பெண்கள் மீது காட்டுத்தனமாக காவல் அதிகாரி தாக்கி இருக்கிறார்...
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்கள் மீது காட்டுத்தனமாக காவல் அதிகாரி பாண்டியராஜன் அவர்கள் தாக்கி இருக்கிறார். அந்தப் பெண்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய போது அவர்கள் விவரித்த நிகழ்வு எனது மனதை உருக்குவதாக இருந்தது.
அடி வாங்கிய ஒரு பெண்ணிற்கு காது கேட்கவில்லை. பல பெண்கள் உடல்களில் ரத்தக்கட்டு ஏற்படும் அளவிற்கு காவல் துறையினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணமான காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் உடனே பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
அவரின் சொந்த சகோதரியைப் போல் பார்க்க வேண்டிய பெண்களை அடித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவர்களோடு போராடிய இளைஞர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு போடப்பட்டிருக்கிறது. அது வாபஸ் பெறப்பட வேண்டும். கைதானவர்கள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும்.
இனிமேல் எந்த மதுக்கடையும் திறக்க முடியாத அளவிற்கு பா.ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தும். வரும் 18-ந் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பிரதான மதுக்கடைகள் (டாஸ்மாக்) முன்பாக பா.ஜனதா கட்சி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கட்சி சார்பு அற்று மதுவை எதிர்ப்பவர்கள் என அத்தனை பேரையும் இணைத்துக்கொண்டு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும்.
மத்திய அமைச்சரவையிலிருந்து 5 பேர் நீக்கம்
மத்திய அமைச்சரவையில் 19 பேரை புதிதாக சேர்க்கப்பட்டதை தொடர்ந்து 5 இணையமைச்சர்கள் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் பரிந்துரையை தொடர்ந்து இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.01. பஞ்சாயத்து துறை இணையமைச்சராக இருந்த நிகல்சந்த் மேகாவால். இவர் ராஜஸ்தான் மாநிலம் காங்காநகர் தொகுதியிலிருந்து தேர்வானவர். இவர் மீது கற்பழிப்பு புகார் உள்ளது.02. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சராக இருந்த ராம் சங்கர் கதாரியா. இவர் உ.பி., மாநிலம் ஆக்ரா தொகுதியிலிருந்து தேர்வானவர்.03. மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சன்வர்லால் ஜாட், இவர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தொகுதியில் தேர்வு செய்யப்பட்டவர்.04. மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சராக இருந்த மனுசுக்பாய் டி வாசவா. இவர் குஜராத் மாநிலம் நர்மதா தொகுதியிலிருந்து தேர்வானவர்05. விவசாயத்துறை இணையமைச்சர் எம்.கே.குந்தாரியா. இவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியிலிருந்து தேர்வானவர்.
மோடி:இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து
20 செயற்கைகோள்களை தாங்கிய பிஎஸ்எல்வி சி 34 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், மக்களுக்கு பயன்படும் வகையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டத்தை மீண்டும் ஒரு முறை நமது விஞ்ஞானிகள் சாத்தியப்படுத்தி உள்ளனர். விண்வெளி ஆய்வில் பிற நாடுகளுக்கும் உதவும் வகையிலான திறன் கொண்ட ராக்கெட்டை பல ஆண்டுகளாக நமது விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றன.இது தான் நமது விஞ்ஞானிகளின் தனித்திறன்.ஒரே நேரத்தில் 20 செயற்கைகோள்களை அனுப்பி இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. அதற்காக நமது விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சென்னை மற்றும் புனே மாணவர்கள் வடிவமைத்த செயற்கைகோள்களும் இன்று ஏவப்பட்டுள்ளதை பார்கையில் உற்சாகம் அளிக்கிறது. இது என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அறிவியலின் புதிய சாதனையில் நமது இளைஞர்கள் திறன் பெற்றுள்ளதை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம்
நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.
பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மதத்தினர் ஒன்றுகூடி யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக யோகா பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சண்டிகரில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி யோகா பயிற்சியில் கலந்துகொண்டார். காலை 6.30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் என 30 ஆயிரம் பேர் திரண்டனர்.
யோகா தினத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் யோகாவுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. யோகாவின் பயன்கள் மற்றும் சக்தியை பலர் அறியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று மோடி பேசியுள்ளார்.
சண்டிகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 21 மாநிலங்களில் இருந்து பள்ளி குழந்தைகள் கலந்து கொள்ளும் விதமாக "ஒலிம்பியாட்" என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது.
யோகாவை பிரபலப்படுத்துவோரை கவுரவிக்கும் வகையில், அடுத்த ஆண்டு (2017) முதல் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் இரண்டு விருதுகள் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்...
தலைநகர் டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள பிரதமரின் இல்லத்திற்கு சென்ற ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தமிழகத்தின் பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் ஜெயலலிதா அளித்தார். சந்திப்பின் போது ராம மோகனராவ், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.