உத்தரப் பிரதேசத்தில் உருளைக் கிழங்கிற்கான மொத்த விற்பனை விலை கிலோ 20 பைசாவாக உள்ளதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் உருளைக்கிழங்கு அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது அதிக உற்பத்தி காரணமாக விலை சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதன் காரணமாக குளிர்பதன கிடங்குகளில் இருந்து உருளைக்கிழங்கை விவசாயிகள் திரும்ப பெறாமல் உள்ளனர் உருளை அழுகத் தொடங்கியுள்ளதால் குளிர்பதன கிடங்கு உரிமையாளர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அழுகிய உருளைக்கிழங்குகளை என்ன செய்வது என்று தெரியாமல் சாலைகளில் கொட்டி வருகின்றனர் ஆக்ராவில் மட்டும் விற்பனை செய்யப்படாமல் 2.5 லட்சம் டன் உருளைக்கிழங்கு வீணாகியுள்ளது. ஐம்பது கிலோ அடங்கிய உருளைக்கிழங்கு மூட்டையின் விலை ரூ.10 ஆக குறைந்துள்ளது. அதாவது, ஒரு கிலோ விலை 20 பைசா மட்டுமே.
இதனை தவிர்த்து விவசாயிகள் மிகப்ெபரிய மார்க்கெட்டிற்கு உருளைக்கிழங்கை விற்பனைக்கு எடுத்து செல்லவேண்டும் என்றால் அவர்களுக்கு வாகன போக்குவரத்து செலவு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைப்பதற்கு ஒரு மூட்டைக்கு ரூ.110 கட்டணமாக வழங்க வேண்டும். இதனால், அவர்களுக்கு நெருக்கடியான நிலை ஏற்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் மொத்த விற்பனை விலை ரூ.400 ஆக இருந்தது.
இப்போது, விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. விலை சரிவு காரணமாகவும், மேலும் நஷ்டத்தை தவிர்க்கவும் விவசாயிகள் குளிர்பதன கிடங்கில் இருந்து உருளையை திரும்ப பெறாமல் உள்ளனர்.