JoomlaLock.com All4Share.net

Background Video

இலங்கை

இலங்கை (299)

பாராளுமன்றில் தயாரிக்கப்படும் உணவுகள் விசத் தன்மையான பாம் எண்ணெய் மூலம் தயாராவதாக நுகர்வோர் உரிமைகள் பர்துகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் நாடு பூராகவும் பல ஹோட்டல்கள் மற்றும் உயர் இடங்களில் குறித்த பாம் எண்ணெயை பயன்படுத்தப்படுவதாகவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் போலி வியாபாரிகள் தமது வர்த்தகத்தை அதிகரித்துக்கொள்வதற்காக பாம் எண்ணெயுடன் பல நச்சுப்பொருட்களை கலந்து விற்பதாகவும்,

தமது அமைப்பு ஆராய்ந்து பார்த்ததில் பாராளுமன்றத்திலும் குறித்த எண்ணெய்யை பயன்படுத்தப்படுவதாக நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இது தொடர்பில் சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும்,பொதுமக்களின் சுகாதாரம் தொடர்பில் கரிசனைக் காட்டி குறித்த எண்ணெய் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கட்சியின் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்

இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைக்கப்படும்.

கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு பதிலாக புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

புதிய கட்சியை உருவாக்கி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்கும் சதித்திட்டங்களுக்கு யாரும் துணைபோகக் கூடாது என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மூலம் எதிர்வரும் வாரங்களில் 16 திருவள்ளுவர் சிலைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக த ஹிந்து செய்திவெளியிட்டுள்ளது.

இந்த 16 திருவள்ளுவர் சிலைகளையும் வட மாகாணத்தில் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் சாவக்கச்சேரி ஆகிய பிரதேசங்களிலும், வடமேல் மாகாணத்தில் புத்தளத்திலும், மேல் மாகாணத்தில் கொழும்பிலும், மத்தியமாகாணத்தில் மாத்தளை, ஹட்டன் மற்றும் நாவலப்பிட்டியிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சர்வதேச தமிழ் சங்கத்தினால் இலங்கைக்கு வழங்கியிருந்த திருவள்ளுவர் சிலைகளைப் பெற்றுக் கொள்ளும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு அமையும் என சர்வதேச தமிழ் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு அல்லது மட்டக்களப்பு பிரதேசங்களில் கேளிக்கை பூங்கா அமைப்பது குறித்தும் வி.ஜி.சந்தோசம் கருத்து தெரிவித்திருந்திருந்தார்

மேலும், 16 திருவள்ளுவர் சிலைகள் நல்லெண்ண நோக்கத்துடன் கடந்த மாதம் 19ஆம் திகதி இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 00:00

மீண்டும் ஒரு மிருக வதை!!

Written by

தம்புள்ளை-பகமுன பிரதான வீதி உனபதுருயாய கலுன்தாவ பிரதேசத்தில் கன்று உட்பட 4 பசுக்களை இறைச்சிக்காக வெட்டியுள்ளனர்.

வயல்வெளியில் கட்டப்பட்டிருந்த பசுக்களை வெட்டிய நபர் யார் என்பது இது வரையும் அறியப்படவில்லை.

மேலும், இந்த நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த இடத்தில் இருந்து கன்றுக்குட்டியின் கால்கள், தோல் உள்ளிட்ட உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன் இது போன்ற ஒரு சம்பவம் இணையத்தளங்களில் பதிவாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெனியாய - பிட்டபெத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமியை ஒரு மாதமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 30 நபர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலுக்கமைய பஸ் நடத்துநர்கள், சாரதிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட சமூகத்தில் பல முக்கயஸ்தர்கள் இதனுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர் இது தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்களை பொலிஸாரிடம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச எடுக்கும் எந்த முயற்சிகளாலும் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை தடுத்து விட முடியாது. அவரின் குந்தகமான செயற்பாடுகளுக்கு சிங்கள மக்கள் உடன்படப் போவதுமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை எதிர்வரும் 28ம் திகதி கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மேற்படிபாதயாத்திரையினால் தற்போதைய அரசாங்கத்துக்கு நெருக்கடி நிலை ஏற்படுமா? அரசு மேற்கொண்டு வரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விவகாரத்துக்கு பங்கம் ஏற்படுமா? என அவரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற புரட்சியுடன் துரத்தி அடிக்கப்பட்ட பின் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி பதவிக்கு வர பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார் என்பது உலகறிந்த விடயமாகும்.

இந்த முயற்சியின் ஒரு அங்கமே மஹிந்தவும் அவரது அணியினரும் எதிர்வரும் 28ம் திகதி பாதயாத்திரையை மேற்கொள்ளும் முயற்சியாகும்.

தற்பொழுது அவர் என்ன கூறுகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு சிங்கள மக்கள் வாக்களிக்கவில்லை. ஈழ மக்கள் வாக்களித்ததன் காரணமாகவே அவர் வெற்றி பெற்றார். அவ்வாறு இல்லையாயின் அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கின்றார். இது அவரின் ஆற்றாமையையே எடுத்துக் காட்டுகிறது.

மஹிந்த இந்த அரசை வீழ்ச்சியடைய செய்வதற்காக பல முயற்சிகளையும் கைங்கரியங்களையும் செய்துகொண்டுதான் இருக்கின்றார். அது எதுவுமே பலனளிப்பதாகவில்லை. காரணம் சிங்கள மக்கள் இவரின் எதிர்ப்பிரசாரத்துக்கு பலிபோகவில்லையென்பதே உண்மை.

எனவே தான் மஹிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் பாதயாத்திரை முயற்சியும் தோல்வியிலேயே முடியும். இதில் அவர் எதையுமே சாதிக்க முடியாத நிலையே ஏற்படும்.

அரசியல் சாசன ஆக்க முயற்சிகள் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மஹிந்தவின் பாதயாத்திரை எதிர்ப்பு நிலைகளால் அரசியல் சாசன முன்னெடுப்புகளுக்கு பங்கம் ஏற்படுமென்று கூறிவிடமுடியாது.

புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென்பது பொதுவான நியதி. அவ்விடயத்தில் பாராளுமன்றிலும் இலங்கை மக்களிடமும் பூரண ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் பேரிலேயே அரசாங்கத்தின் அரசியல் சாசன முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் சந்தேகப்பட வேண்டிய விடயம் ஏதுமில்லை.

ஆனால் இம்முயற்சிகளை குழப்புவதற்கு தன்னாலான முழு முயற்சிகளையும் மஹிந்த ராஜபக்ச மேற்கொள்வாரென்பது நாம் அறிந்துக் கொள்ளக்கூடிய உண்மைதான். அதற்காக நாம் பயந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லையென்றே எண்ணுகின்றேன்.

புதிய அரசியல் சாசன நிறைவேற்றம் அரசு மற்றும் எமது கணிப்பின்படி எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றுக்கு வருவதற்கு முன் புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் தான் அரசியல் சாசன ஆக்கப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு எந்த தடையீடுகள் வந்தாலும் அதற்கு முகங்கொடுத்து அரசு முன்னெடுத்துச் செல்லுமென்றே நம்புகின்றோமென சுமந்திரன் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 00:00

பாதயாத்திரைக்கு ஜனாதிபதி ஆதரவு?

Written by

கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள பாதயாத்திரைக்கு தாம் எவ்வித தடையுமாக இருக்கப்போவதில்லை எனவும், முழு ஆதரவு தருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க இதனை நேற்றிரவு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை சுதந்திரக் கட்சியை ஒன்றிணைப்பதற்கும், அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கிலும் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்ள கூட்டு எதிர்க்கட்சிக்கு எதுவித தடையும் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுதந்திரக்கட்சியை விமர்சிக்கவோ, கட்சியின் ஒழுங்குவிதிகளை மீறிச் செயற்படவோ ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தல்களில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற நிலையில் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மீள்பரிசீலனை செய்யப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ராஜபக்ச தரப்பின் எவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், அவர்களின் சார்பில் யாரும் கலந்து கொண்டிருக்கவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் பாதுகாப்பிற்காக சிவில் உடையணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என யாழ் பிராந்திய பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் எவ்வித பாதுகாப்புப் பிரச்சினையும் ஏற்படக்கூடிய சாத்தியமில்லை.

கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு மாணவர்களுக்கு எவ்வித தடையும் கிடையாது.

பூரண பாதுகாப்பினை பொலிஸார் வழங்குவதனால் அச்சமின்றி சிங்கள மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை தொடர முடியும் என தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை, 26 ஜூலை 2016 00:00

வட மாகாண சபையின் வாலாக செயற்பட தயாரில்லை!

Written by

மீள்குடியேற்றச் செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை நாம் பொறுத்துக்கொண்டு, அதன் வாலாக இருக்கப் போவதில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் முறையாக ஒரு கட்டமைப்பின் கீழ் குடியேற்ற வேண்டும்.

வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றி அவர்களை நிம்மதியாக வாழ வைக்கவென உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

செயலணியின் நோக்கங்களை திரிவுபடுத்தி அதன் எதிர்கால நடவடிக்கைகளை கறுப்புக் கண்ணோடு பார்த்துவரும் வடக்கு மாகாண சபையின் போக்கை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாணசபை கடந்த 3 வருட காலம் பதவியில் இருந்து வருகின்றது.

1990ஆம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இன்னும் தென்னிலங்கையில் பல இடங்களில் முகாம்களிலும் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

வட மாகாண சபையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் குடியேறுவதற்கு இன்று வரைதுளியளவேனும் உதவவில்லை.

உதவாவிட்டாலும் பரவாயில்லை உதட்டளவிலேனும் ஆதரவளிக்கவுமில்லை. இந்நிலையில், மத்திய அரசு தற்போது முன்னெடுத்துள்ள மீள்குடியேற்றக் கட்டமைப்பைச் சீர்குலைப்பதற்கு வட மாகாண சபை முன்னிற்பது வேதனையானது.

அது மனித தர்மமும் அல்ல. அகதிகளாக வாழும் இந்த மக்கள் படுகின்ற அவஸ்தைகளை கண்டும் காணாதது போன்று செயற்படும் இந்த மாகாண சபையின் நடவடிக்கை குறித்து முஸ்லிம் மக்களுக்கு நிறைய கேள்விகள் எழுகின்றன.

இந்த நிலையில், காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்றெல்லாம் கோரிக்கை விடப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளிலிருந்து நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பதுளை ஹாலிஎல பிரதேசத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் தேசிய ஒற்றுமை சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பாடசாலை மாணவர்களின் ஊடாக ஏற்படுத்த வேண்டியது அவசியமானது.

நாட்டில் வாழும் அனைத்து மக்களிடையேயும் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்பி நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

இதேவேளை அச்சம் சந்தேகமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை உறுதி செய்யும் விரிவான தேசிய திட்டமொன்று அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பக்கம் 9 / 22
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…