JoomlaLock.com All4Share.net

Background Video

இலங்கை

இலங்கை (299)

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு ஆகியவற்றில் சீனாவின் பங்களிப்பு பாரியளவில் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் தம்புள்ளையில் சீன மொழிக் கற்கை நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கொள்கைத் திட்டமிடல் ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், இன்று உலகின் பெரும் பொருளாதார சக்தியாக சீனா வளர்ச்சியடைந்துள்ளது.

சீனாவைப் புறம் தள்ளி உலக சந்தை முன்னகர முடியாத நிலை தோன்றியுள்ளது. சீன மொழியும் அதே போன்று உலக அளவில் தற்போது செல்வாக்குப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் இலங்கையிலும் சீன மொழிக் கற்கை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடயமாகும்.

இலங்கையின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் சீனா ஏராளம் பங்களிப்புகளை வழங்கியுள்ளது. அதே போன்று சுற்றுலாத் துறை மேம்படுத்தலிலும் சீனாவின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஆகியோருக்கிடையில் இன்று மாலை கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இன்று மாலை 05.30 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதற்கான அழைப்பு கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆர்வமாக இருப்பதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியிலிருந்து ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரை சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்துக்கு எதிரானதல்ல என்றும் அரசாங்கத்தின் ஒருசில செயற்பாடுகளுக்கு மட்டுமே எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலும் அரசாங்கம் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளாத பட்சத்தில் சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொஸ்கம சாலாவ ராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சிய வெடிப்புச் சம்பவத்தில் சேதமடைந்த 699 வீடுகள் புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் ராணுவ ஊடகப் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஜயவீர இந்தத் தகவலைத் வெளியிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைக்கு திருத்தியமைக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் வெடிப்புச் சம்பவத்தின் போது கூரைகள் சேதமடைந்த வீடுகளாகும்.

அவ்வாறான 19 வீடுகள் திருத்தியமைக்கப்பட உள்ளது. மிகவும் கடுமையான முறையில் சேதமடைந்த வீடுகள் அரசாங்கத்தின் பங்களிப்புடன் திருத்தியமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைக்கு பாதிப்பின் கழிவுகளை அகற்றல், கிணறுகளை சுத்திகரித்தல், வைத்தியசாலைகளை திருத்தியமைத்தல் மற்றும் முன்பள்ளிகளை திருத்தியமைத்து இயங்கச் செய்தல் ஆகிய நடவடிக்கைகள் பூர்த்தி செய்ப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கக் கடற்படைக்கு சொந்தமான யுத்தக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

ஈரூடக போக்குவரத்துத் தள யுத்தக்கப்பலான, யு.எஸ்.எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதன் போது இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி குறித்த கப்பலுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

அமெரிக்க கடற்படையின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் 13ஆவது ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த இந்த யுத்தக்கப்பல் ஒரே தடவையில் 700 மரைன் படையினரையும், ஆயுதங்கள் மற்றும் வாகனங்களையும் தரையிறக்கும் வசதிகளைக் கொண்டது.

நவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இந்தப் யுத்தக்கப்பலில், சிறிய விமானங்கள் தரையிறங்கும் வசதிகளும் உள்ளன.

இக்கப்பலில் வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படையினர், இலங்கை கடற்படையினர் 200 பேருக்கு மனிதாபிமான மற்றும் அனர்த்தகால உதவிப்பணிகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொரகஹகந்த நீர்த்தேக்க அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் நினைவுப் படிகம் பதிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

சுமார் பன்னிரண்டாயிரம் கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் இந்த நீர்த்தேக்கம் , பராக்கிரம சமுத்திரத்தை விட ஆறுமடங்கு பாரியதாகும்.

மொரகஹகந்த மற்றும் களுகங்கை ஆகிய ஆறுகளை இணைத்து பாரிய நீர்த்தேக்கமொன்றை உருவாக்கி அதன் மூலம் விவசாயம் மற்றும் மின் உற்பத்தி தேவைகளுக்கு அதனைப் பயன்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதன் பிரகாரம் மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் வருடமொன்றுக்கு மூன்று போக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நீர்ப்பாசன வசதி மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது.

அத்துடன் தேசிய மின்பகிர்மானக் கட்டமைப்புக்கு 25 மெகாவொட் அளவான மின்சாரமும் இங்கிருந்து உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இன்று காலை ஒன்பதரை மணியளவில் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சி சார்பில் நடத்தப்படவுள்ள பாதயாத்திரைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்க அரசாங்கம் தயார் என அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வரும் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளவுள்ள பாதயாத்திரைக்கு அரசாங்கம் எவ்வகையிலும் தடைகள் போடப் போவதில்லை.

ஆனால் அவர்கள் அரசாங்கத்தைக் கொண்டு தமது பாதயாத்திரையை தடை செய்வித்துக் கொள்ள கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

அது அவர்களுக்கு அனுகூலமாக அமையும். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்.

அதற்குப் பதிலாக கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்குத் தேவையான ஒத்தாசைகளைச் செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்படவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று பகல் விசேட சந்திப்பு நடத்தப்படவுள்ளது என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28ம் திகதி கண்டியில் ஆரம்பமாகவுள்ள பாத யாத்திரை மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் சில அரசியல் தீர்மானங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

பத்தரமுல்ல தாமரைத் தடாக வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அலுவலகத்தில் இன்று சந்திப்பு நடத்தப்படவுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்று மாலை கூட்டு எதிர்க்கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றிணை நடத்தவுள்ளார்.

இந்த கூட்டத்திற்கு முன்னதாக சில முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நோக்கில் பகல் கூட்டத்தை கூட்டியுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நிர்வாகம் மற்றம் தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாகம் மற்றும் தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக நீண்ட காலம் கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்மையில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார்.

இந்த வெற்றிடத்திற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்னவை தேசிய பொலிஸ் ஆணைக்குழு நியமித்துள்ளது.

இந்தப் பரிந்துரை தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இது குறித்து பொலிஸ் மா அதிபர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ன, தெற்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பாக கடயைமாற்றி வருகின்றார்.

சந்தன விக்ரமரட்ன புதிய பதவியை ஏற்பதனால் வெற்றிடமாகும் பதவிக்கு வடக்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.S.U.பெர்னாண்டோ நியமிக்கப்பட உள்ளார்.

நிர்வாகம் மற்றும் தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு முத்தரப்பு போட்டி நிலவியது.

சந்தன விக்ரமரட்ன, எஸ்.எம்.விக்ரமசிங்க மற்றும் ஜகத் அபேசிறிகுணவர்தன ஆகிய பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

இதில் சந்தன விக்ரமரட்ன தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவமொன்றின் போது தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த அரசியல் கைதி நிமலரூபனின் தந்தை கணேசன் (வயது 73) நேற்று காலமானார்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறைக்காவலர்களை பணயமாக வைத்து போராட்டம் நடத்தியதாக விசேட அதிரடிப்படையினரால் தாக்குதலுக்குள்ளாகி அனுராதபுரம் சிறைச்சாலையில் 2012 ஆம் ஆண்டு யூன் மாதம் 29 ஆம் திகதி மரணமாகிய க.நிமலரூபனின் தந்தையான கணேசனே காலமாகியுள்ளார்.

புற்றுநோயால் சில காலமாக பாதிக்கப்பட்டிருந்த இவர் யாழ் போதனா வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமாகியுள்ளார்.

இவரது சடலம் தற்போது வவுனியா, நெளுக்குளம் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நிமலரூபனின் தயார் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை பொருளாதார திட்டத்தை ஆரம்பிப்பதற்காக 10 பில்லியன் டொலர்களுக்கான முதலீட்டாளர்களை உள்ளீர்க்கும் வகையிலான பேச்சுக்களை இலங்கை, சீனாவுடன் ஆரம்பித்துள்ளது.

இந்தப் பொருளாதார திட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு, மின்வலு உற்பத்தி மற்றும் கைத்தொழில் வலயங்கள் என்பன மையப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கண்டி பெரும்பாக அபிவிருத்தி, வடமேல் மாகாண கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டம், மேல்மாகாண மற்றும் தென்மாகாண சுற்றுலா மற்றும் கைத்தொழில் திட்டம் என்பன அடுத்து வரும் 15 ஆண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்கீழ் இரண்டு வானூர்தி தளங்களும் இரண்டு துறைமுகங்களும்; அமைக்கப்படுகின்றன.

மேல்மாகாணத்தின் பெரும்பாக அபிவிருத்திக்காக 40 பில்லியன் டொலர்கள் மதிப்பிடப்பட்டுள்ளன.

பக்கம் 10 / 22
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…