JoomlaLock.com All4Share.net

Background Video

இலங்கை

இலங்கை (318)

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன.

இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இதற்கு பிரதமர் நரேந்திரமோடி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:

இந்தியா உதவியுடன் இலங்கையின் பல பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

விழாவில் பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பல ஆண்டுகளாக இந்தியா இலங்கை உறவை மேலும் நீடிப்போம்.

இவ்வாறு ரணில் பேசினார்.

பாத யாத்திரை சென்ற இளைஞர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள் இன்று பாத யாத்திரை செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு, பாத யாத்திரை செல்வதற்கு அனுமதியளிக்காது இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்து, அடக்கியவர்கள் இன்று பாத யாத்திரை செல்கின்றார்கள்.

ஏகாதிபத்திய ஆட்சி நடத்தியவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றார்கள்.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பாத யாத்திரை செல்வதற்கு மட்டுமன்றி பேசுவதற்கு சுதந்திரம் இருக்கவில்லை. அந்தக் காலத்தில் பாத யாத்திரை சென்றவர்கள் சுடப்பட்டனர்.

எமக்கு கோட்டேயில் கூட்டம் நடத்த இடமளிக்கப்படவில்லை.சிரானி பண்டாரநாயக்க, சரத் பொன்சேகா வழக்கு விசாரணைகளை பார்வையிடச் சென்ற எம்மை பாதாள உலகக் குழுவினரைக் கொண்டு தாக்கினார்கள்.

இன்று அவ்வாறான சூழ்நிலைகள் கிடையாது.இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் இன்று பாத யாத்திரை செல்ல அனுமதியில்லை என்பது நகைப்பிற்குரியது.

பாத யாத்திரையை தடுத்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தினர் மேம்பாட்டு நிகழ்வு நடைபெறவிருந்த காரணத்தினால் முரண்பாடுகள் மோதல்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது ஜனநாயகத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் இது அடக்குமுறையல்ல.

அந்தக் காலத்தில் இவ்வாறு நடக்கவில்லை. ரத்துபஸ்வலவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ரொசான் சானக்க என்ற இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கண்டியிலிருந்து கொழும்பு மட்டுமன்றி கதிர்காமம் வரையிலும் இன்று பாத யாத்திரை செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏழு நாட்களில் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, அரசாங்கத்திற்கும் மஹிந்த குடும்பத்தினருக்கும் இடையில் காணப்படும் கொடுக்கல் வாங்கல் என்னவென வெளிப்படுத்த வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமாக பார்க்கப்பட வேண்டும்.

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் முக்கியஸ்தர்கள் பலர் செய்ப்படுகின்றனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே, எதிர்வரும் நாட்களில் விளக்கமறியல் உத்தரவுக்கு பதிலாக, வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால் சிறந்த ஒன்றாக இருக்கும்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏழு நாட்களில் விடுவிக்கப்பட்டது கேள்விக்குரியதாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அரசாங்கத்திற்கும் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருக்கும் இடையில் காணப்படும் கொடுக்கல் வாங்கல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவசர தேவைகளுக்காக விஷேட அம்சங்கள் கொண்ட அம்பியூலன்ஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வொன்று இன்று காலி முகத்திடலில் இடம்பெற்றது.

இந்தியாவின் அன்பளிப்பின் மூலம் 80 அம்பியூலன்ஸ் வண்டிகள் இன்று கையளிக்கப்பட்டன. அவசரதேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள இந்த வண்டிகளில் முதலுதவிக்கான அனைத்து வசதிகளும் காணப்படுகின்றமை விஷேட அம்சமாகும்.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவையானது 1990 என்ற அவசர சேவை இலக்கத்தின் மூலம் 24 மணித்தியாலமும் சேவையை வழங்குவதற்கு செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கு இந்தியாவின் மூலம் பயிற்றுவிக்கப்பட்ட விஷேட நடத்துனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஷேட உரையொன்று காணொளி மூலமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பேரை கைது செய்து உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

கவர்ஸ் கோப்ரேஷன் நிறுவனத்தின் தலைவர் எனக் கூறப்படும் நாமல் ராஜபக்ச, ஹெலோ கோப் நிறுவனத்தின் 10 லட்சத்து 125 ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்துள்ளார்.

இந்த பங்குகளை கொள்வனவு செய்ய பணம் கிடைத்த விதம் சந்தேகத்திற்குரியது என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர்.

நாமல் ராஜபக்ச, பணச் சலவை சட்டத்தின் கீழ் குற்றம் செய்திருப்பதால், அவர் மற்றும் ஏனைய 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனையும் கிடைத்துள்ளதாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.

இதனடிப்படையில், நாமல் ராஜபக்ச உட்பட ஆறு பேரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கில் இரண்டாது குற்றவாளியான இந்திக பிரபாத் கருணாதீர என்பவர் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

இவரை கைது செய்ய சிகப்பு அறிக்கை பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காததன் மூலம் தனது மற்றும் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி பெப்ரல் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

உடனடியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசஸர் முஸ்தபா, தேர்தல் ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழு ஆகிய தரப்பினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நுவரெலியா திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த விபத்து நேற்று இரவு 11.30 மணியளவில், அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொட்டகலை, தலவாக்கலை பகுதியிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில், மோட்டர் சைக்கிளில் சென்ற இருவருமே பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெப் ரக வாகன சாரதியை கைது செய்து விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

கண்டியில் ஆரம்பமாகவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரைப் போராட்டத்தின் பின்னர் கட்சியில் மாற்றங்கள் செய்யப்படும்.

சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கட்சியை பிளவடையச் செய்யக் கூடாது என்ற காரணத்தினால் ஜனாதிபதி நீண்ட காலமாக பொறுமை காத்து வந்தார். எனினும் சில சந்தர்ப்பங்களில் சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியிருக்கின்றது.

அந்த அடிப்படையில் பாத யாத்திரையில் பங்கேற்போர் தொடர்பில் கட்சியில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016 00:00

மதுபானசாலைகளுக்கு 10 நாட்கள் பூட்டு!!!!!!

Written by

கண்டி மற்றும் கண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளை 10 நாட்களுக்கு மூடவுள்ளதாக கலால் தீர்வை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி தலதா மாளிகையில் இடம்பெறவிருக்கும் பெரஹராவை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 8ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் திகதி வரையிலேயே மதுபானசாலைகள் மூடப்பட உள்ளன.

இந்த காலக்கட்டத்தின் போது சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொள்வனவு செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலால் தீர்வை திணைக்களம் அறிவித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து ஓராண்டு பூர்த்தியடைய இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள இந்த வேளையில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் இரண்டுக்குமே சோதனைக் காலம் வந்திருக்கிறது.

நெருக்கடி நிலைமைகளை சமாளிப்பதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் மென்மையான போக்கும், கருத்துச் சுதந்திரத்துக்குக் கொடுக்கப்படும் அதீத சுதந்திரமும் மக்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக கிளர்ந்தெழ வசதியான களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது எனலாம்.

இதில் தற்போது சூடிபிடித்துள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வற்) விவகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் தேவையில்லாத நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.

மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை நியமிக்கும் விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனையே தொடர்ந்தும் அந்தப் பதவியில் வைத்திருக்க விரும்பினார். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ வேறு ஒருவரைத்தான் நியமிக்கவேண்டுமென விரும்பினார்.

இந்த இழுபறியையடுத்து புதிய ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டார். அதியுயர் கல்வித் தகுதி உள்ளவராகவும், நிதி சார்ந்த வட்டாரங்களில் கௌரவ அந்தஸ்தில் உள்ள ஒருவராகவும் இந்திரஜித் குமாரசுவாமி பார்க்கப்படுகிறார். எனவே, இநதப் பதவியில் அவர் பாரபட்சமின்றி பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

'ஒரு பிரச்சினை முடிந்து விட்டது' என அரசாங்கம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த வேளையில், வேறொரு வீக்கமாக முளைத்திருக்கிறது ‘வற்’ அதிகரிப்பு. இந்தப் பிரச்சினையை அரசாங்கம் மிக இலேசாக தவிர்த்திருக்கலாம்.

ஆனால் அரசாங்கத்தின் பலவீனத்தால் மஹிந்த ஆதரவு அணி இதைப் பெரிதாக நீட்டி முழங்கி மக்கள் தற்போது அனுபவிக்கும் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு மத்தியில் ‘வற்’ ஒரு புதிய வரி என்ற தோற்றப்பாட்டை உருவாக்க பிரசாரம் மேற்கொண்டு வருகின்றது.

இதனால் ‘வற்’ என்ற ஒரு புதிய வரியை அரசாங்கம் விதித்திருப்பதனால்தான் பாவனைப் பொருட்களின் விலைகள் ஏறி விட்டன என மக்கள் இப்போது நினைக்கிறார்கள். ஆனால், இந்த ‘வற்’ வரி கடந்த அரசாங்க காலத்திலும் இருந்தது. அப்போது அது குறைந்த வீதத்தில் விதிக்கப்பட்டிருந்தது.

பதினான்கு சதவீதமாக இருந்த ‘வற்’ வரி தற்போது பதினைந்து வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மை. இந்த உண்மையை அரசாங்கம் மக்களுக்கு எடுத்துக் கூறத் தவறியதால்தான் மக்களின் எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் இந்த வரி குறித்துப் பேசுகிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர் இது பழைய வரிதான் என இதுவரை கூறியிருக்கிறார்கள் என்பது கேள்விக்குரிய விடயம்.இதுபோதாதென்று அரசாங்கம் தகுந்த சட்டமியற்றலின்றி அதிகரிக்கப்பட்ட ‘வற்’ வரியை மே 2ம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்த தீர்மானித்தமை அது செய்த மற்றொரு பிழை.

இதனால் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுடன் மற்றும் ஐவர் நீதிமன்றம் சென்றனர். இவர்களது வழக்கை ஆராய்ந்த உச்சநீதிமன்றம் ‘வற்’ வரி மட்டுமல்ல தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியையும் மே 2ம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக இடைக்காலத் தடை ஒன்றை விதித்தது.

இதை அடுத்து விஷயம் விபரீதமாகிறது என்பதைப் புரிந்து கொண்ட பிரதமர் அலுவலகம் ‘வற்’ மற்றும் ‘தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி’ என்ற இந்த இரண்டு வரிகளிலும் செய்யப்பட்ட திருத்தங்கள் விரைவில் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டது.

இது இவ்விதமிருக்க, அரசாங்கத்திலுள்ள ஸ்ரீல. சு. க உறுப்பினர்கள் அதிகரிக்கப்பட்ட ‘வற்’ வரி நடைமுறைப்படுத்தப்பட்டால் அது கட்சியின் செல்வாக்கை சரியச் செய்து விடும் என எச்சரித்திருக்கின்றனர்.

உள்ளூராட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமது தேர்தல் தொகுதிகளில் மஹிந்த ஆதரவு அணி செய்து வரும் பிரசாரத்தில் மக்கள் ‘வற்’ வரிக்கு எதிராக கொதித்தெழுந்துள்ளதால் ஜனாதிபதி இதில் தலையிட்டு நிலைமையின் பாரதூரமான தன்மையை சற்றுத் தணித்துள்ளார்.

இதன்படி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் மூலம் 16 அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அதிகரிக்கப்பட்ட ‘வற்’ வரி நடைமுறைப்படுத்தப்படும் போது மக்கள் மீது விழும் மேலதிக சுமையைக் குறைக்க எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பற்றி ஆராய ஒரு குழுவையும் ஸ்ரீல.சு.க மத்திய குழு நியமித்திருக்கிறது.

புதிய ‘வற்’ வரிகள் 2017 மார்ச் வரை நடைமுறைப்படுத்தப்படுவதை தடை செய்வதையே அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. அரசியலை மையமாகக் கொண்ட இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்கனவே காலியான திறைசேரிக்கு எதிர்பார்க்கும் வருவாய் கிடைக்காமல் போகும்.

புதிய ‘வற்’ வரி மீது ஐ. தே. கவும், ஸ்ரீல.சு.கவும் வெவ்வேறான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் ஸ்ரீல.சு.கவின் மத்திய குழு புதிய வரிகள் அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தேர்தலில் சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச அணிகளுக்கிடையில் வாக்குச் சிதறல்கள் இடம்பெற வழிவகுத்து விடும் என்ற அச்சத்தில் இருக்கிறது.

அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் 2015 பொதுத் தேர்தலில் 51 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறிசேன அணியைத் தோற்கடிக்கமுடியும் என்ற நம்பிக்கையில் ராஜபக்ச அணி இப்போது மிதக்கிறது.

இருப்பினும் பாரம்பரிய வாக்களிப்பு முறையும் ஸ்ரீல.சு.க மற்றும் ஐ.தே.க வாக்காளர் பலமும் இப்போது இருப்பது போலவே தொடர்ந்தும் இருந்தால் ஸ்ரீல.சு.கவில் ஏற்படக் கூடிய பிளவு ஐ.தே.கவுக்கு வெற்றியையே கொண்டு வரும்.

ஐ. தே.க பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும், ‘வற்’ போன்ற விவகாரங்களால் சிறிசேன அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழப்பமடைந்திருப்பது இதனால்தான்.

இந்த ‘வற்’ அதிகரிப்புக்கு எதிராக மஹிந்த அணி பொதுமக்களின் ஆதரவைத் திரட்டியதற்கு முன்னர் இந்த வரி ஏற்கனவே கடந்த அரசாங்கத்திலும் இருந்ததுதான்.

நாம் அதை நான்கு சதவீதத்தால் மட்டுமே உயர்த்துகிறோம் என அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்தாததனால் இப்போது அதற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பலைக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.

‘வற்’ வரி விதிக்கப்பட்டிருந்தால் ஐ. தே. க. வும் செல்வாக்கை இழந்திருக்கும்.ஒருவகையில் ‘வற்’ வரியை நடைமுறைப்படுத்துவதில் ஸ்ரீல.சு.க பின்வாங்குவது ஐ.தே.கவுக்கு ஒருமறைமுகமான வெற்றி என்றே கூற வேண்டும்.

எது எப்படி இருந்தாலும், அரசாங்கம் தனது கஜானாவை, நிரப்புவதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்து வரும் இந்த நேரம், இந்த ‘வற்’ விவகாரம் அரசாங்கத்துக்கு தொடரும் தலைவலியாகவே இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

பக்கம் 6 / 23
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…