JoomlaLock.com All4Share.net

Background Video

உலகின் நம்பர் ஒன் சியர்ச் எஞ்சின் நிறுவனமான கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இணைய உலகில் முடிசூடா மன்னனாக விளங்கி வரும் கூகுள், இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக ஆண்ட்ராய்ட் அமைப்பை விதிமுறைகளை மீறி பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் காரணமாக சமீபத்தில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் ஆண்ட்ராய்ட் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில் இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது. இதன்படி கூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக $5000 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.3.42 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கூகுளின் இந்த சட்டவிரோத செயல்பாடு இன்றிலிருந்து 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் என்றும் இல்லையேல் மேலும் மிகப்பெரிய தொகை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை, 05 ஜூலை 2018 00:00

இந்தியாவில் ஜியோபோன் 2 அறிமுகம்

Written by
இந்தியாவில் ரிலைன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 அறிமுகம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார்.
 
க்வெர்டி கீபோர்டு கொண்டிருக்கும் ஜியோபோன் 2 மாடலில் 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே, 4 புறமும் சுழலும் நேவிகேஷன் பட்டன், 2 எம்பி பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஜியோபோன் போன்றே இந்த மாடலிலும் 4ஜி வோல்ட்இ, கை ஓஎஸ் (Kai OS), வழங்கப்பட்டு இருக்கிறது.
 
மெமரியை பொருத்த வரை 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. வோல்ட்இ வசதியுடன், வோ-வைபை வசதி, எஃப்.எம்., வைபை, ஜிபிஎஸ், என்.எஃப்சி. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 
 
2000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஜியோபோன் 2 மாடிலில், அனைத்து ஜியோ செயலிகளும் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் 22 இந்திய மொழிகளில் புதிய ஜியோபோனினை பயன்படுத்த முடியும். 
 
புதிய ஜியோபோன் 2 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்டு 15-ம் தேதி முதல் துவங்குகிறது. ஜியோபோன் 2 அறிமுக நிகழ்விலேயே பழைய ஜியோபோனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் போட்டிகள் நடந்த முடிந்த நிலையில், இந்த சீசனில் பங்கேற்ற 8 அணிகளின் பிராண்ட் வேல்யூ குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை 2 ஆண்டு தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது. 
  
ஐபிஎல் அணிகளின் பிராண்ட் வேல்யூ: 
 
1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 65 மில்லியன் டாலர்கள்
2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- 62 மில்லியன் டாலர்கள்
3. சன் ரைசர்ஸ் - 54 மில்லியன் டாலர்கள்
4. மும்பை இந்தியன்ஸ்- 53 மில்லியன். டாலர்கள்
5. ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு- 49 மில்லியன் டாலர்கள்
6. டெல்லி டேர் டெவில்ஸ் - 44 மில்லியன் டாலர்கள்
7. ராஜஸ்தான் ராயல்ஸ் - 43 மில்லியன் டாலர்கள்
8. கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 40 மில்லியன் டாலர்கள்
 
பிராண்ட் வேல்யூவின்படி ஐபிஎல் 5.3 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது. இது கடந்த 11 ஆண்டுகளை விட 37% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
சில ஆண்டுகளுக்கு முன்னர் மொபைல்போனில் இண்டர்நெட் பயன்படுத்தினால் அதற்கென்று ஒரு பெரிய தொகை செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது ஜியோ அறிமுகமான பின்னர் மிகக்குறைந்த விலையில் அதிக டேட்டா கிடைத்து வருகிறது
 
இதன்படி ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு முதலில் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கி வந்த நிலையில் பின்னர் அதனை 1.5ஜிபி என மாற்றியது. இந்த நிலையில் தற்போது தினமும் 3ஜிபி டேட்டா என இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
 
இதன்படி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.149, ரூ.349, ரூ.399, ரூ.449 ஆகிய தொகைகளுக்கு ரீசார்ஜ் செய்தால், தினமும் 1.5ஜிபி (4ஜி)டேட்டாவோடு கூடுதலாக 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 3ஜிபி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஜியோவுக்கு போட்டியாக செயல்பட்டு வரும் மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த சலுகை அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளன.
திங்கட்கிழமை, 11 ஜூன் 2018 00:00

ஆப்பிள் சாதனங்களுக்கு ரூ.10,000 வரை சலுகை

Written by

ஆப்பிள் இந்தியா மற்றும் சிட்டிபேங்க் இணைந்து ஆப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு கேஷ்பேக் வழங்குகின்றன.

அந்த வகையில் ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் பென்சில் மற்றும் பேக்புக் சாதனங்களை வாங்குவோருக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இன்று (ஜூன் 11) துவங்கும் இந்த சலுகை ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. சிட்டி கார்ப்பரேட் கார்டுகளை தவிர இந்தியாவில் வழங்கப்பட்ட அனைத்து சிட்டிபேங்க் கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தி இந்த சலுகையை பெற முடியும்.

கேஷ்பேக் சலுகை ஒரு கிரெடிட் கார்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் மாத தவணை முறையை (EMI) தேர்வு செய்தாலும் பெற முடியும். கேஷ்பேக் தொகை பரிமாற்றம் செய்தது முதல் 90 நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கில் சேர்க்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கேஷ்பேக் சலுகையின் கீழ் ரூ.10,000 கேஷ்பேக் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மேக்புக் வேரியன்ட்கள், அனைத்து வித ஐபேட் சாதனங்களுக்கும் ரூ.5,000 வரை கேஷ்பேக், அனைத்து வித ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று ஆப்பிள் பென்சில் வாங்குவோருக்கு ரூ.1,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

கேஷ்பேக் சலுகையை சேர்த்தால் என்ட்ரி-லெவல் மேக்புக் ஏர் விலை ரூ.67,200, ஐந்தாம் தலைமுறை என்ட்ரி லெவல் ஐபேட் விலை ரூ.23,000-க்கு பெற முடியும். இதே போன்று ஆப்பிள் வாட்ச் 1 சாதனத்தை ரூ.18,950, ஆப்பிள் பென்சில் ரூ.6,600 விலையில் வாங்கிட முடியும்.

புதிய சலுகை ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கான பரிமாற்றங்கள் ப்ளூடஸ் / பைன் லேப்ஸ் பிஓஎஸ் டெர்மினல்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். இத்துடன் மற்ற சிட்டிபேங்க் சலுகைகளை சேர்க்க முடியாது.

தமிழக தயாரிப்புகள் உட்பட 45 பிராண்ட் தேங்காய் எண்ணெய்களுக்கு கேரளா திடீர் தடை விதித்துள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்களில் கலப்படம் இருப்பதாகவும், இவற்றின் உற்பத்தி, கொள்முதல், விநியோகம், விற்பனை ஆகியற்றை தடை செய்து 45 நிறுவனங்களின் எண்ணெய்களுக்கு கேரள மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை பாலக்காடு, கோழிக்கோடு, எர்ணாகுளம் மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சி, கோவை, நாமக்கல், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தயார் செய்யப்பட்டு கேரளா கொண்டு செல்லப்படுபவை ஆகும். இந்த எண்ணெய் வகைகளின் மாதிரிகளை பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்த நிலையில் அவற்றுக்கு நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் பெரும்பாலன நிறுவனங்கள் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் செயல்பட்டு வருபவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த ஆண்டு 18 நிறுவனங்களின் எண்ணெய்கள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த நிறுவனங்கள் வேறு பெயர்களில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த நிறுவனங்கள் தமிழக பகுதிகளில் கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளதா, தமிழக பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்ற தேங்காய் எண்ணெயில் கலப்படம் உள்ளதா என்பது தொடர்பாக தமிழக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

உற்பத்தி செலவு அதிகரிப்பால், ஆயத்த ஆடை (ரெடிமேடு) விலையை உயர்த்த, ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.திருப்பூர் உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என, பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

உற்பத்தி செலவை கணக்கிட்டு, ஆடைகளுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது.பஞ்சு விலை உயர்வால், தமிழக நுாற்பாலைகள் நுால் விலையை உயர்த்துகின்றன; ஆடை உற்பத்தி சார்ந்த, 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களும், 10 - 30 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

இதனால், பின்னலாடை நிறுவனங்களின் தயாரிப்பு செலவும் அதிகரித்துள்ளது.'சிஸ்மா' சங்க பொதுச்செயலாளர் பாபுஜி கூறுகையில், ''நடப்பாண்டு மட்டும் இதுவரை, நுால் விலை கிலோவுக்கு, 20 ரூபாய் அதிகரித்துள்ளது; விலை மேலும் உயரும் என்கின்றனர்.

இது, சிறு, குறு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது; உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளன. நெருக்கடியை சமாளிக்க, ஆடை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.வரும் 10ம் தேதி முதல், ஆயத்த ஆடை விலையை, 10 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 13 பேர் இறந்தனர். நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 116 பேரின் இரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பட்டுள்ளது. 15 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு கேரள மாநில பழங்கள், காய்கறிகள் இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
 
இது குறித்து அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. எனவே கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்துவிதமான பழங்கள், காய்கறிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாக கடந்த வாரம், கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம், சுற்றுலா பயணிகள், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்திய அதிகாரிகள் அறிவுறுத்தும் பாதுகாப்பு வழிமுறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது நினைவிருக்கலாம். 
யோகா குரு பாபா ராம்தேவின் சொந்த நிறுவனமான பதஞ்சலி கடந்த 2006-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனம்  பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
 
பதஞ்சலி தயாரிப்புப் பொருள்கள் ரசாயனக் கலப்பு இல்லை என்றும், இயற்கையாக உள்நாட்டில் தயாராகும் பொருட்கள் என்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் நம்பிக்கையுடன் பதஞ்சலி பொருட்களை வாங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைனிலும், தனித்தனியாக ஷோ ரூம்களை அமைத்தும் இந்தியா முழுவதும் இவருடைய பொருட்கள்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
இந்தநிலையில்,  தற்போது பிஎஸ்.என்.எல் உதவியுடன் தொலைத்தொடர்பு துறையிலும் பாபா ராம் தேவ் தடம் பதித்துள்ளார். சுதேதி சம்ரித்தி என்ற சிம் கார்டை இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டில் ரூ.144-ல்  அன்லிமிடெட் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்.கள் என பல்வேறு அதிரடி சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. 
 
முதற்கட்டமாக பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு இந்த சிம்கார்டுகள் வழங்கப்படுகிறது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விற்பனைக்கு வரவுள்ளது. மேலும், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்த சுதேசி சம்ரதி சிம்கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் 10 சதவீத தள்ளுபடியில் பதஞ்சலி தயாரிப்புகளை வாங்கிக்கொள்ளலாம்.
 
இது குறித்து பாபா ராம் தேவ் கூறியதாவது:
 
பதஞ்சலி-பி. எஸ் என்.எல். இணைந்து நாட்டின் நன்மைக்காக நவீன சுதேசி இயக்கத்தை துவங்கி உள்ளது. இந்த சிம்கார்டுடன் 2.5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும்.  
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
யோகா குரு பாபா ராம்தேவ், பதஞ்சலி என்ற பல்வேறு தயாரிப்புகள் விற்று வரும் நிலையில், தற்போது பிஎஸ்என்எல் உடன் இணைந்து சிம்கார்டையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
 
அடுத்த ஆண்டு முதல் பதஞ்சலி கார்மென்ட்ஸ் என்ற பெயரில் துணி வியாபாரம் துவங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனில் உள்ள அதன் இயக்குனர் அணில் அகர்வாலின் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் அணில் அகர்வால் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய தூதரகத்தில் மனுவும் அளித்தனர். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், வேதாந்தா குழுமத்திற்கு எதிராகவும் இங்கிலாந்து நாட்டு எம்.பிக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி முதன்முறையாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது. இதுகுறித்து செயல் தலைவரும், அக்கட்சி எம்.பி.யுமான ஜான் மெக்டொனால்டு கூறியதாவது:

‘‘தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற படுகொலைக்கு ஸ்டெர்லைட் ஆலை காரணமாக அமைந்துள்ளது கண்டிக்கத்தக்கது.

வேதாந்தா குழுமம் பல நாடுகளில் முறைகேடான வகையில் சுரங்கங்களை தோண்டுவதும், சுற்றுச்சூலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. அமெனஸ்டி இண்டர்நேஷனல் போன்ற தொண்டு நிறுவனங்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தியாவில் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கும், மனித உரிமை மீறலுக்கு காரணமான வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆப்ரிக்க நாடுகளிலும் வேதாந்தா நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.

சர்வதேச அளவில் விதிமீறலில் ஈடுபடும் வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து டிலிஸ்ட் செய்து அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இங்கிலாந்து அரசு, அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

இதுகுறித்து லண்டன் ‘தமிழ் மக்கள் அமைப்பு’ நிர்வாகி கார்த்திக் கமலக்கண்ணன் கூறுகையில் ‘‘ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பேரசையால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். தண்ணீர், காற்று, மண் அனைத்தையும் கொடூரமான முறையில் அழிக்கும் இதுபோன்ற நிறுவனங்களை ஏற்க முடியாது. கார்பரேட் நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்காக அப்பாவி மக்கள் காலம் காலமாக உயிரழப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது’’ எனக் கூறினார்.  

பக்கம் 2 / 21
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…