JoomlaLock.com All4Share.net

Background Video

இலங்கை

இலங்கை (311)

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளகஞ்சாப்பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்டுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்த கேரள கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ளனர்.

9 பொதிகளில் அடைக்கப்பட்ட குறித்த கஞ்சாப்பொதிகள் 18 கிலோ 600 கிராம் எடை கொண்டது என தெரிவித்த பொலிஸார் சுமார் 18 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என தெரிவித்துள்ளனர்.

எனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சகல கட்சிகளும், குழுக்களும் தமது அரசியல் பலத்துக்காக இனவாதத்தை தோற்றுவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்றுஇடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அனைத்து இன மக்களுடைய உரிமைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமே தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்கள் ஊடாக மக்களை பிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

குருநாகல் நகரபிதாவின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு பிரதான கட்சிகளின் கொள்கைக்கு அமைய நடுநிலைமையுடன் செயலாற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மூவர் கஞ்சா பயன்படுத்திய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு வெளியே கஞ்சா பயன்படுத்திய நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த மாணவர்கள் மூவரும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து இந்த பாடசாலைக்கு வந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சி மேற்கொள்ளும் பாதயாத்திரை மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பாத யாத்திரை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

கண்டியிலிருந்து கொழும்பு வரையான கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ச,

இந்த அரசாங்கத்தில் பொதுமக்கள் மீதான வரிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதே போன்று பட்டதாரிகள் தொழில்வாய்ப்பின்றி சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எட்கா ஒப்பந்தம் போன்ற மக்கள் விரோத செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகவே மக்கள் இந்தப் பாதை யாத்திரை ஊடாக வீதிக்கு இறங்கிப் போராடுகின்றார்கள்.

அரசாங்கம் இதனை உணர்ந்து கொண்டு தனது கொள்கையை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் தவறில்லை.

ஆனால் அவை நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்கட்சியினரின் பாத யாத்திரை நேற்று காலை பேராதெனியவில் ஆரம்பமாகி மாவனெல்ல நகருக்கு அண்மித்த பகுதியில் முடிவடைந்தது.

இதன்போது அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பொலிஸாரையும் பொலிஸ்மா அதிபரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் சீருடையைக் கழற்றி, சிறுவர்களிடம் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பாத யாத்திரையின் போது அம்பியூலன்ஸ் வண்டி தாக்கப்பட்டதாக சில ஊடகங்கள் பொய்யான செய்தியை பரப்பின. ஆனால் அவ்வாறான எந்தவொரு தாக்குதலும் அங்கு இடம்பெறவில்லை என விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்றைய பாத யாத்திரையின் போது பொலிஸார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாகவும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவே போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளை செய்ததாகவும் விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கடமைகளை செய்ய முடியாத பொலிஸாருக்கு சீருடை எதற்கு என்றும், அதனை கழற்றி சிறுவர்களுக்கு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பாத யாத்திரை இன்று மீண்டும் கொழும்பு நோக்கி நகரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாத யாத்திரை நடாத்துவதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையிலான பிணைப்பை தகர்க்க முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையினால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான உறவில் கடுகளவும் விரிசல் ஏற்படவில்லை.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வலுவான அரசியல் பிணைப்பை தகர்க்க சில தரப்பர் முயற்சிக்கின்றனர்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிக்கு அமைய அராசங்கம், பாத யாத்திரைக்கு பூரண பாதுகாப்பு வழங்கும்.

ஊழல் மோசடிகாரர்களினால் ஏமாற்றப்பட்ட போராட்டக்காரர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கம் போராட்டங்களை குழப்ப முயற்சிக்காது. குண்டர் கூட்டங்களைக் கொண்டு நாச வேலைகளிலும் ஈடுபடாது.

எமக்கு தெரிந்த வகையில் ஊழல் மோசடிகாரர்களினால் செய்யப்படும் ஓர் கண்கட்டி வித்தையாகும். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியாகவே இந்த பாத யாத்திரை நோக்கப்பட வேண்டும்.

எவ்வாறெனினும் ஜனாநாயகத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

எந்தவொரு போராட்டக்காரருக்கும் நாட்டின் சட்டத்தை மீறிச் செயற்பட அனுமதியளிக்கப்படாது. நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்யும் அதேவேளை, சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியது அவசியமானது என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன.

இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இதற்கு பிரதமர் நரேந்திரமோடி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:

இந்தியா உதவியுடன் இலங்கையின் பல பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

விழாவில் பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பல ஆண்டுகளாக இந்தியா இலங்கை உறவை மேலும் நீடிப்போம்.

இவ்வாறு ரணில் பேசினார்.

பாத யாத்திரை சென்ற இளைஞர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள் இன்று பாத யாத்திரை செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு, பாத யாத்திரை செல்வதற்கு அனுமதியளிக்காது இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்து, அடக்கியவர்கள் இன்று பாத யாத்திரை செல்கின்றார்கள்.

ஏகாதிபத்திய ஆட்சி நடத்தியவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றார்கள்.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பாத யாத்திரை செல்வதற்கு மட்டுமன்றி பேசுவதற்கு சுதந்திரம் இருக்கவில்லை. அந்தக் காலத்தில் பாத யாத்திரை சென்றவர்கள் சுடப்பட்டனர்.

எமக்கு கோட்டேயில் கூட்டம் நடத்த இடமளிக்கப்படவில்லை.சிரானி பண்டாரநாயக்க, சரத் பொன்சேகா வழக்கு விசாரணைகளை பார்வையிடச் சென்ற எம்மை பாதாள உலகக் குழுவினரைக் கொண்டு தாக்கினார்கள்.

இன்று அவ்வாறான சூழ்நிலைகள் கிடையாது.இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் இன்று பாத யாத்திரை செல்ல அனுமதியில்லை என்பது நகைப்பிற்குரியது.

பாத யாத்திரையை தடுத்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தினர் மேம்பாட்டு நிகழ்வு நடைபெறவிருந்த காரணத்தினால் முரண்பாடுகள் மோதல்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது ஜனநாயகத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் இது அடக்குமுறையல்ல.

அந்தக் காலத்தில் இவ்வாறு நடக்கவில்லை. ரத்துபஸ்வலவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ரொசான் சானக்க என்ற இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கண்டியிலிருந்து கொழும்பு மட்டுமன்றி கதிர்காமம் வரையிலும் இன்று பாத யாத்திரை செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏழு நாட்களில் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, அரசாங்கத்திற்கும் மஹிந்த குடும்பத்தினருக்கும் இடையில் காணப்படும் கொடுக்கல் வாங்கல் என்னவென வெளிப்படுத்த வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமாக பார்க்கப்பட வேண்டும்.

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் முக்கியஸ்தர்கள் பலர் செய்ப்படுகின்றனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே, எதிர்வரும் நாட்களில் விளக்கமறியல் உத்தரவுக்கு பதிலாக, வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால் சிறந்த ஒன்றாக இருக்கும்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏழு நாட்களில் விடுவிக்கப்பட்டது கேள்விக்குரியதாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அரசாங்கத்திற்கும் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருக்கும் இடையில் காணப்படும் கொடுக்கல் வாங்கல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பக்கம் 5 / 23
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…