ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனக் கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் உள்ளிட்ட பெருமளவிலான மக்கள் வீதிகளில் திரண்டு நின்று குரல் எழுப்பினார்கள்.
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தவுடன் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகம் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி போர்க்குற்றச் செயல்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டி, புதிய ஆட்சியிலாவது தங்களுக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஐ.நா. செயலாளருடைய யாழ் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. வீதியில் திரண்டிருந்த தங்களை பான் கி மூன் அவர்கள் சந்திப்பார் என்று எதிர்பார்த்திருந்த போதிலும் அது நிறைவேறவில்லை.
எனினும் அவருடைய சார்பிலான அதிகாரி ஒருவர் மக்களிடமிருந்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களைப் பெற்றுக் கொண்டார்.
இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கிய ஐ.நா பிரேரணையின்படி சர்வதேச நீதிபதிகள் விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையை உருவாக்கி விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தை ஐ.நா சம்மதிக்க வைக்க வேண்டும்.
அதன் ஊடாகத்தான் நல்லிணக்கம் உருவாக முடியும் என்பதை ஐ.நா செயலாருக்கு உணர்த்துவதற்காகவே மக்கள் வீதிகளில் திரண்டிருந்தார்கள் என்றார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்.
பல வருடங்களாக இடம்பெயர்ந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச மக்கள் வசிக்கும் முகாமிற்கும் பான் கி மூன் விஜயம் செய்து அவர்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்தார்.