JoomlaLock.com All4Share.net

Background Video

ஜம்மு - காஷ்மீரில், அரசியல் கட்சித் தலைவர்கள், 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை, சமீபத்தில் ரத்து செய்தது. இதையடுத்து, காஷ்மீரில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், காஷ்மீரில், சிலர், கலவரத்தை துாண்டி விடலாம் என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள், 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என, 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது:  முன் எச்சரிக்கையாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர், மெஹபூபா முப்தி உள்ளிட்டோர், கைது செய்யப்பட்ட தலைவர்களில் முக்கியமானவர்கள்.இவர்கள், அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; நிலைமை சீரடைந்ததும் விடுவிக்கப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார். Image result for jammu - kashmir condition images photos

இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் முழு அமைதி நிலவுகிறது. ஒரு சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தாலும், பாதுகாப்பு படையினர் நடவடிக்கையால், நிலைமை உடனடியாக சீரமைக்கப்பட்டது. சில இடங்களில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பின், நேற்று, ஸ்ரீநகரில், ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தாலும், வீதிகளில் மக்கள் நடமாட்டம் இருந்தது. பாதுகாப்பு படையினர், தொடர்ந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், கவர்னர், சத்யபால் மாலிக்குடன், பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

கவர்னர் ஆய்வு:  இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து, அம்மாநில கவர்னர், சத்யபால் மாலிக், நேற்று ஆய்வு நடத்தினார். பின், நிலைமை திருப்திகரமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து மருத்துவமனைகளிலும், அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. மார்க்கெட்களில், கடைகள் திறந்துள்ளன. அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்கி வருகின்றனர். மின் மற்றும் குடிநீர் வினியோகம் சீராக உள்ளது. மாநிலம் முழுவதும் அமைதி நிலவுகிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் மக்கள் அல்லது சுற்றுலா பயணியர் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை உடனடியாக தொடர்பு கொள்ளவும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்தது பங்களா: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, குலாம்நபி ஆசாத் ஆகியோர், ஸ்ரீநகரில் உள்ள அரசு பங்களாவில் தங்கி உள்ளனர். இதில், குலாம் நபி ஆசாத்தை தவிர மற்றவர்கள், 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து, அரசு பங்களாக்களை சொகுசாக மாற்றி உள்ளனர். தற்போது, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு பங்களாக்களை முன்னாள் முதல்வர்கள் காலி செய்ய, உத்தரவு பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களுடன் சாப்பிட்ட தோவல்: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்களுடன் உரையாடியபடி, மதிய உணவு சாப்பிடும், 'வீடியோ' வெளியாகி உள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி முடிவுக்கு, தோவலின் பங்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…