JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

டில்லி : விவசாயிகள் போராட்டம் - போலீஸ் தடியடி

கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி நோக்கி ஊர்வலம் சென்ற, உத்தரபிரதேசத்தை சேர்ந்த, 30 ஆயிரம் விவசாயிகள், டில்லி - உ.பி., எல்லையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும், விவசாயிகளை, போலீசார் கலைக்க முற்பட்டதால், அந்த பகுதியே கலவர பூமியாக மாறியது.

உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய கடன் தள்ளுபடி, 60 வயது கடந்தோருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராடி வருகின்றனர். போராட்டத்தின் அடுத்த கட்டமாக, உ.பி.,யை சேர்ந்த, 30 ஆயிரம் விவசாயிகள், வாகனங்களில், தலைநகர் டில்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

டில்லி, ராஜ்காட் அருகே, விவசாயிகள் தலைவர் சவுத்ரி சரண் சிங்கின் நினைவகத்துக்கு சென்று, போராட்டம் நடத்த, அவர்கள் திட்டமிட்டனர். ஆனால், டில்லி - உ.பி., எல்லை அருகே, விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். முன்னேறி செல்ல விடாமல் தடுக்க, தடுப்பு அரண்களை போலீசார் அமைத்திருந்தனர். அவற்றை தள்ளி, முன்னேறிச் செல்ல விவசாயிகள் முயன்றனர். ஆனால், கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீர் பீய்ச்சும் இயந்திரம், தடியடி ஆகியவற்றால் விவசாயிகளை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால், போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. தடுப்பு அரண்களை அடித்து உடைத்த விவசாயிகள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதனால், அந்த இடமே போர்க்களமாக மாறியது. போலீசார் தடியடி நடத்தியதில், ஏராளமான விவசாயிகள் காயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங்கை, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய விவசாயிகள் நலத்துறை அமைச்சர், கஜேந்திர சிங் ஷெகாவத், நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார்.

ஆனால், விவசாயிகள் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த, பாரதிய விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறியதாவது: சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகள் அமலாக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் இணக்கம் ஏற்படவில்லை. விவசாயிகள் விடுத்த, 11 கோரிக்கைகளில், ஏழு மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கோரிக்கைகள், நிதி சம்பந்தப்பட்டதாக இருப்பதால், ஆலோசித்து முடிவு கூறுவதாக தெரிவித்துள்ளனர். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

விவசாயிகள் போராட்டத்தையொட்டி, டில்லி - உ.பி., எல்லையில், உ.பி., மாநில போலீசார், எல்லை பாதுகாப்பு படையினர், அதிரடி படை வீரர்கள் என, ஆயிரக்கணக்கானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

காங்., தலைவர் ராகுல், 'டுவிட்டர்' சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில், 'மத்திய ஆட்சியில், விவசாயிகளால் தங்கள் துயரங்களை கூட வெளிப்படுத்த முடியாத நிலை உள்ளது. விவசாயிகள் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்' என, குற்றம்சாட்டி உள்ளார். போராட்டத்தில் குதித்துள்ள விவசாயிகளுக்கு, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Read 31 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…