் முனைவோர் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இணையதளம் வாயிலாக சோழர் கால வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வாளர்கள் சுமார் 200 பேர் பங்கேற்றனர். இரண்டு அமர்வுகளைக் கொண்ட இக்கருத்தரங்கில் தஞ்சை தமிழ்ப் பல்கலை. கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் சு.ராசவேலு, அரியலூர் அரசுக் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், கல்வெட்டு ஆய்வாளருமான இல.தியாகராஜன், முன்னாள் தமிழக தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வாளர் ஆ.பத்மாவதி, ஆத்தூர் அரசுக் கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன், தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் ஆய்வாளர் ச.பரணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில், கங்கைகொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுத் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ரா.கோமகன் பங்கேற்று பேசியது: சோழர்கள் காலத்தில் சிதம்பரம் நகரம் நிர்மாணிக்கப்பட்டபோது அகன்ற சாலைகள், குளங்கள் போன்றவை அமைக்கப்பட்டிருந்தன. அதிக நந்தவனங்களை ஏற்படுத்தி சிதம்பரத்தை ஒரு பசுமை நகராக மாற்றிய பெருமை சோழ மன்னர்களையே சாரும். முதலாம் ராஜராஜ சோழன், நடராஜர் கோயிலில் இருந்த தேவார சுவடிகளை தொகுத்ததோடு அல்லாமல், நூல் நிலையத்தில் பலநூறு ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டு அழிவின் விளிம்பில் இருந்த கிரந்த ஓலைச் சுவடிகளை மீட்டுருவாக்கம் செய்வதற்காக 20 பண்டிதர்களை நியமித்திருந்தான். இந்த நூல் நிலையத்தில் இருந்த ஆதார நூல்களைக் கொண்டே பிறகு வந்த சேக்கிழார் பெருமானார் பெரியபுராணத்தை எழுதியுள்ளார். சோழர் கால மக்களிடம் வேற்றுமைகள் இருந்தபோதும் அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். முதலாம் ராஜேந்திர சோழன் தனது கப்பற்படையினால் உலக நாடுகளில் தமிழக வணிக பெருமக்கள் பயமின்றி வணிகம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்ததன் விளைவே சோழர்கள் காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. அப்படிப்பட்ட சோழ மன்னர்களின் வரலாற்றுப் பதிவுகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்வதே இந்த விழாவின் நோக்கமாகும் என்றார். முடிவில் வரலாற்று ஆய்வாளர் சசிதரன் நன்றி கூறினார்.