சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது...
சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி துவங்கியது.சென்னை உஸ்மான் சாலையில் இருந்த சென்னை சில்க்ஸ் கடையில் நேற்று அதிகாலை தீப்பிடித்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் 32 மணி நேரம் போராடி அணைத்தனர். தீ காரணமாக கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தீவிபத்து காரணமாக கட்டடம் பலம் இழந்தது. இதனால், அந்த கட்டடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. நிபுணர்களின் ஆலோசனையும் கேட்கப்பட்டது. கட்டடத்தை இடிக்க ராட்சத இயந்திரம் அங்கு வரழைக்கப்பட்டது. அந்த பகுதியில் இருக்கும் மக்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும், கட்டடம் அருகே யாரும் நிற்க வேண்டாம் எனவும் போலீசார் மைக் மூலம் அறிவுறுத்தினர். சில காரணங்களால் கட்டடம் இடிக்கும் பணி இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் கட்டடம் இடிக்கும் பணி துவங்கியது. 2 ராட்சத ஜா கட்டர் இயந்திரங்கள் மூலம் கட்டடம் மேல் இருந்து கீழாக இடிக்கப்பட்டு வருகிறது. 3 நாட்களில் கட்டடம் இடிக்கும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீ சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீவிபத்து...
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தொடர்ந்து 7 மணி நேரத்திற்கும் மேலாக தீப்பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அடித்தளத்தில் ஏற்பட்ட தீ தொடர்ந்து மேல் தளங்களுக்கும் பரவி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது.
தீயணைப்பு வீரர்களே உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதி அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தீ எரிந்து வரும் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தீ 7 மாடிகளுக்கும் பரவி உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து அனைவரையும் போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.
மாட்டிறைச்சி தடை எதிரொலி... விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல்...
மாட்டிறைச்சி தடைக்கு எதிராக புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை புதுச்சேரி ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் சிக்கிய 40 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள்...
சென்னை சூளைமேடு ஜக்கரியா காலனி இரண்டாவது தெருவில் வசிப்பவர் தண்டபாணி.
சென்னை கோடம்பாக்கத்தில் ராமநாதன் அன்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். சினிமா படப்பிடிப்புக்குத் தேவையான போலீஸ் சீருடைகளை இந்த நிறுவனத்தில் தண்டபாணி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசார் துணையுடன் இங்கு சோதனை நடத்தினர். அப்போது ரூ.40 கோடிக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. செல்லாத ரூ. 40 கோடியை பறிமுதல் செய்த காவல்துறை, தீவிர விசாரணை நடத்தி வருகிறது..
சென்னையில் பேருந்து இயங்காததால்.. ரூ.1 கோடி வருவாய் இழப்பு...
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் சென்னையில் மட்டும் ரூ.1 கோடி வருவாய் இழப்பு எனத் தகவல் அளித்துள்ளனர். சென்னையில் தினசரி 3800 பேருந்துகள் ஓடும் நிலையில் இன்று 300 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் ரூ.1 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.