JoomlaLock.com All4Share.net

Background Video

இலங்கை

இலங்கை (311)

சேருநுவர பகுதியில், கைகலப்புச் சம்பவத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிராமசேவையாளரை, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், நேற்று உத்தரவிட்டார்.

அத்துடன், ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி குறித்த கிராமசேவையாளரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

காணித் தகராறு காரணமாக இரண்டு சிறுபான்மைக் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை (16) இடம்பெற்ற கைகலப்புச் சம்பவத்தில், இருதரப்பிலும் அறுவர் காயங்களுக்குள்ளான நிலையில் மூதூர் சேருநுவர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து சேருநுவர பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இந்த கைகலப்பு சம்பவம் இடம்பெறுவதற்கு உப்பூறல் கிராம சேவையாளரே காரணமாக இருந்ததாக சிறுபாண்மை குழுவொன்று, சேருநுவர பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.

இதன் அடிப்படையில், குறித்த கிராமசேவையாளரை, கடந்த வெள்ளிக்கிழமை (22) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சேருநுவர பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கமைய, அவர் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள் கேலி செய்தமையால் மனைமுடைந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த மாணவி தூக்கிட்டு பத்து நாட்கள் கடந்த நிலையில், இவர் நேற்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்துகொண்டுள்ள மாணவியின் தந்தை சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவி படிப்பிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

எனினும், தந்தையின் செயலை சுட்டிக்காட்டி பாடசாலை நண்பர் நண்பிகள் அடிக்கடி இம்மாணவியை கேலி செய்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மனமுடைந்த குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய குறித்த மாணவி "இனிமேல் பாடசாலை செல்ல போவதில்லை எனவும் நண்பர்கள் தன்னை கேலி செய்வதாகவும்" தனது தாயிடம் முறையிட்டுள்ளார்.

இதன் பின்னர் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மீட்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த மாணவி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.a

கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாத யாத்திரையில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட உள்ள பாத யாத்திரைக்கு எனது ஒத்துழைப்பு கிடையாது.

கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையில் பங்கேற்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் நாம் அதில் பங்கேற்கப் போவதில்லை.

பாத யாத்திரை நல்ல விடயமா தீமையான விடயமா என்பதனை என்னால் கூற முடியாது.

எனினும் நாம் பாத யாத்திரையில் பங்கேற்கப் போவதில்லை என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சிறைக்கு செல்லும் போது அவர்களின் கைகளில் பிரித் நூல் கட்டும் பௌத்த பிக்குகள் இன்று இலங்கையில் இருக்கின்றார்கள் என தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் வகாமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

அரச சொத்துக்களை கொள்ளையிட்டு கைவிலங்கு இடப்பட்டு சிறைக்குச் செல்லும் அரசியல்வாதிகளின் கைகளில் பிரித் நூல் கட்டும் பௌத்த பிக்குகள் இருக்கின்றார்கள்.

பிக்குகள் சமூகம் துண்டு துண்டுகளாக பிளவடைந்துள்ளது.

எனவே நாட்டின் புதிய சமூகமொன்றை கட்டியெழுப்ப முன்னிலை வாகிக்க வேண்டியேற்பட்டுள்ளது.இன்று பண்புகள் சீரழிந்துள்ளன, சில பௌத்த பிக்குகள் தமது பிக்குதனத்தையும் பணத்திற்கு விற்பனை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

25000 ரூபா வழங்கினால் பௌத்த உபதேசம் சொற்பொழிவு வழங்கும் பௌத்த பிக்குகள் இருக்கின்றார்கள். இல்லையா?

அரச சொத்துக்களை கொள்ளையிட்டு சிறைக்குச் செல்லும் அரசியல்வாதியின் கைகளில் பிரித் நூலைக் கட்டி அவர்களை வீரர்களாக்குவது பௌத்த பிக்குவின் கடமையல்ல.

அரசியல்வாதிகள் காலத்திற்கு காலம் பௌத்த பிக்குகளை ஏமாற்றி வருகின்றனர்.

எமது தலைவர்கள் எங்களை பிழிந்து எடுத்து, வரி அறவீடு செய்து அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களையும் மாளிகைகளையும் வழங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் சொத்துக்கள் கொள்ளையிடப்படுகின்றன.பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு சொந்த வீடுகள் வாழ்நாள் முழுவதிலும் கிடைக்காத நிலைமை காணப்படுகின்றது.

சிறுநீரக நோய்களினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், நாட்டின் சமூக முறைமையை முற்று முழுதாக மாற்றி அமைக்க வேண்டும் என வெகாமுல்லே உதித தேரர் தெரிவித்துள்ளார்.

மிகச் சிறந்த அமெரிக்க அதிபராக ஹிலாரி கிளிண்டன் விளங்குவார், அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் ஒரு போட்டியே கிடையாது, என, ஜனநாயகக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்ட பெர்னி சான்டரஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும், நவம்பர், 8ல், நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு நடந்து வருகிறது.

கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நடந்த, 'பிரைமரி' மற்றும் 'காகஸ்' போட்டியில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடன் போட்டியிட்டார் சான்டரஸ்.

போட்டியில் இருந்து, அவர் விலகியதால், அதிபர் வேட்பாளராக ஹிலாரி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் மாநாட்டில், சான்டரஸ் பேசியதாவது:

தன்னுடைய சீரிய சிந்தனைகளாலும், சிறந்த தலைமைப் பண்புகளாலும், அமெரிக்காவின் மிகச் சிறந்த அதிபராக ஹிலாரி விளங்குவார்.

அதிபர் தேர்தலில் டிரம்ப், ஒரு பொருட்டே இல்லை. போட்டி இல்லாததால், ஹிலாரி தான் மக்களின் ஒரே தேர்வாக இருப்பார்.

அவர் மிகச் சிறந்த அதிபராக, அமெரிக்காவை வழிநடத்துவார். இவ்வாறு அவர் பேசினார்.

குற்றப் புலனாய்வுப் பொலிஸ்பிரிவின் பணிப்பாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவைப் படுகொலை செய்வதற்கான திட்டமொன்று குறித்து புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த காலத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய படுகொலைச் சம்பவங்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமான புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பல்வேறு அழுத்தங்களின் மத்தியிலும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி வருகின்றார்.

இதன் காரணமாக பாதிப்புக்குள்ளாகி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் பாதாள உலகக்கும்பல் பிரமுகர்கள் சிலர் ஒன்றிணைந்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவைப் படுகொலை செய்வதற்குத் திட்டம் தீட்டியுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

புலனாய்வுப் பிரிவினருக்கு இத்தகவல் கிடைத்தவுடன் ஷானி அபேசேகர எச்சரிக்கப்பட்டு, அவரது பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு மூன்று விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

வர்த்தகர் முஹம்மத் சியாம் படுகொலை, வசீம் தாஜுதீன் படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் போன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் குறித்து ஷானி அபேசேகரவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்வேறு அழுத்தங்களின் மத்தியிலும் இச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல வர்த்தகர் முஹம்மத் சியாம் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

வசீம் தாஜுதீன் படுகொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கிலும் ராணுவப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய அதிகாரிகளான கேர்ணல்கள் உள்ளிட்ட ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை ஷானி அபேசேகர தலைமையிலான குழுவினர் நேரடியாக களத்தில் இறங்கி கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்தவுள்ள பாதயாத்திரைக்கு தான் அனுமதியளித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நேற்று முன்தினம் ஜனாதிபதி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.

இக்கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன ரணதுங்க, தமது பாதயாத்திரை குறித்து ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்துக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியின் அங்கீகாரமும், ஆதரவும் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

எனினும் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

தான் அவ்வாறு எந்தவொரு அங்கீகாரமோ, ஆதரவோ வெளிப்படுத்தவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாதயாத்திரைக்கு தான் ஆதரவளித்துள்ளமை குறித்து பிரசன்ன ரணதுங்க வெளியிட்டுள்ள கருத்துக்கள் தவறானவை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் எந்தவொரு கட்டத்திலும் கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைக்கும் தனது ஆதரவு கிடைக்கப் போவதில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் தொடர்ந்தும் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பது குறித்து பொலிசார் எதுவும் செய்யமுடியாது என்று பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மோதலை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் தொடக்கம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.

எனினும் பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்கள் இதுவரை தமது வகுப்புகளுக்கு சமூகமளிக்கவில்லை.இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொலிஸ் மா அதிபர்,

சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு சமூகமளிக்காமல் இருப்பது குறித்து பொலிசார் எதுவும் செய்ய முடியாது.

சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்று வட்டாரத்தில் சிவில் உடையில் ஏராளம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் சீருடையிலும் பொலிசார் கடமையில் உள்ளனர். இவற்றுக்கு மேலதிகமாக புலனாய்வுப் பிரிவினரும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவுக்கும் பின்னர் சிங்கள மாணவர்கள் வருகை தராமல் இருப்பது அவர்களின் சுயதீர்மானமாகும். அதில் யாரும் எதுவும் செய்ய முடியாது.

ஒருசில ஊடகங்களில் குறிப்பிடுவது போன்று யாழ்.பல்கலைக்கழக சூழல் கொந்தளிப்பானதாக இல்லை.

வழமை போன்று அமைதியாகவே காணப்படுகின்றது என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

வற் வரி திருத்தம் குறித்து 11ம் திகதி விவாதம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வற் வரி திருத்தம் குறித்த இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி விவாதம் செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11.30 முதல் மாலை 6.30 வரையில் விவாதம் நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தேச சட்டமூலம் இதற்கு முன்னர் ஓர் நாளில் விவாதம் செய்யப்படவிருந்தது.

நாடாளுமன்றில் இந்த உத்தேச சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர், வற் மீளவும் அமுல்படுத்தப்பட உள்ளது.

வற் வரி உயர்விற்கு உச்ச நீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு லோட்டஸ் வீதி இன்று இரண்டரை மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணி தொடக்கம் 9.30 மணிவரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் ஆரம்பமாகும் சைக்கிள் சவாரியினால் இவ்வாறு மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோட்டஸ் வீதியில் ஆரம்பமாகும் சைக்கிள் சவாரியானது பரோன் ஜயதிலக மாவத்தை, செத்தம் மாவத்தை, செரமிக் சந்தி, என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், டுப்ளிகேசன் வீதி, சரணங்கர மாவத்த, காலி வீதியுடாக குறித்த சைக்கிள் சவாரியானது மாத்தறை வரை பயணிக்கும் என்றும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

பக்கம் 7 / 23
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…