JoomlaLock.com All4Share.net

Background Video

போதையில் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி பலி: சென்னை தொழிலதிபர் மகளின் ஜாமின் மனு தள்ளுபடி: ஐகோர்ட்

குடிபோதையில் ஓட்டிவந்த கார் மோதி கூலி தொழிலாளியின் இறப்புக்கு காரணமான ஐஸ்வர்யாவின் ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

சென்னை திருவான்மியூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 45). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2-ம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் தரமணி ராஜீவ்காந்தி சாலையை கடந்து செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று முனுசாமி மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட முனுசாமி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்றார். பெருங்குடி அருகே அந்த காரை மடக்கிப்பிடித்தார். அப்போது காரில் 3 பெண்கள் மதுபோதையில் இருந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரில் இருந்த 3 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அதில், சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த தொழில் அதிபரின் மகளான ஐஸ்வர்யா (26) என்பவர் தனது தோழிகளுடன் வார விடுமுறையை கொண்டாட தனது சொகுசு காரில் சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வருவதும் தெரிந்தது. இதுபற்றி கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து போதையில் காரை ஓட்டி வந்த ஐஸ்வர்யாவை கைது செய்தனர்.

கைதான ஐஸ்வர்யாவை சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு மோகனா உத்தரவிட்டார்.

இந்நிலையில், தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என ஐஸ்வர்யாவின் சார்பில் அவரது வக்கீல் தாக்கல் செய்திருந்த மனுவை இன்று சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. விபத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவரும் நீதிமன்றத்தை அணுகாமல் ஐகோர்ட்டில் ஜாமினுக்காக மனு செய்துள்ளதை சுட்டிக்காட்டி அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யபடுவதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Published in தமிழகம்

ட்ரென்டன்(யு.எஸ்): வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் (FeTNA)2016 ஆம் ஆண்டு தமிழ் விழா, நியூஜெர்ஸி மாநிலம் ட்ரென்டன் நகரில் இன்று தொடங்கியது.

வரும் ஜூலை 4-ம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது.

தனித் தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டமாக இந்த ஆண்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரவிந்த் சாமியும் விஜய் பிரகாஷும்

முதல் நாள் நிகழ்வாக நன்கொடையாளர்கள் சிறப்பு விருந்துடன் விழா ஆரம்பமாகி உள்ளது.

நடிகர் அரவிந்த் சாமி, 'தமிழிசை' டிஎம்கிருஷ்ணா, சித்த மருத்துவர் சிவராமன், பேராசிரியர் ராமசாமி, பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், தமிழ் மரபு அறக்கட்டளை டாக்டர் சுபாஷிணி, சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்பாளர் வைதேகி ஹெர்பர்ட், பாடகர் விஜய்பிரகாஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், விழா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பழனிசாமி சுந்தரம், நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத் தலைவர் உஷா கிருஷ்ணகுமார் ஆகியோர் விழாவுக்கு அனைவரையும் வரவேற்றனர். நன்கொடையாளர்களின் கூட்டத்தால் அரங்கம் நிரம்பி வழிந்தது

தமிழ் தொழில் முனைவோர் கூட்டம்

சனிக் கிழமை விழா தமிழ் மறை ஓதுதல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. அன்று முழுவதும் தமிழ் தொழில்முனைவோர் கூட்டம் இணை அமர்வில் நடைபெற உள்ளது. இதில் அரவிந்த்சாமி, தொழில்முனைவோராக கலந்து கொண்டு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

அமெரிக்க நிறுவனங்களில் CEO, CIO என உயர்பதவிகளில் பணியாற்றும் பல்வேறு தமிழர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்கள் ஐடியாக்களை முதலீட்டார்கள் முன்னிலையில் சமர்ப்பித்து, தேர்ந்தெடுக்கப்படும் புதிய முயற்சிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கங்கை கொண்ட சோழன்

முக்கிய அரங்கத்தில் சிறப்பு விருந்தினர்களின் நிகழ்ச்சிகளுடன், பல்வேறு இணை அமர்வு நிகழ்ச்சிகளும் நாள் முழுவதும் நடைபெற உள்ளது. மருத்துவர்களுக்கான தொடர் கல்விக்கான முகாம், இலக்கிய வினாடி வினா, தமிழ்ச் சங்கங்களின் கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் தேனீ, தமிழ்த்தேனி, கவியரஙகம், இலக்கிய சொற்பொழிவு என சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திருவிழா போல் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மாலை நேர சிறப்பு நிகழ்ச்சிகளாக கங்கை கொண்ட சோழன் நாடகமும், விஜய் பிரகாஷ், ஜெசிக்கா ஜூட், ஹரிப்ரியா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது.

கனடா எம்.பி கரி அனந்த சங்கரி மற்றும், அமெரிக்க காங்கிரஸ் சபை தேர்தல் வேட்பாளார் ராஜா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

மூன்றாவது ஆண்டாக ஃபெட்னா குறும்படப் போட்டியும் தமிழ் விழாவின் அங்கமாக நடைபெற உள்ளது.

வட அமெரிக்கா முழுவதிலிருந்தும் தமிழர்கள் நியூஜெர்ஸி ட்ரென்டன் நகரில் குழுமியுள்ளனர்.

விழா நடைபெறும் பகுதியில் எங்கு திரும்பினாலும் தமிழ்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

Published in உலகம்

அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதியமைச்சர் பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார். சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 2வது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது அ.தி.மு.க., உறுப்பினர் வெற்றிவேல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவை முன்னவர் பன்னீர்செல்வம், அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறினார்.இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக பன்னீர்செல்வம் பேசியதாவது: இலங்கை தமிழர் விவகாரம் குறித்து கவர்னர் உரையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும், சம உரிமை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Published in அரசியல்
வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2016 00:00

தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளது

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளது. 1 வாரத்திற்கு முன் கிலோ ரூ.110-க்கு விறக்கப்பட்ட தக்காளி விலை, படிப்படியாக குறைந்து உயர் ரக தக்காளி ரூ.50-ஆகவும், இரண்டாம் ரக தன்னாளி கிலோ ரூ.40-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேட்டை தவிர பிற இடங்களில் உயர் ரக தக்காளி கிலோ ஒன்று ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது. எனினும் பருப்பு விலையும் சற்று அதிகமாக இருப்பதால் இல்லத்தரசிகளின் புலம்பல் குறையவில்லை. கடந்த சில நாட்களாக விலை அதிகமாக இருந்ததால் தக்காளியை வாங்க யாரும் முன் வரவில்லை. இதனால் படிப்படியாக விலை குறைந்தது. கேரட் ஒரு கிலோ ரூ.60-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.90 - 120-க்கும் விற்கப்படுகிறது.

தக்காளி மற்றும் காய்களின் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. விலையை கட்டுக்குள் கொண்டு வந்து ஏழை மக்களும் பயன் பெறும் வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published in தமிழகம்

விவசாயத்துக்கு வேட்டு வைக்கும் கருவேல மரங்களை இந்த மண்ணில் இருந்து அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் வெப்பமயமாவதால் 'மரங்களை நடுங்கள்' என்று உச்சகட்ட குரல் உலகெங்கும் ஒழித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு இணையாக, 'கருவேல மரங்களை அழியுங்கள்' என்ற குரல்களும் நமது நாட்டில் ஒலிக்கின்றன. அமெரிக்க தாவரவியல் பூங்காவில் 'வளர்க்கக் கூடாத நச்சுமரங்கள்' என்றொரு தனிப்பட்டியலில் நம்மூரு கருவேல மரமும் உள்ளது. எவ்வகை வறட்சியிலும் இம்மரம் நன்றாக வளரும். பூமியின் அடி ஆழம் வரை வேர்களை பரப்பி, நீரை உறிஞ்சும் தன்மை வாய்ந்தது. இதனால், நமது ஊர் விளைநிலங்கள் நிலத்தடி நீர் இல்லாத கட்டாந்தரையாக மாறி வருகிறது.

இம்மரங்கள் காற்றில் இருக்கும் குறைந்த ஈரப்பதத்தையும் உறிஞ்சுவதால், 'மேகத்தில் குளிர்ந்த காற்றுப் பட்டு மழை பெய்யும்' வாய்ப்பையும் நமது தென்மாவட்டங்கள் இழந்து வருகின்றன. நீர் விரும்பிகள்' பட்டியலில் வேலிக்கருவேல மரத்துக்கு முக்கிய இடம் உண்டு. கண்மாய், ஆற்றின் கரைகள், நீரோடைகள், படுகைகள் மற்றும் கால்வாய் கரையோரங்களில் கருவேல மரங்கள் செழித்து வளர்கின்றன. நூறு அடி ஆழத்திற்கும் நிலத்தில் இம்மரத்தின் வேர் இறங்குவதால், மண்ணின் ஈரப்பதம் எளிதில் வறண்டு விடுகிறது. 1950ல், வேலிப்பயிராக கருவேல மரங்கள் தமிழகத்தில் அறிமுகமாகின. இம்மரம் தான் உறிஞ்சும் நீரில், 3 சதவீதத்தை, தன் செல்கள் வளர பயன்படுத்துகின்றன; எஞ்சியுள்ள 97 சதவீத நீர், இலைகள் வழியாக ஆவியாகிறது. 70 அடி ஆழத்திற்கு, கருவேல மரத்தின் வேர் சென்றால், 75 அடி ஆழத்திற்கு நிலத்தடி நீர் கீழிறங்கிவிடும். தொடர்ந்து இயற்கை ஏமாற்றி வரும் நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கருவேல மரங்களின் வளர்ச்சியால் வறண்ட பிரதேசமாக மாறும் அபாயமாக உள்ளது. கருவேல மரத்திற்குக் கீழ் கட்டும் கால்நடைகள் 'மலடாக, மாறுகின்றன. மீறி ஈனும் கால்நடைகளின் குட்டிகள் ஊனமாக பிறக்கின்றன. இந்த மரத்தில் பறவை கூடு கட்டுவதும் மிகக்குறைவு. ஆக்ஸிஜனை குறைவாகவும், கரியமிலவாயுவை அதிகமாகவும் வெளியிடுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, கருவேல மரங்களை அகற்றுவதை நமது கடமையாக கருதி செயல்பட வேண்டும். தேனி கெப்புரங்கன்பட்டி கிராம வனக்குழுத் தலைவர் முருகன்: விவசாயிகளின் விரோதியான கருவேல மரங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை கிராம ஊராட்சிகள் செயல்படுத்த வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கருவேல மரங்களை அகற்ற வரும்போது, விழிப்புணர்வு குறைவாக உள்ள கிராம மக்கள் நிலத்தில் ஆடு, மாடு வராமல் பாதுகாக்க கருவேலம் மரம் இருப்பதாக கூறி தடுக்கின்றனர். எனவே அரசு கருவேல மர தீமைகள் குறித்து தீவிர விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். உத்தமபாளையம் ரபீக் அகமது: கருவேல மரங்கள் இல்லாத இடங்களே இல்லை. நிலத்தடி நீர்மட்டத்திற்கு வேட்டு வைப்பதுடன், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. எனவே, கருவேல மரங்களை அழித்து, மழைதரும் வேம்பு, ஆல், புங்கை மரங்களை நடவேண்டும். மக்களின் எதிர்கால வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும். தேவாரம் காளிமுத்து: வறண்ட பூமியாக உள்ள தேவாரம் பகுதியில் கருவேல மரங்கள் அதிகமாக உள்ளன. நமது சந்ததியினருக்கு நிலத்தடி நீராதாரத்தை வைத்து செல்ல வேண்டும் என்றால், கருவேல மரங்களை அழிக்க வேண்டும். கம்பம் ஆரோக்கியம்: வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இந்த மரங்கள் இல்லை. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கருவேல மரங்களாக காட்சியளிக்கிறது. இதனை உடனடியாக அகற்ற அரசு முன்வரவேண்டும். ஆண்டிபட்டி குமார்: ஆண்டிபட்டி பகுதியில் அனுப்பபட்டி, சித்தையகவுண்டன்பட்டி, புள்ளிமான்கோம்பை, மொட்டனூத்து உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்களில் கருவேலஞ் செடிகள் வளர்ந்து மரங்களாக உள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் 500 அடிக்கும் கீழே சென்று விட்டது. எனவே, கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Published in தமிழகம்
பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…