சனிக்கிழமை, 17 மார்ச் 2018 00:00
இலங்கை : பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - உபயம் ராஜபக்சே
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவிற்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வர திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆதரவு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட கண்டி கலவரத்துக்கு பிறகு, சட்டம் ஒழுங்கு துறை பொறுப்பு ரனில் விக்ரமசிங்கேவிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் எதிர்க்கட்சிகள் கொண்டு வர உள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக எதிர்க்கட்சி அணியை சேர்ந்த எம்.பி., ரஞ்சித் சோய்சா கூறுகையில், ‘‘நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடுகிறபோது, பிரதமர் ரனில் விக்ரம சிங்கே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம், சபாநாயகரிடம் வழங்கப்படும்’’ என கூறினார். ஏற்கனவே நேற்று ராஜபக்சே நிருபர்களிடம் பேசுகையில், ‘‘இலங்கை அரசை அகற்றும் நிலையை நெருங்கி வருகிறோம். அவர் (ரனில் விக்ரம சிங்கே) சீக்கிரம் வெளியேறித்தான் ஆக வேண்டும்’’ என்று கூறியது நினைவுகூரத்தக்கது.
ரனில் விக்ரம சிங்கே மீது 3 குற்றச்சாட்டுகளை கூறி, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரும் கையெழுத்து போடுவார்கள் என எதிர்க்கட்சிகளின் வட்டாரம் கூறுகிறது.
Published in
இலங்கை