JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழக்கிழமை, 01 மார்ச் 2018 00:00

ரியைலன்ஸ் டி டி ஹெச்சின் அதிரடி சலுகை

Written by

அனில் அம்பானியின், ரிலையன்ஸ் பிக் டிவி புது ஆஃபர்களை வெளியிட்டு பிற டிடிஎச் சேவை நிறுவனங்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. சகோதரர் முகேஷ் அம்பானியின் ஜியோ, செல்போன் சேவை துறையில், அதிரடி சலுகைகள் மூலம் பெரும் அளவிற்கு வாடிக்கையாளர்களை ஈர்த்ததை போல டிடிஎச் சேவையில் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது அனில் அம்பானியின் 'பிக் டிவி'. இதற்காக ஜியோவை போலவே, இலவசம் என்ற கவர்ச்சி அறிவிப்பை கையில் எடுத்துள்ளது பிக் டிவி.

ரிலையன்ஸ் பிக் டிவியின் இயக்குநர், விஜேந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுபற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி டிடிஎச் சேவையை புக் செய்ய பிக் டிவியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான www.reliancedigitaltv.com ல், ரூ.499 செலுத்த வேண்டும். டிடிஎச் வீட்டில் பொருத்தப்படும்போது எஞ்சிய ரூ.1500 தொகையை செலுத்த வேண்டும். டிஷ் ஆன்டனாவை பொருத்துவதற்கு ரூ.250 கொடுக்க வேண்டும்.

அதேநேரம், இந்த 2000 ரூபாய், வாடிக்கையாளர்களுக்கே 3 வருடங்களுக்கு பிறகு ரீசார்ஜ் தொகை என்ற வகையில் திரும்ப கிடைக்கும். இப்படி இந்த தொகை திரும்ப கிடைக்க வேண்டுமானால், 2வது வருடத்தில் இருந்து தொடர்ந்து 2 வருடங்களுக்கு, மாதம் ரூ.300 ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தில் 5 வருடங்களுக்கு 500 சேனல்கள் ஃப்ரீயாக கிடைக்கும், கட்டண மற்றும் எச்டி சேனல்களையும் ஓராண்டு இலவசமாக பார்த்துக்கொள்ள முடியும். பிக் டிவி வழங்கும் செட்ஆப் பாக்சில், ரெக்கார்டிங், யூடியூப் மற்றும் யூஎஸ்பி வசதிகளும் இணைந்திருக்கும் என்பது சிறப்பு.  பிக் டிவி டிடிஎச்சுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் துவங்கியுள்ளது. இதனால் பிற டிடிஎச் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தில் சலுகை காட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்கள் மார்க்கெட் பார்வையாளர்கள்.


கடன் சுமை அதிகரித்ததால் ஏர்செல் நிறுவனத்தைத் திவாலானதாக அறிவிக்கக்கோரி அந்நிறுவனம் சார்பில் தேசிய கம்பெனி தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்திய தொலைத்தொடர்புத்துறை சந்தையில் முக்கிய நிறுவனமாக இருந்த ஏர்செல் கடன் சுமையால் தத்தளித்து வருகிறது. அந்நிறுவனத்துக்கு சுமார் ரூ.15,000 கோடி கடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏர்செல் நிறுவன சேவை பல இடங்களில் கிடைக்கவில்லை.

செல்போன் டவர் உரிமையாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை பாக்கி இருந்ததே இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து ஏர்செல் நிறுவனம் சேவைகளை நிறுத்திக் கொள்ளும் என்று தகவல் வெளியானது. ஆனால், அதை அந்நிறுவனம் மறுத்தது. கடன் இருப்பது உண்மைதான். அதற்காகச் சேவையை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை என்று நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று மீண்டும் ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவு தலைமைச் செயல் அதிகாரி அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். செல்போன் கோபுரங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்களுடன் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அவர் அறிவித்தார். வாடிக்கையாளர்கள் வேறு ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறும் கூறினார். இது வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சூழலில், ஏர்செல் நிறுவனத்தை திவாலானதாக அறிவிக்கக்கோரி மும்பை தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் அந்நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாருதி சுஸுகி கார் சந்தையில் பெட்ரோல், டீசல் கார்கள் தற்போது விற்பனையாகி வருகின்றன. அதே கார்களை எதிர்காலத்தில் ஹைபிரிட் அல்லது முழு மின்சாரம் தேர்வில் மாருதி சுஸுகி தயாரிக்க ஆயத்தமாகி வருகிறது.

அதன்படி, ஹேட்ச்பேக் ரக கார்களான ஆல்டோ, செலிரியோ, ஸ்விப்ட் கார்களில் துவங்கி, எஸ்யூவி (ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிக்கிள்) ரக கார்களான டிசையர், பலேனோ, பிரிஸ்ஸா வரை புதிய தலைமுறை மாடலாக மாற்றப்படும்போது அவை மின்சாரம் அல்லது ஹைப்ரிட் தேர்வுகளிலும் வெளிவரலாம். இந்திய அரசு, வாகன பயன்பாட்டை 2030ம் ஆண்டிற்குள் மின்சார ஆற்றலுக்கு மாற்ற முயற்சித்து வருகிறது.

இந்த காலவரையை அடைவதற்குள் மாருதியின் மின்சார மற்றும் ஹைபிர்ட் கார்கள் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதியின் பிரபல கார்களில் ஒன்றான சியாஸ் மற்றும் எர்டிகா மாடல்கள் ஏற்கனவே இந்தியாவில் மைல்டு-டீசல் ஹைபிரிட் தேர்வில் விற்பனையில் உள்ளது.

இதன் காரணமாக, இந்த நிலைப்பாட்டை மாருதி எடுத்திருப்பது புதிதல்ல. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகும், அது திருத்தப்பட்டபோதும், மைல்டு-ஹைபிரிட் மற்றும் முழு-ஹைபிரிட் கார்களின் வரி விதிப்பு அதிகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, மின்சார திறன் பெற்ற கார்கள் ஜிஎஸ்டி-க்கு கீழ் 12 சதவீத வரி விதிப்பை பெறுகின்றன. 

அரசின் அதிகாரம் இப்படி இருப்பதால், பல்வேறு கார் நிறுவனங்கள் ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு பதிலாக மின்சார கார்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. வாகனங்களை மின்சார ஆற்றலுக்கு மாற்றும் முடிவை இந்திய அரசு முன்னதாகவே எடுத்திருந்தாலும், அதற்கு ஏற்றவாறு கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் இதுவரை பெரியளவில் தொடங்கவில்லை.

எதிர்காலத்தில் வாகன பயன்பாடு மின்சார ஆற்றலுக்கு மாறப்போகிறது என்பது தெரியாமலேயே பலர் உள்ளனர். மஹாராஷ்டிராவின் நாக்பூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்புகள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசின் மின்சார வாகன பயன்பாட்டை முழுவதுமாக அமல்படுத்த பலம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்புகளை நிறுவுவது அவசியம். அதுவரை ஹைபிரிட் கார்களை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்தலாம்.

புதன்கிழமை, 14 பிப்ரவரி 2018 00:00

இனி சாதாரண மொபைல் போனிலும் ஜிபிஎஸ்

Written by

சாதாரண மொபைல் போனிலும் ஜிபிஎஸ் வைக்க உத்தரவிட உள்ளது மத்திய அரசு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில், அனைத்து மொபைல் போன்களிலும் ஜிபிஎஸ் வசதி மற்றும் எச்சரிக்கை பட்டன் இருப்பது கட்டாயம் என்ற உத்தரவை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவ ஜிபிஎஸ் மற்றும் எச்சரிக்கை பட்டன் இடம்பெற செய்ய வேண்டும் என அனைத்து மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கும் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் தங்களது உற்பத்தி செலவு அதிகரிக்கும் என உரிமையாளர்கள் கூறியதை தொடர்ந்து சாதாரண போன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சக அதிகாரிகள், தொலைதொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா மற்றும் மொபைல் போன் உற்பத்தியாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து ஜிபிஎஸ் வசதி எச்சரிக்கை பட்டன் பொருத்த விலக்கு அளித்து 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற்று கொள்வதாக தொலைதொடர்பு அமைச்சக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இத்தகவலை பெண்கள் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதன் மூலம் அனைத்து சாதாரண மொபைல்களிலும் ஜிபிஎஸ் மற்றும் எச்சரிக்கை பட்டன் இடம்பெறுவது அவசியமாகிறது.

 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடியாக பணபரிமாற்றம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பங்குச்சந்தைகளில் அந்நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிவடைந்தன.

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மோசடிகள் நடந்ததது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து 280 கோடி ரூபாயை ஏமாற்றியதாக வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் ஆகியோர் மீதும் மோசடி புகார் உள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் பல வாடிக்கையாளர்களுக்கு முறைகேடான முறையில் பண பரிமாற்றம் செயயப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே பணப் பரிவர்த்தனை செய்த வகையில் பல கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது.

சுமார் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பங்குச்சந்தைக்கு அந்த வங்கியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் வெளியானதால், பங்குச்சந்தைகளில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் சரிவடைந்தன. 10.50 ரூபாய் சரிவடைந்து 151.15 ரூபாயாக வர்த்தகமாகின.

செவ்வாய்க்கிழமை, 13 பிப்ரவரி 2018 00:00

ஏறுமுகத்தில் இந்திய பங்குசந்தை

Written by

தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 295 புள்ளிகள் உயர்ந்து 34,000 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 10,539 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை, 11 பிப்ரவரி 2018 00:00

உஷார் : சந்தையில் உலவும் கலப்பட தேங்காய் எண்ணெய்

Written by

தேங்காய் உற்பத்தி குறைந்து வரும் நிலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற ஒயிட் பாமாயில், பாம்கெர்னல் ஆயில் ஆகியவற்றை தேங்காய் எண்ணெய்யாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம், கேரளாவில் தென்னை மரம் சாகுபடி நடைபெறுகின்ற பகுதிகளில் பல இடங்களிலும் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. வறட்சி காரணமாகவும் தேங்காய் உற்பத்தி சரிய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தேங்காய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளுக்கும் தேங்காய் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது தேங்காய் விலை உயர்வுக்கு மற்றொரு காரணம் ஆகும்.

இதனால் தேங்காய் விலை படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் தற்போது கிலோ ரூ.52 வரை விற்பனை செய்யப்படுகிறது. அப்போதும் தரமான தேங்காய் கிடைப்பது இல்லை. குறிப்பாக எண்ணெய் சத்து குறைவாகவே இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தேங்காய் எடுத்து வரும் நிலை உள்ளது. 

குமரி மாவட்டத்தையொட்டியுள்ள கேரளாவிலும் தேங்காய் உற்பத்தி கணிசமாக சரிந்துள்ளது. வறட்சி காரணமாக இழந்த தேங்காய் உற்பத்தி சீராக மேலும் பல ஆண்டுகள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தென்னந்தோப்புகள் அளவு 9 லட்சம் ஹெக்டரில் இருந்து 7 லட்சம் ஹெக்டராக குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இவை ஒருபுறம் இருக்க கேரளாவில் இருந்து தேங்காய் கொள்முதல் செய்து எண்ணெய் தயாரிக்கும் தொழிலில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. சந்தையிலும் புதிது புதிதாக பல்வேறு பெயர்களில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. பாக்கெட்டில் அடைத்து வரப்படுகின்ற ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் தற்போது சந்தையில் ரூ.292க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தேங்காய் உற்பத்தி சரிவு காரணமாக மார்க்கெட்டில் கலப்பட தேங்காய் எண்ணெய் அதிகம் விற்பனைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உணவு எண்ணெய்யான பாம் கெர்னல் ஆயில், ஒயிட் பாமாயில் ஆகியன இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்டவை உள்ளன.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்ற இந்த எண்ணெய்கள் கலப்பட தேங்காய் எண்ணெய் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படு வதாக கூறப்படுகிறது. இவற்றுடன் கொப்பரையை சேர்த்து தேங்காய் எண்ணெய் மணம் கிடைக்கும் வகையில் தேங்காய் எண்ணெய் தயாரித்து சிலர் சந்தைப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடிப்பதும் கடினம் ஆகும். 

கிலோ ரூ.65க்கு ஒயிட் பாமாயிலும், பாம்கெர்னல் ஆயிலும் கிடைக்கிறது. இதனை தேங்காய் எண்ணெய் என்று மாற்றினால் லிட்டர் ரூ.200க்கு மேல் விற்பனையாகும். தேங்காய் தட்டுப்பாடு காலங்களிலும், தேங்காய் எண்ணெய் உற்பத்தி குறைகின்ற வேளையிலும் போலி தேங்காய் எண்ணெய் உற்பத்தி சூடுபிடித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

வெள்ளிக்கிழமை, 09 பிப்ரவரி 2018 00:00

இந்திய கோழிகளுக்கு சவுதி அரேபியாவில் தடை

Written by
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகள் சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 
இந்த நிலையில் கர்நாடகாவின் தசரகள்ளி கிராமத்தில் கோழிகளிடம் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பதை உலக கால்நடை சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளது. 
 
இதைத்தொடர்ந்து இந்தியாவில் இருந்து கோழி, முட்டை மற்றும் கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. இந்த அறிவிப்பை சவுதி அரேபிய கால்நடை இடர் மதிப்பீட்டுத்துறை அமைச்சக இயக்குனர் சனாத் அல்–ஹார்பி வெளியிட்டு உள்ளார்.
 
சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பால் இந்தியாவின் கோழி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
வியாழக்கிழமை, 08 பிப்ரவரி 2018 00:00

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி அபராதம்

Written by
சர்வ தேச அளவில் மிகப் பெரிய சர்ச் என்ஜினாக கூகுள் திகழ்கிறது. இந்த நிலையில்  பிரபல திருமண சேவை இணையதளம்,  வலைதளமான கூகுள் தேடு பொறியியல் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்து இருந்தது.
 
அதன் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கூகுள் நிறுவனம் பாராபட்சமாக நடந்து கொண்டது உறுதியானதையடுத்து அந்த நிறுவனத்திற்கு ரூ.135.86 கோடி  விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
கூகுள் தேடல்களின் நடைமுறைகளில் ஈடுபடுவதைக் கண்டறிந்தது, அவ்வாறு செய்வதன் மூலம், அதன் போட்டியாளர்களுக்கும் பயனர்களுக்கும் பாதிப்பு விளைவிக்க கூடும் என தெரிவித்துள்ளது. 
 
மேலும் இந்த அபராத தொகையினை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை, 06 பிப்ரவரி 2018 00:00

சரிவிலிருந்து சற்றே மீண்டது அமெரிக்க பங்குசந்தை

Written by

அமெரிக்காவில் திங்கள் கிழமையன்று பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் செவ்வாய் கிழமையும் 2% வீழ்ச்சியில் சந்தை துவங்கியது. எனினும் அதில் இருந்து மீண்டு நேர்மறை புள்ளிகளோடு சந்தை இயங்கிவருகிறது.

திங்களன்று அமெரிக்காவில் சந்தை வீழ்ச்சியை சந்தித்தது ஆசியா மற்றும் ஐரோப்பா பங்கு வர்த்தகத்திலும் எதிரொலித்தது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற செய்தி பரவியதன் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியைஅமெரிக்க பங்குச்சந்தைகள் சந்தித்துள்ளன.

அமெரிக்க தொழிற்துறை குறியீடான டவ் ஜோன்ஸின் மதிப்பு திங்கள் கிழமையன்று 1,175 புள்ளிகள் அல்லது 4.6 சதவீத வீழ்ச்சியை கண்டு 24,345.75 புள்ளிகளில் முடிந்துள்ளது.

"மிகவும் வலுவான நிலையிலுள்ள நீண்டகால பொருளாதார அடிப்படைகளில்" கவனம் செலுத்துவதாக முதலீட்டாளர்களுக்கு வெள்ளைமாளிகை உறுதியளித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க தொழிலாளர் துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தொழிலாளர்களின் ஊதியத்தில் எதிர்பார்த்ததை விட வலுவான முன்னேற்றம் காணப்பட்டது.

இதன் காரணமாக, குறைந்த வட்டி விகிதங்களின் காலம் முடிவடையப்போவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட தொடங்கினர். எனவே, அதிர்ச்சியுற்ற முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று அதை பத்திரங்கள் உள்ளிட்ட அதிக வட்டியளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யத்தொடங்கினர்.

அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சி லண்டன், ஜப்பான் மற்றும் சிங்கப்பூரை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸின் மதிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 561 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து அதாவது 1.61 சதவீதத்தை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி இன்று மட்டும் 168.20 புள்ளிகள் அதாவது -1.58 % சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

சென்ற வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது இந்திய பங்குச்சந்தைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் தற்போது அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் இங்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

பக்கம் 1 / 18
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…