JoomlaLock.com All4Share.net

Background Video

சனிக்கிழமை, 27 ஜனவரி 2018 00:00

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை Featured

Written by 
Rate this item
(0 votes)

இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து எட்டாவது வாரமாக பரவச நிலை காணப்பட்டது. ஒவ்வொரு வாரமும் புதிய உச்சங்களுடன் முடிவடைந்து பங்குச் சந்தை முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த வார வர்த்தகமும் புதிய சாதனை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஜனவரி மாதத்துக்கான பங்கு முன்பேர வணிக கணக்கு முடிப்பு தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மட்டும் சுணக்கத்துடன் காணப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் பங்குச் சந்தையில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், சர்வதேச நிதியம் அதன் உலக பொருளாதார ஆய்வறிக்கையில், "மிக வேகமாக பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடு என்ற அந்தஸ்தை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும், அதன் பொருளாதாரம் வரும் 2018-19 நிதி ஆண்டில் 7.4 சதவீதமாக வளர்ச்சி காணும்' என்று தெரிவித்திருந்தது. இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடிய செய்தியாக அமைந்தது. 

நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது, அந்நிய முதலீட்டு வரத்து அதிகரிப்பு, பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு ஆகியவை பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு மேலும் வலு சேர்க்கும் அம்சங்களாக அமைந்தன.
தகவல் தொழில்நுட்பத் துறை குறியீட்டெண் 3.63 சதவீதமும், உலோகம் 2.74 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 2.25 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 2.16 சதவீதமும் அதிகரித்தன. இவை தவிர, வங்கி 2 சதவீதமும், தொழில்நுட்பம் 1.65 சதவீதமும், பொதுத் துறை 1.23 சதவீதமும், மருந்து 1.08 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.03 சதவீதமும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் தொழில்துறை குறியீட்டெண் 0.68 சதவீதமும் உயர்ந்தன.

இருப்பினும், முதலீட்டாளர்களின் வரவேற்பின்றி, நுகர்வோர் சாதனங்கள் தொழில்துறை குறியீட்டெண் 2.60 சதவீதமும், ஐபிஓ 1.51 சதவீதமும், மோட்டார் வாகனம் 1.32 சதவீதமும், மின்சாரம் 0.65 சதவீதமும் சரிந்தன. சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள 31 நிறுவனங்களில், 21 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.
ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் 51.11 சதவீத பங்குகளை கையகப்படுத்துவதற்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி பங்கின் விலை 7.57 சதவீதம் ஏற்றம் கண்டது.

இதையடுத்து, டிசிஎஸ் பங்கின் விலை 5.52 சதவீதமும், கோல் இந்தியா 5.34 சதவீதமும், யெஸ் வங்கி 4.06 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 3.98 சதவீதமும், ரிலையன்ஸ் 3.79 சதவீதமும், எல்&டி பங்கின் விலை 2.99 சதவீதமும் அதிகரித்தன. கோட்டக் வங்கி (2.97%), இன்டஸ்இண்ட் வங்கி (2.79%), ஐடிசி (2.56%), இன்ஃபோசிஸ் (2.41%) மற்றும் பஜாஜ் ஆட்டோ (2.47%) நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

அதேசமயம், போதிய வரவேற்பில்லாத காரணத்தால் பார்தி ஏர்டெல் பங்கின் விலை 9.07 சதவீதமும், டாடா டிவிஆர் 6.56 சதவீதமும், விப்ரோ 5.02 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 4.48 சதவீதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 3.71 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா 1.11 சதவீதமும், பவர் கிரிட் 1.05 சதவீதமும் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 538 புள்ளிகள் அதிகரித்து 36,050 புள்ளிகள் என்ற புதிய உயரத்தைத் தொட்டது. இதற்கு முந்தைய ஏழு வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 3,039 புள்ளிகள் (9.26%) அதிகரித்தது குறிப்பிடத்தக்தது. 

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.22,625.37 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 174 புள்ளிகள் உயர்ந்து முதல்முறையாக 11,069 புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.1,66,288.96 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

வரும் வியாழக்கிழமை (பிப்.1) மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதில் சாதகமான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக அடுத்த வாரத்தில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடனேயே காணப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Read 156 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…