நடப்பு நிதியாண்டில் ஆடைகள் துறையில் ரூ.5,000 கோடி முதலீடு; 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்
''ஜவுளித் துறைக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள, 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகை திட்டங்களால், நடப்பு 2016 -17ம் நிதியாண்டில், ஆடைகள் துறையில், 5,000 கோடி ரூபாய் அளவிற்கு புதிய முதலீடுகள் குவியும்; இதனால், 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்,'' என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு தலைவர் அசோக் ஜி.ரஜனி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: ஜவுளித் துறையில், மூலதன முதலீடுகளுக்கான மானியம், இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மூலப்பொருட்களின் இறக்குமதி வரியுடன், மாநில வரியும், ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப வழங்கப்படுகிறது. இதனால், செலுத்திய வரியில் திரும்ப பெறப்படும் தொகை, 7.25 சதவீதத்தில் இருந்து, 12.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், ஜவுளித் துறை சார்ந்த தொழிலாளர் சட்டங்களும் தளர்த்தப்பட்டுள்ளன. இத்தகைய ஊக்குவிப்புகளால், அடுத்த மூன்று ஆண்டுகளில், ஜவுளி மற்றும் ஆடைகள் துறையில், உற்பத்தியும், ஏற்றுமதியும் உயரும். இத்துறையில், 1,100 கோடி டாலர் முதலீடுகளை ஈர்த்து, 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்றுமதியை, 3,000 கோடி டாலராக உயர்த்தவும், மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, நிச்சயம் எட்டப்படும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. நடப்பு நிதியாண்டில், ஆடைகள் துறையில், 5,000 கோடி ரூபாய்க்கு புதிய முதலீடுகள் குவியும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகள், ஜவுளி ஏற்றுமதிக்கு, வரி விலக்கு அளிக்கின்றன. ஆனால், இந்தியாவில், 9.5 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. இதை குறைத்தால், ஏற்றுமதி மேலும் உயரும். கடந்த சில ஆண்டுகளாக, செலவு குறைவு காரணமாக, ஆடை தயாரிக்கும், 'ஆர்டர்'கள், சீனா போன்ற நாடுகளுக்கு சென்று கொண்டிருந்தன. தற்போது, அந்நாடுகளில் தொழிலாளர் ஊதிய விகிதம் அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளது. இனி, சீனா, மலிவு விலையில், ஜவுளி மற்றும் ஆடைகளை தயாரித்து, ஏற்றுமதி செய்வது கடினம். இது, இந்தியா உட்பட, இதர நாடுகளுக்கு, 28 ஆயிரம் கோடி டாலர் அளவிலான சந்தை வாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஜவுளி மற்றும் ஆடைகள் துறை, வரும், 2025ல், மூன்று மடங்கு உயர்ந்து, 30 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ளதாக உருவெடுக்கும்; ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி டாலர் அன்னியச் செலாவணி கிடைக்கும்.-பி.சி.ஜி., ஆய்வறிக்கை
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு...
பெட்ரோல் லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் லிட்டருக்கு 49 பைசாவும் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டு உள்ளது.பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.அதன்படி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 49 பைசாவும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. மேலும், இந்த விலை குறைவு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
தங்கம் விலை நேற்று சரிந்த நிலையில் இன்று ரூ.64 உயர்ந்துள்ளது
தங்கம் விலை நேற்று சரிந்த நிலையில் இன்று(ஜூன் 29-ம் தேதி) சவரனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,915-க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.23,320-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,170-க்கும் விற்பனையாகிறது.அதேசமயம் வெள்ளியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.47.60-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.44,440-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை ரூ.496 வீழச்சி
பிரிட்டன் முடிவால் தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று(ஜூன் 28-ம் தேதி) சவரனுக்கு ரூ.496 வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,911-க்கும், சவரனுக்கு ரூ.496 சரிந்து ரூ.23,288-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.670 சரிந்து ரூ.31,130-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 20 காசுகள் சரிந்து ரூ.46.30-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.235 சரிந்து ரூ.43,245-க்கும் விற்பனையாகிறது.
ஏ.டிஎம்.மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.12 கோடி கொள்ளை
மகாராஷ்டிராவில் ஏ.டிஎம்.மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.12 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.தானேவில் வேனில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.