சென்னை தொழிலதிபர் மகளின் ஜாமின் மனு தள்ளுபடி: ஐகோர்ட்
போதையில் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி பலி: சென்னை தொழிலதிபர் மகளின் ஜாமின் மனு தள்ளுபடி: ஐகோர்ட்
குடிபோதையில் ஓட்டிவந்த கார் மோதி கூலி தொழிலாளியின் இறப்புக்கு காரணமான ஐஸ்வர்யாவின் ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை திருவான்மியூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 45). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2-ம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் தரமணி ராஜீவ்காந்தி சாலையை கடந்து செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று முனுசாமி மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட முனுசாமி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்றார். பெருங்குடி அருகே அந்த காரை மடக்கிப்பிடித்தார். அப்போது காரில் 3 பெண்கள் மதுபோதையில் இருந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரில் இருந்த 3 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அதில், சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த தொழில் அதிபரின் மகளான ஐஸ்வர்யா (26) என்பவர் தனது தோழிகளுடன் வார விடுமுறையை கொண்டாட தனது சொகுசு காரில் சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வருவதும் தெரிந்தது. இதுபற்றி கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து போதையில் காரை ஓட்டி வந்த ஐஸ்வர்யாவை கைது செய்தனர்.
கைதான ஐஸ்வர்யாவை சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு மோகனா உத்தரவிட்டார்.
இந்நிலையில், தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என ஐஸ்வர்யாவின் சார்பில் அவரது வக்கீல் தாக்கல் செய்திருந்த மனுவை இன்று சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. விபத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவரும் நீதிமன்றத்தை அணுகாமல் ஐகோர்ட்டில் ஜாமினுக்காக மனு செய்துள்ளதை சுட்டிக்காட்டி அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யபடுவதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சொகுசு கார் மோதி ஒருவர் உயிரிழந்த விவகாரம்: தொழிலதிபர் மகள் கைது
சென்னையில் சொகுசு காரைஒட்டி விபத்து ஏற்படுத்திய தொழிலதிபர் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேத்துப்பட்டுவை சேர்ந்த ஐஸ்வர்யா தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் ஆவார். தரமணியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி முனுசாமி என்பவர் இறந்தார்.