JoomlaLock.com All4Share.net

Background Video

இலங்கை

இலங்கை (318)

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் தொடர்ந்தும் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பது குறித்து பொலிசார் எதுவும் செய்யமுடியாது என்று பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மோதலை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் தொடக்கம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.

எனினும் பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்கள் இதுவரை தமது வகுப்புகளுக்கு சமூகமளிக்கவில்லை.இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பொலிஸ் மா அதிபர்,

சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு சமூகமளிக்காமல் இருப்பது குறித்து பொலிசார் எதுவும் செய்ய முடியாது.

சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு பல்கலைக்கழக சுற்று வட்டாரத்தில் சிவில் உடையில் ஏராளம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் சீருடையிலும் பொலிசார் கடமையில் உள்ளனர். இவற்றுக்கு மேலதிகமாக புலனாய்வுப் பிரிவினரும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவுக்கும் பின்னர் சிங்கள மாணவர்கள் வருகை தராமல் இருப்பது அவர்களின் சுயதீர்மானமாகும். அதில் யாரும் எதுவும் செய்ய முடியாது.

ஒருசில ஊடகங்களில் குறிப்பிடுவது போன்று யாழ்.பல்கலைக்கழக சூழல் கொந்தளிப்பானதாக இல்லை.

வழமை போன்று அமைதியாகவே காணப்படுகின்றது என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

வற் வரி திருத்தம் குறித்து 11ம் திகதி விவாதம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வற் வரி திருத்தம் குறித்த இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி விவாதம் செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11.30 முதல் மாலை 6.30 வரையில் விவாதம் நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தேச சட்டமூலம் இதற்கு முன்னர் ஓர் நாளில் விவாதம் செய்யப்படவிருந்தது.

நாடாளுமன்றில் இந்த உத்தேச சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர், வற் மீளவும் அமுல்படுத்தப்பட உள்ளது.

வற் வரி உயர்விற்கு உச்ச நீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு லோட்டஸ் வீதி இன்று இரண்டரை மணித்தியாலங்கள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 7 மணி தொடக்கம் 9.30 மணிவரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் ஆரம்பமாகும் சைக்கிள் சவாரியினால் இவ்வாறு மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோட்டஸ் வீதியில் ஆரம்பமாகும் சைக்கிள் சவாரியானது பரோன் ஜயதிலக மாவத்தை, செத்தம் மாவத்தை, செரமிக் சந்தி, என்.எஸ்.ஏ சுற்றுவட்டம், டுப்ளிகேசன் வீதி, சரணங்கர மாவத்த, காலி வீதியுடாக குறித்த சைக்கிள் சவாரியானது மாத்தறை வரை பயணிக்கும் என்றும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

ஐ.தே.க அரசாங்கத்துக்கு எதிராக முன்பு பாதயாத்திரை சென்ற மஹிந்த ராஜபக்சவுக்கு அந்த நினைவுகள் இன்றும் பசுமை மாறாமல் அப்படியே இருக்கின்றன.

இதுதான் அவர் மீண்டும் ஒரு பாதயாத்திரையை மேற்கொள்ள அவருக்குத் தூண்டுதல் கொடுத்திருக்கிறது எனலாம். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம். இந்தத் தடவை ஐ.தே.கவுடன் ஸ்ரீ.ல.சு.கவும் இணைந்து ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கின்றன.

மக்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுடைய கஷ்டங்களை சற்றேனும் கண்டு கொள்ளாது ஸ்ரீ.ல.சு.கவின் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் மஹிந்த தற்போது ‘வற்’ வரி அதிகரிப்பை கையிலெடுத்து கண்டியிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஜுலை 28ம் திகதி (நாளை) தொடங்கும் பாதயாத்திரை ஆகஸ்ட் 1ம் திகதி கொழும்பை வந்தடையும். கண்டி தலதா மாளிகைக்கு எதிர்ப்புறமிருந்து சங்கசபாவின் ஆசியுடன் இந்த பாதயாத்திரை தொடங்க இருக்கிறது.

பதவிப் போட்டிக்கான இந்த யுக்தியில் மதவாதம் சிறிதளதே சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் மழுங்கிப் போன அரசியல் கலாசாரம் தான் இதில் பிரதான பங்காளராக முன்னிற்கிறது.

பாதயாத்திரைக்கு ஒரு தினமே இருக்கின்ற நிலையில் அதை ஏற்பாடு செய்துள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொழும்பு வைத்தியசாலையில் தடுப்புக் காவல் ஓய்வில் சிந்தனை செய்து கொண்டிருக்கிறார்.

‘வற்’வரிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும், பாதயாத்திரையும் மஹிந்த அணிக்கான பிரசாரமாகப் பயன்பட்டாலும், அரசாங்கத்தில் இரண்டு பிரதான கூட்டணிக் கட்சிகளாக இருக்கின்ற ஐ.தே.கவும் ஸ்ரீ.ல.சு.கவும், கொள்கை விடயங்களில் அதிகளவு புரிந்துணர்வு ஒன்றை எட்ட வேண்டியதன் தேவையை அது கோடிட்டுக் காட்டுகிறது.

‘வற்’ சம்பந்தமான பேச்சுக்கள் தொடங்கியபோதும் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதும், விலைகளை அதிகரிக்கும் அதிகாரிகளை தாம் நீக்கி விடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

உண்மை என்னவென்றால் இந்த ‘வற்’ வரியானது அரசாங்க நிதிக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது.

அத்துடன் நாட்டின் நெருக்கடியான நிதி நிலைமையைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கம் ஒரு பகுதி கடன் பெற்ற போது ‘வற்’ வரி அறவிட வேண்டியதன் தேவை அதிகரித்தது.

இங்கு முக்கியமான பிரச்சினை என்னவென்றால் ‘வற்’ வரி மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான விவகாரங்களில் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையில் போதுமான அளவு தொடர்பாடல் இன்மைதான்.

‘வற்’ வரி இலங்கை மக்களுக்கு புதியதோர் விடயமல்ல என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த அரசாங்கம் பல்வேறு பாவனையாளர் பொருட்கள் மீது 11 சதவீத ‘வற்’ வரியை சுமத்தியிருந்தது.

ஆனால் பல பொருட்கள் மீதான நான்கு சதவீத ‘வற்’ வரி அதிகரிப்பு இதுவரை ‘வற்’ வரி விதிக்கப்படாத சேவைகள் மீதான அதன் தாக்கம் என்பன பொதுமக்களுக்கு தெளிவாக விளக்கிக் கூறப்படவில்லை.

இதில் அரசாங்கத்தின் நிதி, பொருளாதார அபிவிருத்தி, உணவு, மருத்துவ சேவைகள் தொடர்புத் துறைக்குப் பொறுப்பான பிரிவுகள் சரியான செய்தியை திருப்திகரமான அளவுக்கு மக்களிடம் எடுத்துச் செல்லவில்லை.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குப் பலத்தால் ‘வற்’ வரி அதிகரிப்புக்கு இலகுவாக ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அது பற்றிய தொடர்பாடலின் அவசியம் அலட்சியம் செய்யப்பட்டது.

இந்த நிலைமையில்தான் கூட்டு எதிரணியின் விமல் வீரவன்ச சட்ட அடிப்படையைக் காரணம் காட்டி ‘வற்’ வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்துவதை தடுக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ‘வற்’ வரியும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியும் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் வரையிலோ அல்லது நீதிமன்றம் அது பற்றி முடிவு செய்யும் வரையிலோ அந்த வரிகள் அறவிடப்படுவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதித்தது.

இந்த இடைக்காலத் தடை உத்தரவு அரசாங்கத்துக்கு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பாகவே வெளிவந்தது.

சம்பந்தப்பட்ட வரி தொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் ஜுலை 20ம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பிரதமர் உடனே அறிவித்து அந்தப் பிரச்சினையின் தீவிரத் தன்மையை சற்றுத் தணித்தார்.

ஆனால் அத்துடன் பிரச்சினை ஓய்ந்து விடவில்லை.அடுத்ததாக, ‘வற்’ வரி சட்டயாப்புக்கு முரணானது என்றும் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பொதுசன வாக்கெடுப்பு ஒன்று நடத்தவேண்டுமெனவும் மற்றுமோர் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பிலான தனது கருத்தை நீதிமன்றம் விரைவில் தெரிவிக்க இருக்கிறது.

எனவே சற்றுக் காத்திருக்க வேண்டும்.பொதுமக்களை அரசாங்கத்துக்கும் ‘வற்’ வரிக்கும் எதிராக தூண்டுவோர் வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டங்களால் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.

தமது கடைகளை இழுத்து மூடும் பெரும்பாலான வர்த்தகர்கள் ‘வற்’ வரி கட்டுபவர்கள் அல்ல என்பதல்ல இன்றைய பிரச்சினை. நடைபாதை வியாபாரிகள் கூட இதற்குள் இழுத்து விடப்பட்டிருப்பது தான் ராஜபக்ச ஆதரவு அணியின் வெற்றிகரமான சாணக்கியமாக கருதப்படுகிறது.

தற்போது அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ.ல.சு.கவினர் இரட்டை நாக்குடன் பேசுகிறார்கள். அமைச்சரவையின் ஒட்டுமொத்த பொறுப்பு அலட்சியப்படுத்தப்பட்டு கட்சிக்குள் மேலும் பிளவுகள் ஏற்பட வழிகள் திறந்து விடப்படுகின்றன.

அவர்கள் தற்போதைய அரச முறைமையைப் பற்றியல்ல, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பற்றியே கவனம் செலுத்துகிறார்கள்.

முன்பை விட பொதுமக்களுடன் அதிக தொடர்பாடல்களை இப்போது தொடங்க வேண்டும்.

கூட்டணி அரசாங்கத்தின் கொள்கை வெற்றிபெற வேண்டுமென்றால் அரசமைப்பு முறைமையில் ஒழுக்கம் கொண்டு வரப்படுவது கட்டாயம்.

காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஷங்ரீலா ஹோட்டல், போர் சிட்டி திட்டத்தின் மூலம் மறைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடல் காட்சியைப் பார்க்கக் கூடிய வகையில் ஹொட்டல் நிர்மாணிக்கப்படுவதாகவும், போர்ட் சிட்டி திட்டத்தின் ஊடாக கடலை ஹோட்டலில் இருந்து பார்க்க முடியாத நிலைமை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அரசாங்கம் மீறியுள்ளதாகவும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் ஷங்ரீலா ஹோட்டல் கோரியுள்ளது.

முன்னால் கடல் தென்படுவதனை கருத்திற்கொண்டே ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஹோட்டலின் முன்னால் பாரிய நகரமொன்று நிர்மாணிக்கப்படுவதனால், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க முடியாது போகும் என தெரிவித்துள்ளது.

இதனால் ஹோட்டலுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, நட்டஈடு வழங்கப்பட முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அபிவிருத்தித் திட்டங்களின் போது சில சில மாற்றங்கள் ஏற்படும் எனவும் இது குறித்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

300 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 அறைகளைக் கொண்ட பாரிய நட்சத்திர ஹோட்டல் ஒன்றாக ஷங்ரீலா நிர்மாணிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்படவுள்ள பாதயாத்திரைக்கு எதிராக 15 இலட்சம் தோட்டத் தொழிலாளர்களை திரட்டி வீதியில் இறங்க தயார் என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த பாதயாத்திரையானது இனவாதத்தை தூண்டும் வகையில் அமையுமானால் எனது மக்கள் அதற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் மக்களுடன் வீதிக்கு இறங்கினால் தம்முடன் முஸ்லிம் மக்களையும் இணைத்து கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆட்சி பலத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாதத்தை தூண்டுபவர்களை மக்கள் வெறுப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான பிரதமரின் கருத்துக்கு கூட்டு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை இலக்கு வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் வெளியிட்ட கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில்…

ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை இலக்கு வைத்து பிரதமர் வெளியிட்ட கருத்துக்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பிரதமரின் இந்த நடவடிக்கை பிரஜைகளின் புனிதமான உரிமைகளை மீறும் செயலாகும்.

செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியரை பதவி விலகுமாறு பிரதமர் கோரியுள்ளதுடன், அவ்வாறு பதவி விலகாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளார்.

கடந்த 18 மாத ஆட்சிக் காலத்தில் பல தடவைகள் பிரதமர் ஊடகங்களை எச்சரித்துள்ளார்.

நல்லாட்சி கொள்கைப் பற்றி பிரச்சாரம் செய்யும் இந்த அரசியல்வாதிகள் பொறுப்புணர்ச்சியற்ற வகையில் இவ்வாறு ஊடகங்களை மிரட்டுவார்கள் என ஊடகவியலாளர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய நேற்றைய தினம் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததாகவும், அதனை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

எனினும் தாம் பதவி விலக எடுத்த தீர்மானம் குறித்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'தான் தன்னுடைய பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததாகவும் ஆனால், ஜனாதிபதி அதனை ஏற்கவில்லை என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இதுதொடர்பில் தான் ஜனாதிபதி, பிரதமர், ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, ஊடகபிரதி அமைச்சர் கரு பரணவிதாரண ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும், இதன்போது தற்போதைய நிலை தொடர்பில் தீவிரமாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கலந்துரையாடலின் பின்னர் தனது பதவி விலகள் முடிவினை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ள பணிப்பாளர் தன்னுடைய பதவியை மேலும் முன்னெடுக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிதி மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொகமட் முஸாமில் இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.

அரச நிதிகளை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் விசேட விசாரணை பிரிவினரால் கடந்த மாதம் 20 ஆம் திகதி முஸாமில் கைது செய்யப்பட்டார்.

குறித்த பணத்தை அவரது மனைவியின் கணக்கில் வைப்பிலிட்ட காரணத்திற்காகவே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவருக்காக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவும் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பலருக்கு புதிய பதவிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர்களான திஸ்ஸ கரலியத்த, பியசேன கமகே, ஹேமால் குணசேகர, லலித் திஸாநாயக்க போன்றோருக்கே புதிய பதவிகள் வழங்கப்படவுள்ளன.

தற்பொழுது பதவியிலுள்ள ஆளுநர்கள் பலர் நீக்கப்பட்டு பின்னர், இடைவெளியாகும் இடத்துக்கே இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

பக்கம் 8 / 23
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…