திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை
தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
டில்லியில் இன்று( அக்.,6) பேட்டியளித்த தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத், ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார். தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவை ஒட்டி, திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., போஸ் மறைவை ஒட்டி திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளன.
இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி குறித்து ராவத்திடம் கேட்ட போது, '' கன மழை காலம் உள்ளிட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி தமிழக தலைமை செயலாளர் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி இருந்தார். திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்,'' என்றார்.